Published:Updated:

`மனுவை வாங்கிவெச்சுக்கிறாங்க; பிரச்னை எதுவும் தீரலை!’ - குமுறும் பள்ளப்பட்டி மக்கள்

 மழைநீர் தேங்கிய சாலை
மழைநீர் தேங்கிய சாலை ( நா.ராஜமுருகன் )

`மனுக்களைப் பெற்று பதிவுசெய்துகொள்வது மட்டுமே அதிகாரிகளின் வேலையாக இருக்கிறது. ஆனால், பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இழுத்தடிக்கிறார்கள்.’

``லேசா வானம் தூரல் போட்டாலே, எங்க பகுதி சேறும் சகதியுமா ஆகிடுது. சாலை வசதியும் இல்லை. 'எல்லா பிரச்னைகளையும் தீர்க்கிறோம்'னு சொல்லி, மக்கள்கிட்ட பேரூராட்சி நிர்வாகம் வரிவசூல் பண்ணினாங்க. ஆனா, இன்னிக்குவரைக்கும் எதையும் செய்யலை" என்று அல்லாட்டத்தோடு பேசுகிறார்கள் பள்ளப்பட்டி மக்கள்.

சேறும் சகதியுமான சாலை
சேறும் சகதியுமான சாலை
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது இந்தப் பேரூராட்சி. தமிழகத்திலிருக்கும் பெரிய பேரூராட்சிகளில் இதுவும் ஒன்று. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.

கரூர்: மழைநீரால் சூழ்ந்த உழவர் சந்தை! - குளித்தலை மக்கள் அவதி

குடிநீர், சாக்கடைக் கால்வாய் வசதி, சாலை வசதி என்று எந்த அடிப்படை வசதிகளும் பல பகுதிகளில் செய்யப்படாமல் இருப்பதாக மக்கள் குமுறுகிறார்கள். அதனால், அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளைத் தீர்க்க வலியுறுத்தி நாள்தோறும் அதிகாரிகளிடம் மனு கொடுக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சேறும் சகதியுமான சாலை
சேறும் சகதியுமான சாலை
நா.ராஜமுருகன்

பள்ளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த கூலப்பா நகர், முகமதிய நகர், ஒலிசா நகர் பகுதி பொதுமக்கள் சார்பில், `மழைக்காலங்களில் வடிகாலுடன்கூடிய சாலை வசதி இல்லாததால், மழைநீர் தேங்கி பல்வேறு அவதிக்கு உள்ளாகிறோம்' என்று அரவக்குறிச்சி வட்டாட்சியரிடம் மனுவைத் தொடர்ந்து அளித்திருக்கிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இது குறித்து, பேசிய பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஷெரிஃப், ``மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாவது, உடன் சேறும் சகதியுமாக மாறிய சாலைனு இந்தப் பகுதியே சுகாதாரச் சீர்கேடு அடைந்திருக்கிறது. வடிகாலுடன்கூடிய சாலை வசதியை ஏற்படுத்தாததால், கழிவுநீரும் மழைநீரோடு கலந்து சாலையில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. `உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று பேரூராட்சி நிர்வாகம், வட்டாட்சியர்னு பலருக்கும் மனு கொடுத்து ஓய்ந்துவிட்டோம்.

ஷெரிஃப்
ஷெரிஃப்
நா.ராஜமுருகன்

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்ட இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக பேரூராட்சி நிர்வாகம் வரி வசூல் மேற்கொண்டது. ஆனால், இன்றுவரை சாலை வசதி, குடிநீர் வசதி, வடிகால் வசதி என எந்த வசதியையும் ஏற்படுத்தித் தராமல், காலதாமதப்படுத்திவருகிறது. இதனால், மழைக்காலங்களில் சாலையில் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டிருக்கிறது" என்றார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைநீர் வெளியேற்றும் நிலவறைக் கால்வாய் - சோழர்கால அசத்தல் தொழில்நுட்பம்!

இது குறித்து, நம்முடன் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஆலீம் ரிபாய்தீன் ஹசனி, ``அரசு நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அந்தப் பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தை மேற்கொண்டு எங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வோம். மனுக்களைப் பெற்று பதிவுசெய்தகொள்வது மட்டுமே அதிகாரிகளின் வேலையாக இருக்கிறது. ஆனால், பிரச்னைகளைத் தீர்த்து ்வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இழுத்தடிக்கிறார்கள்.

ஆலிம் ரிபாய்தீன் ஹசனி
ஆலிம் ரிபாய்தீன் ஹசனி
நா.ராஜமுருகன்

அரவக்குறிச்சி தொகுதிக்கு சொந்தக்காரரான கரூர் எம்.பி ஜோதிமணி, தற்போதைய அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க-வின் மாவட்டப் பொறுப்பாளர் விசெந்தில் பாலாஜி மற்றும் அ.தி.மு.க-வின் கரூர் மாவட்டச் செயலாளராகவும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இருக்கும் கரூர் மாவட்டத்தில், பொதுமக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்கான கோரிக்கை வலுத்தவருவதை கவனத்தில்கொண்டு செயல்பட்டால் மட்டுமே மக்கள் பிரச்னை தீரும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு