பெரம்பலூர் தனியார் பள்ளி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில், கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய ஹிஜாப் விவகாரம், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர, கர்நாடக அரசு தடை விதித்தது. அந்தத் தடையை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த வழக்கில், ``இஸ்லாமியச் சட்டப்படி ஹிஜாப் அணிவது அவசியமில்லை என்பதால், கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்’’ என்று தீர்ப்பளித்தது கர்நாடக உயர் நீதிமன்றம். அதன் பிறகும் சில பள்ளிகளில் இப்பிரச்சனை வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தனியார்ப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.சி மற்றும் மெட்ரிக் எனச் செயல்படும் இந்த பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்களும் படித்துவருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது என்றும், அசைவ உணவுகள் கொண்டுவரக் கூடாது என்றும் கூறியுள்ளதாகத் தெரிவித்து ஆரியன் என்பவர் முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் ட்விட்டரில் டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ஆரியன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், `என்னுடைய உறவினரின் மகளிடம் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. வேண்டுமென்றால் குடும்பத்தாரிடமும், அந்த மாணவிகளிடம் நீங்களே பேசிப் பாருங்கள்’ என்றார்.

சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் பேசியபோது. ``ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனப் பள்ளி நிர்வாகம் சொன்னது உண்மைதான். அதனால் எங்கள் மகள் மூன்று நாள்களாக ஹிஜாப் அணிந்து செல்லவில்லை” என்றார். தொடர்ந்து, எங்களது பெயர்களையோ மாணவியின் பெயரையோ போட வேண்டாம் என்றனர்.

இது குறித்து பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் பேசினோம். ”இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எந்தவிதத் தடையும் செய்யவில்லை. யாரோ தவறான தகவலை வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். அசைவ உணவுகளைப் பள்ளிக்கு எடுத்து வந்தால் மற்ற மாணவர்களுக்கு அதைப் பார்த்து சங்கடம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அசைவ உணவுகளை எடுத்து வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்றபடி ஹிஜாப்புக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை” என்றார்.