Published:Updated:

ராமேஸ்வரம்: `பயன்பாடு காரணமாகவே தேய்மானம்; முறைகேடு இல்லை!’ - கோயில் நிர்வாகம்

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில் ( உ.பாண்டி )

`ராமேஸ்வரம் கோயில் நகைகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெற்றதாக மறுமதிப்பீட்டு அறிக்கையிலோ, கோயில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிலோ கூறப்படவில்லை’ - கோயில் நிர்வாகம்.

ராமேஸ்வரம் கோயிலுக்குச் சொந்தமான நகைகளில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை எனவும், தேய்மானத்தின் காரணமாகவே எடை குறைவு ஏற்பட்டிருக்கிறது எனவும் கோயில் இணை ஆணையர் விளக்கமளித்திருக்கிறார்.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்
உ.பாண்டி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமாக விலைமதிப்பற்ற தங்கம், வைரம், முத்து,வெள்ளியிலான நகைகள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் சில நகைகள் காணாமல்போனதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நகைகளை ஆய்வு செய்ய மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளில் எடைக் குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த எடை குறைவுக்கான தொகையை வசூலிப்பது தொடர்பாக கோயில் ஊழியர்கள், குருக்கள்களுக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

சுவாமி - அம்பாள்
சுவாமி - அம்பாள்
உ.பாண்டி

இது குறித்த செய்தி ஏற்படுத்திய பரபரப்பால், கோயில் நகைகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும், 40 ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட நகை எடை குறைவுக்கு, தாங்கள் எப்படிப் பொறுப்பேற்பது என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் கல்யாணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திருக்கோயிலின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் கடந்த 1978-ம் ஆண்டு மறு மதிப்பீடு செய்யப்பட்டன. அதன் பிறகு கடந்த ஆண்டு சிவகங்கை துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்ப்பு அலுவலரால் மறுமதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. அதில், பயன்பாட்டில் இருந்த 215 இனங்களில் தேய்மானம் காரணமாக எடைக் குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், இதில் 18 பொன் இனங்களில் ரூ.2,11,790 மதிப்பிலான 68 கிராம் எடைக் குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், 14 இனங்களில் சிறு அளவிலான பழுது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பயன்பாட்டிலிருந்த 344 இனங்களில் 42 இனங்களில் மட்டும் தேய்மானத்தின் காரணமாக 25.811 கிராம் எடைக் குறைவும், தங்க முலாம் பூசப்பட்டவற்றில் 43.700 கிராம் எடைக் குறைவும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு 12,29,010 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றைப் பொறுப்பில்வைத்திருந்த பணியாளர்களிடமிருந்து இந்த இழப்பீட்டுத் தொகையை வசூல் செய்யலாம் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் தங்கம், வெள்ளி இனங்களின் எண்ணிக்கை அனைத்தும் சரியாக இருக்கின்றன.

ராமநாதசுவாமி - பருவதவர்த்தினி அம்மன்.
ராமநாதசுவாமி - பருவதவர்த்தினி அம்மன்.
உ.பாண்டி

கடந்த மறுமதிப்பீட்டு ஆய்வுக்கும் தற்போதைய ஆய்வுக்கும் இடைப்பட்ட 40 ஆண்டுகள் இடைவெளி உள்ள நிலையில், 'தேய்மானத்தால் ஏற்பட்ட எடைக் குறைவுக்கான இழப்பீட்டை தங்களிடமிருந்து ஏன் வசூல் செய்யக் கூடாது?' எனக் கடந்த 40 ஆண்டுகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 13 பேர், விருப்ப ஓய்வு பெற்ற இருவர் மற்றும் தற்போது பணியிலுள்ள 32 பேர் என மொத்தம் 47 பணியாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை. ராமேஸ்வரம் கோயில் நகைகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெற்றதாக மறுமதிப்பீட்டு அறிக்கையிலோ, கோயில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிலோ கூறப்படவில்லை. எனவே பொதுமக்களோ, பக்தர்களோ கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து அச்சமோ, கவலையோகொள்ளத் தேவையில்லை'' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு