Published:Updated:

ஊட்டி: போலீஸ் ஸ்டேஷனில் டார்ச்சர்? - வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி

சீனிவாசன்
சீனிவாசன்

``ரூ.15,000 செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றனர். பைக்கையும் தர மறுக்கின்றனர். ரொம்ப மோசமாகத் திட்டினார்கள். நான், இனி உயிர் வாழ மாட்டேன்’ எனக் கூறிச் சென்றவர், சிறிது நேரத்தில் தோட்டத்தில் தூக்கில் தொங்கிவிட்டார்’’

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள புதுவீடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் சீனிவாசன் (38). கூலி வேலை செய்து வந்திருக்கிறார். தேனாடுகம்பைப் பகுதியில் நேற்று சீனிவாசன் மது அருந்திவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் லோகநாதன், சீனிவாசன்மீது வழக்கு பதிவு செய்து ரூ.15,000 அபராதம் கேட்டிருக்கிறார். மேலும், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளார். காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

மார்ச்சுவரியில் குவிந்த உறவினர்கள்
மார்ச்சுவரியில் குவிந்த உறவினர்கள்

இதில், மனமுடைந்த சீனிவாசன் அவரது தோட்டத்திலுள்ள மரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சீனிவாசன் மனைவி கூறுகையில். `` `போலீஸார் என்னிடம் ரூ.15,000 செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றனர். பைக்கையும் தர மறுக்கின்றனர். ரொம்ப மோசமாகத் திட்டினார்கள். நான், இனி உயிர் வாழ மாட்டேன்’ என்று கூறிச் சென்றவர், சிறிது நேரத்தில் தோட்டத்தில் தூக்கில் தொங்கிவிட்டார்" என்று கதறினார்.

மார்த்தாண்டம்:`பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் விற்பனை?’ - சர்ச்சையில் சிக்கிய போலீஸ்

இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனிடம் கேட்டோம். ``ஊட்டி அருகிலுள்ள தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொட்டபெட்டா பகுதியில், மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றதாக சீனிவாசன் என்பவரை போலீஸார் பிடித்துள்ளனர். பின், அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அதற்கான ரசீது வழங்கியுள்ளனர். நேற்று அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இது தொடர்பாக, துறைரீதியாக தேனாடுகம்பை காவல்நிலையத்திலுள்ள போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். மேலும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதோடு முடித்துக் கொண்டார்.

மார்ச்சுவரியில் குவிந்த உறவினர்கள்
மார்ச்சுவரியில் குவிந்த உறவினர்கள்

காவல்துறையினர் கொடுத்த டார்ச்சரில் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஊட்டியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கூடுதல் எஸ்.பி சங்கு, தேனாடுகம்பை போலீஸாரிடமும், சீனிவாசன் குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு