Published:Updated:

`கான்கிரீட் சுவரே தடுக்கல...பனைமட்டை வேலி எப்படித் தடுக்கும்?' - கொதிக்கும் மீனவர்கள்

இப்பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை வீசும் சூறாவளி காற்று வீசுவது வழக்கம். இந்தக் காற்றின் வேகத்தினால் கடற்கரையோரம் உள்ள மணல் குன்றுகள் முகுந்தராயர் சத்திரம் வரை இருந்து வந்த சாலைகளில் குவிந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தின.

அரிச்சல் முனையில் உள்ள பனைமட்டை வேலி.
அரிச்சல் முனையில் உள்ள பனைமட்டை வேலி. ( உ.பாண்டி )

தனுஷ்கோடி அரிச்சல்முனை வங்கக்கடல் பகுதியில் வீசிவரும் மணல் புயலைத் தடுக்க பனைமட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தியுள்ள அதிகாரிகளின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசின் நிதி விரயமாகும் நிலையும் உருவாகியுள்ளது.

அரிச்சல்முனையில் சுற்றுலா பயணிகள்
அரிச்சல்முனையில் சுற்றுலா பயணிகள்
உ.பாண்டி

1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் உருக்குலைந்து போனது துறைமுக நகரமான தனுஷ்கோடி. இதனால் இங்கிருந்த சாலைகள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே, நகரும் மணல் குன்றுகளும் உருவாகின. இதனால் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக தனுஷ்கோடி பகுதி அறிவிக்கப்பட்ட நிலையில், மீன்பிடி தொழிலை நம்பியிருந்த சில நூறு மீனவர்கள் மட்டும் அங்கேயே அடிப்படை வசதிகளின்றி வசித்து வந்தனர். மேலும், புயலால் அழிந்து போன கட்டடங்களை காண சுற்றுலா பயணிகளும், முன்னோர்களுக்கு திதி போன்ற பூஜைகள் நடத்த யாத்திரைவாசிகளும் சாலை இல்லாத நிலையிலும் மணலில் செல்லும் வாகனங்கள் மூலம் சென்று வந்தனர்.

இப்பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை வீசும் சூறாவளி காற்று வீசுவது வழக்கம். இந்தக் காற்றின் வேகத்தினால் கடற்கரையோரம் உள்ள மணல் குன்றுகள் முகுந்தராயர் சத்திரம் வரை இருந்து வந்த சாலைகளில் குவிந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தின. இதைத் தடுக்க சாலையின் இருபுறங்களிலும் சவுக்கு மரங்கள் நடப்பட்டன. அவற்றையும் மீறி மணல்கள் சாலையை நோக்கி நகர்ந்தன. இதனால் மணல் குன்றுகள் நகராமல் இருக்க சாலையின் இருபுறமும் ஆங்காங்கே தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டன. அந்தத் தடுப்புச் சுவரையும் தாண்டி மணல்கள் சாலைக்கு வரும் நிலையும் நீடித்தது.

மணல் புயலைத் தடுக்க மட்டை வேலி
மணல் புயலைத் தடுக்க மட்டை வேலி
உ.பாண்டி

இந்நிலையில் 53 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் பகுதியிலிருந்து கடலின் எல்லையான அரிச்சல்முனை பகுதி வரை மத்திய அரசு சாலை அமைத்தது. இந்தச் சாலையினை கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 55 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையினால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வரும் வாகனங்களிலும், அரசுப் பேருந்து மற்றும் வாடகை வாகனங்களிலும் அரிச்சல்முனைப் பகுதி வரை சென்று கடற்கரையின் அழகை ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூறாவளி காற்று வீசும் காலங்களில் வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள், மீனவர்களுக்கு இடையூறாக இருந்து வரும் மணல் புயலினைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் புதிய முறையினை மேற்கொண்டுள்ளனர். இதற்காக நகரும் மணல் குன்றுகள் அதிகம் உள்ள பகுதிகளில் இருபுறமும் பனை மட்டைகளை கொண்டு வேலி அமைத்துள்ளனர். தனுஷ்கோடி பகுதியில் வீசுல் மணல் புயலுக்கு இடைவெளியின்றி கட்டப்பட்டுள்ள காங்கிரீட் தடுப்புச் சுவர்களே ஈடுகொடுக்க முடியாத நிலையில், இடைவெளி கொண்ட பனைமட்டைகளால் அமைக்கப்பட்டுள்ள வேலி எப்படி மணல் பரவலைத் தடுக்கும் எனத் தெரியாமல் மீனவர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதிகாரிகளின் இந்தச் செயல், சில ஆண்டுகளுக்கு முன் வைகை ஆற்று நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூடியது போன்று உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

`கான்கிரீட் சுவரே தடுக்கல...பனைமட்டை வேலி எப்படித் தடுக்கும்?' - கொதிக்கும் மீனவர்கள்

ஆனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளோ, மணல் நகருவதை தடுக்க வெளிநாடுகளில் இது போன்ற வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதை இப்பகுதியில் சோதனை முறையில் செய்து பார்க்கவே மட்டை வேலி அமைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், அடுத்து வரும் புயல் காலங்களில் இந்தப் பனைமட்டை தடுப்புகள் `கடலில் கரைத்த பெருங்காயமாக' கடலுக்குள் இழுத்துச் செல்வதன் மூலம் அரசின் நிதி வீணடிக்கப்படும் நிலையே ஏற்படும் எனத் தெரிகிறது.