Published:Updated:

`கோயில்களைத் திறக்காததால் எந்த வருத்தமும் இல்லை!' -இந்து அமைப்புகள் எதிர்ப்பால் கொதித்த பினராயி

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இப்போது வழிபாட்டுத்தலங்களைத் திறக்கவில்லை என அரசு அறிவித்திருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும். `இங்கே இருப்பது பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசு' எனக் கூறியிருப்பார்கள்.

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் ஆசார முறைப்படி சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. இந்தநிலையில் கடந்த 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத்தலங்களைத் திறக்க பா.ஜ.க, இந்து ஐக்கியவேதி உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் நிற்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைத் திறக்கமாட்டோம் எனவும் அறிவித்தன. அதன்படி கமிட்டியினரால் நிர்வகிக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசுவமி கோயில் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் சபரிமலையில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி நடை திறக்கும்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என முதலில் தேசவம்போர்டு அறிவித்தது. இதற்கு தந்திரி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பக்தர்களை அனுமதிப்பதில்லை என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். வழிபாட்டுத்தலங்களை திறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆவேசமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில்
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில்

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கடந்த மே 30-ம் தேதி மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதலில் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களை திறக்கலாம் என அறிவித்திருந்தது. இதையடுத்து கடந்த 4-ம் தேதி இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் கேரளத்தில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளது சரியானது. இது சம்பந்தமாக பக்தர்களின் கருத்தையும் அறிந்துகொண்டுதான் தீர்மானம் எடுக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ சமய முக்கியஸ்தர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

`யானை மரணத்தில் கேரளாவின் உண்மைத் தன்மையை கேள்விக்குறியாக்க முயற்சி!’ - பினராயி விஜயன் காட்டம்

வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வழிபாட்டுத்தலங்களை திறக்கலாம் என அவர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்கள் கருத்துக்கு இணங்க வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் இப்போது வழிபாட்டுத்தலங்களை திறக்கவில்லை என அரசு அறிவித்திருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும். `இங்கே இருப்பது பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத அரசு' என கூறியிருப்பார்கள்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

வழிபாட்டுத்தலங்களை இப்போதுதான் திறக்க வேண்டும் என அரசுக்குப் பிடிவாதம் எதுவும் இல்லை. அதேசமயம் இப்போது கோயிலைத் திறக்க வேண்டாம் எனத் தீர்மானம் செய்தவர்களின் முடிவும் நல்லதுதான். அதனால்தான் அதற்கு அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. கோயில்களை திறக்காமல் இருப்பதால் அரசுக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு