Published:Updated:

பீகார் எல்லையில் நேபாளப் பாதுகாப்புப் படை `திடீர்’ துப்பாக்கிச் சூடு! - என்ன நடந்தது?

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு ( ANI )

இந்தியா- நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலத்தின் சித்தாமர்ஹி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

நேபாள அரசு சமீபத்தில் வெளியிட்ட அந்நாட்டின் அதிகாரபூர்வ வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வரைபடத்தை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, `சீனாவையும் இத்தாலியையும் விட இந்தியாவில் பரவும் வைரஸ் மிகவும் ஆபத்தானது’ என்று பேசியதும் சர்ச்சைக்கு தூபம் போட்டது. நேபாளம் வெளியிட்டிருந்த வரைபடத்தில் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாள நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன. இந்தப்பகுதிகள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சேரும் பகுதிகள் என்று இந்தியா உரிமை கோருகிறது. இதனால், இரு நாடுகள் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு
ANI

இந்த நிலையில், இந்திய - நேபாள எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா - நேபாளம் இடையிலான 1,751 கி.மீ நீள எல்லைப் பகுதியில் சாஸ்திர சீமா பால் படைப்பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்ததை எஸ்.எஸ்.பி (Sashastra Seema Bal) பீகார் பகுதி டி.ஜி குமார் ராஜேஷ் சந்திரா உறுதி செய்திருக்கிறார். மேலும் இதுதொடர்பாக அவர் பேசுகையில், ``இன்று காலை 8.40 மணியளவில் இந்தியாவில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேபாளத்துக்குச் செல்ல முயன்றிருக்கிறார்கள். எல்லைப் பகுதியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய நேபாள பாதுகாப்புப் படையினர், அவர்களைத் திரும்பப்போகுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, நேபாள பாதுகாப்புப் படையினர் 15 முறை சுட்டிருக்கிறார்கள். இதில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். நேபாளப் பாதுகாப்புப் படையினர் சுட்ட 15 குண்டுகளில், வானத்தை நோக்கி 10 முறை சுட்டிருக்கிறார்கள். அதேபோல், நேபாளப் பாதுகாப்புப் படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் விடுதலை செய்யப்படும்பட்சத்தில் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கலாம் என்பதால், நேபாளப் பாதுகாப்புப் படையினருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நேபாள எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்திருக்கிறது. இந்திய எல்லைப்பகுதியில் அல்ல’’ என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக குமார் ராஜேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.

எஸ்.எஸ்.பி டி.ஜி குமார் ராஜேஷ் சந்திரா
எஸ்.எஸ்.பி டி.ஜி குமார் ராஜேஷ் சந்திரா
ANI

இதில், கொல்லப்பட்டவர் 22 வயதான விகேஷ் யாதவ் என்பதும் வயிற்றுப் பகுதியில் குண்டுபாய்ந்து அவர் உயிரிழந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதய் தாக்குர் மற்றும் உமேஷ் ராம் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் சிதாமர்ஹி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய எஸ்.எஸ்.பி-யின் பாட்னா படைப்பிரிவு ஐ.ஜி சஞ்சய் குமார், நேபாள எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் Armed Police Force (APF) மற்றும் அப்பகுதி மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அதிகாரிகள், குறிப்பிட்ட எல்லைப் பகுதியில் வேலி அமைக்கப்படவில்லை. இதனால், இருநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மற்ற பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று வருவது உண்டு. அந்தவகையில், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பரஸ்பரம் இருநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் உறவினர்கள் உண்டு. அப்படி லாகன் யாதவ் என்பவரின் மருமகள் நேபாளப் பகுதிக்குச் சென்றதை ஏபிஎப் படை வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். அவர் இந்தியாவிலிருந்து வந்த சிலருடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட ஏ.பி.எஃப் வீரர்கள்,

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு
ANI

உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் லாகன் யாதவ்வின் மருமகள் நேபாளத்தைச் சேர்ந்தவர். இதில் வாக்குவாதம் ஏற்படவே, லாகன் யாதவின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அப்பகுதியில் கூடியதாகத் தெரிகிறது. அவர்களை எச்சரிக்க ஏ.பி.எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தனர்.

`சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் ஆபத்தானது!’ - நேபாளப் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு

அப்பகுதியில் 75 முதல் 80 பேர் கூடியதாகவும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்தவர்கள் ஆயுதங்களை வெளியே எடுத்ததாகவும் ஏ.பி.எஃப் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்தே, தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் சம்பவம் இருநாடுகள் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்தியா - நேபாள எல்லையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை எஸ்.எஸ்.பி சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஜி குமார் ராஜேஷ் சந்திரா தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு