Published:Updated:

`மனைவியின் மருந்துக்காகக் கடை திறப்பு; சீல்வைத்து திட்டிய தாசில்தார்? விபரீத முடிவெடுத்த கடைக்காரர்

மனுக்கொடுக்க வந்த சக்திவேல்
மனுக்கொடுக்க வந்த சக்திவேல்

``பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய புள்ளிகளின் கடைகள் திறந்திருக்கிறது. அதை அவரால் சீல் வைக்க முடியுமா? அதையெல்லாம் விட்டுவிட்டு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்திக்கொண்டிருக்கும் எங்களிடம் வீரத்தைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?’’

``என் அம்மாவுக்கு சுகர் மருந்தை எடுப்பதற்காக என் தந்தை கடை திறந்திருக்கிறார். அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை காலால் எட்டி உதைத்திருக்கிறார். அவர் சாவுக்குக் காரணமான தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எஸ்.பி-யிடம் மனு அளித்துள்ளார் மாற்றுத்திறனாளியான சக்திவேல்.

கடைகள் அடைப்பு!
கடைகள் அடைப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில், பெரம்பலூரில் தாசில்தார் ஒருவர் ஒருமையில் திட்டியதால் கடைக்காரர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மீது நடவடிக்கை கோரி அந்தக் கடைக்காரரின் மகன் எஸ்.பி-யிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.

போலீஸாரிடம் புகார் கொடுக்க வந்த சக்திவேலிடம் பேசினோம். ``நான் மாற்றுத்திறனாளி. என்னால் வெளியில் எங்கும் வேலைக்குப் போக முடியாது என்பதால் நக்கசேலம் கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். இதற்கிடையே, கடந்த என் அம்மா சுகர் பேசன்ட் அவருக்குத் தேவையான இன்சுலின் மருந்து எங்க கடை ப்ரிஜ்ல இருந்தது. ஏப்ரல் 11-ம் தேதி இரவு அந்த மருந்தை எடுத்து வரும்படி எங்க அப்பா கண்ணையனைக் கடைக்கு அனுப்பினேன். ஆனால், அப்போது ரோந்து பணியிலிருந்த ஆலத்தூர் தாசில்தார் பாலசுப்ரமணியன் மற்றும் காவல்துறையினர் கடையைத் திறந்ததால் கடுமையான வார்த்தையால் திட்டியிருக்கிறார்கள்.

மனுக்கொடுக்க வந்த சக்திவேல்
மனுக்கொடுக்க வந்த சக்திவேல்

அதற்கு அவர், `சார் நாங்கள் மதியம் 1 மணிக்கே கடையைச் சாத்திவிட்டோம். என் மனைவிக்கு மருந்து எடுப்பதற்காகக் கடையைத் திறந்தேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, `நீ என்ன கூடக் கூட பேசிக்கிட்டு இருக்கே’னு சொல்லி அப்பாவை அடிசக்சுத் தள்ளிவிட்டுட்டாங்க. அத்தோடு அந்தக் கடையையும் சீல் வைக்கச் சொன்னாரு தாசில்தார். அதற்கு எங்க அப்பா, `இந்தக் கடையால்தான் எங்க குடும்பமே ஓடிகிட்டு இருக்கு. சீல் வச்சிட்டா நடுத்தெருவுலதான் சாமி நிக்கணும்’னு அவரோட காலபுடிச்சு கட்டி அழுது இருக்காரு. இரக்கம் காட்டாத தாசில்தார் அவரைப் பிடிச்சுத் தள்ளிவிட்டுக் கடைய சீல் வச்சிட்டாங்க. சம்பவம் கேள்விப்பட்டதும் நான் சென்று அவரிடம் பேசியபோது, `என்ன சம்பவம் நடந்துச்சுன்னு மனுவா எழுதிக்கொடு. கடையைத் திறந்துவிடுகிறோம்’னு அலட்சியமா சொல்லிவிட்டு காருல ஏறி போய்விட்டார்.

எங்க அப்பா அசிங்கம் தாங்க முடியாமல் எலி மருந்து குடிச்சிட்டாரு. ஆறு நாள்கள் மருத்துவமனையிலிருந்தவர் 18-ம் தேதி அதிகாலை சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கியப் புள்ளிகளின் கடைகள் திறந்திருக்கின்றன. அவற்றை அவரால் சீல் வைக்க முடியுமா? அதையெல்லாம் விட்டுவிட்டு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்திக் கொண்டிருக்கும் எங்களிடம் வீரத்தைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

கண்ணையன்
கண்ணையன்

எங்கள் குடும்பத்துக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது. `இரக்கம் இல்லாமல் நடந்துகொண்ட தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் புகார் கொடுத்திருக்கிறேன். இதில் நடவடிக்கை இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறேன்" என ஆவேசப்பட்டார் சக்திவேல்.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

இதுகுறித்து தாசில்தார் பாலசுப்ரமணியனிடம் பேசினோம். ``அவர்கள் சொல்வது முற்றிலும் தவறு. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது இரவு நேரத்தில் கடை திறப்பது தவறு அல்லவா? அதற்காக அவர்கள் கடைக்கு சீல் வைத்தோம். அத்தோடு அன்று மட்டும் இரண்டு மூன்று கடைகளுக்குச் சீல் வைத்தோம். அவர் மகன் சக்திவேல் என்னிடம் விவகாரத்தை எடுத்துச்சொன்னார். அதன் பெயரில் அலுவலகத்தில் வந்து புகார் மனு எழுதிக்கொடுங்கள். கடையைத் திறந்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். அவ்வளவுதான். அவர் குடும்பப் பிரச்னையால் விஷம் குடித்து இறந்திருக்கிறார். இதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?" என்பதோடு முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு