Published:Updated:

இட ஒதுக்கீடு: 3-வது கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் பா.ம.க - முதல் 2 கட்டங்கள் பிசுபிசுத்தது ஏன்?

பா.ம.க-வினர் நடத்திய ரயில் மறியல் போராட்டம்!
பா.ம.க-வினர் நடத்திய ரயில் மறியல் போராட்டம்!

போராட்டமானது, கீழ்நிலையிலிருந்து மேல் நோக்கிச் சென்றிருக்க வேண்டும். ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி எனத் தொடங்கி இறுதியாக தலைமைச் செயலகம் சென்றிருக்க வேண்டும். இவர்கள் தொடக்கத்திலேயே சென்னையை நோக்கிச் சென்றுவிட்டனர்.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு கேட்டு 3-ம் கட்டப் போராட்டம் குறித்து நேற்று (டிசம்பர் 19) ஆலோசித்தது பா.ம.க. `போராட்ட வடிவத்தைத் தீர்மானிப்பதிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இட ஒதுக்கீடு விவகாரத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை' என ஆதங்கப்படுகின்றனர் பா.ம.க நிர்வாகிகள்.

ராமதாஸ்
ராமதாஸ்

வன்னிய சமூக மக்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டத்தில் இறங்கியது பாட்டாளி மக்கள் கட்சி. இதற்காக சென்னை அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைமை அலுவலகம் முன்பாக, நவம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை போராட்டத்தை நடத்தியது. பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற முதல்நாள் போராட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில் அவரைச் சந்தித்து மனு கொடுத்தார். இதன் பின்னர், டிசம்பர் 14-ம் தேதி இரண்டாவதுகட்டப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்காக, தமிழகம் முழுவதுமுள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சமூக மக்களை அழைத்துச் சென்று மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். இதனால் வட மாவட்டங்களில் ஏராளமான மனுக்கள் குவிந்தன.

இந்தநிலையில், மூன்றாவதுகட்டப் போராட்டத்தை முன்னெடுக்கவிருக்கிறது பா.ம.க. இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இணையவழி கலந்துரையாடலை நடத்திருயிருக்கிறார் அன்புமணி. இந்தக் கூட்டத்துக்கு `நெஞ்சு பொறுக்குதில்லையே' எனப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் இந்த இணையவழிக் கலந்துரையாடலில் நிர்வாகிகள் பங்கேற்றனர். இட ஒதுக்கீடு கொடுக்காமல் அரசு அலைக்கழித்துவருவதால், மூன்றாவது கட்டப் போராட்டத்தை வீரியமாக நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக பா.ம.க-வினர் தெரிவிக்கின்றனர்.

பா.ம.க நடத்திய போராட்டம்
பா.ம.க நடத்திய போராட்டம்

அதேநேரம், ``இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான போராட்டம், சரியான வடிவத்தில் அமையவில்லை" என வேதனைப்படுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலர். இது தொடர்பாக, நம்மிடம் பேசியவர்கள், ``இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால், அதைக் கேட்பதற்கான சரியான தருணமாக இதை நாங்கள் பார்க்கவில்லை. தொடக்கத்திலேயே இந்தப் போராட்டத்தை மென்மையாக அணுகியிருக்கலாம். வன்னிய சமூக மக்களின் உயிர்நாடியாகப் பார்க்கப்படும் இட ஒதுக்கீடுப் போராட்டங்களை ஏன் இத்தனை வருடங்களாக மருத்துவர் ராமதாஸ் நடத்தவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

வன்னியர் தனி இட ஒதுக்கீடு போராட்டம்: பா.ம.க-வின் நோக்கம் வாக்குவங்கியா, சமூகநீதியா?

1989-ம் ஆண்டு வன்னிய சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அரைகுறையாகக் கருணாநிதி கொடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை இன்றளவும் முன்வைக்கிறோம். ஆனால், தி.மு.க-வுடன் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிவைத்தோம். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணிவைத்தோம். அதிலும், 2006-ம் ஆண்டு மைனாரிட்டி அரசாக தி.மு.க இருந்தது. அந்தநேரம், அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியினர் இடம் கேட்டனர். பா.ம.க தரப்பில் 18 எம்.எல்.ஏ-க்கள் இருந்ததால், எங்களின் ஆதரவை தி.மு.க தலைமை கோரியது. அப்போது பா.ம.க மட்டும் ஆதரிக்காமல் இருந்திருந்தால், ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால், ஆட்சிக்கு பாதிப்பில்லாதபடி மருத்துவர் பார்த்துக்கொண்டார். அப்போதே கருணாநிதியிடம் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்துப் பெற்றிருக்கலாம். அதைச் செய்வதற்குத் தவறிவிட்டனர்.

ராமதாஸ்
ராமதாஸ்

தற்போதுள்ள முதல்வரும் பா.ம.க தலைமையின் பேச்சைக் கேட்கக்கூடியவர்தான். இதுவரையில் தைலாபுரம் தோட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு எந்த முதல்வரும் வந்ததில்லை. மருத்துவர் ராமதாஸை மதித்து, தேடி வந்தார். அப்போதே, `இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு குழு அமைத்திருக்கிறோம், அந்தக் குழுவினர் உங்களைச் சந்திப்பார்கள்' என மருத்துவர் கூறியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், சமூக மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் கிடைத்திருக்கும். இட ஒதுக்கீடு விவகாரத்தில் எந்தக் குழப்பமும் வந்திருக்காது. தற்போது நடத்தப்பட்ட போராட்டத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கிவிட்டனர். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், மற்ற சமூகத்தினரும் முதல்வருக்கு நெருக்கடி கொடுப்பார்கள். சொல்லப்போனால், இயல்பாக நடக்க வேண்டிய விஷயத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல் விட்டுவிட்டனர்" என விவரித்தவர்கள்,

`` தற்போது கட்சிக்குள் அனைத்து முடிவுகளையும் அன்புமணியே எடுக்கிறார். இதற்கு முன்பெல்லாம் எந்த ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதாக இருந்தாலும் கட்சியின் சீனியர்களிடம் மருத்துவர் ராமதாஸ் கருத்து கேட்பார். தொண்டர்களின் கருத்தையும் உள்வாங்கிக்கொள்வார். இறுதியாக, முடிவெடுத்துச் செயல்படுத்துவார். தற்போது நடந்த போராட்டத்தையும் மருத்துவர் அய்யா முன்னெடுக்கவில்லை. `என் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது' என ட்வீட் மட்டுமே வெளியிட்டார். இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஏ.கே.மூர்த்தியைத் தவிர மற்றவர்களில் பலர் கள வேலைகளில் பெரிதாகக் கால்பதிக்காதவர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் மொத்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அதேபோல் போராட்டத்தின் வடிவமும் கீழ்நிலையிலிருந்து மேல் நோக்கிச் சென்றிருக்க வேண்டும். ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி எனத் தொடங்கி இறுதியாக தலைமைச் செயலகம் சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இவர்கள் தொடக்கத்திலேயே சென்னையை நோக்கிச் சென்றுவிட்டனர். அரசுக்குப் படிப்படியாக போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தியிருக்க வேண்டும். நாங்கள் இட ஒதுக்கீட்டுக்காகப் போராடிய காலத்தில் அந்தப் போராட்டம் நியாயமானதாகவும், வீரியமாகவும் இருந்தது. அப்போது எந்த அதிகாரமும் பா.ம.க-விடம் இல்லை. இப்போது ஆளும்கட்சி கூட்டணியில் அதிகாரத்தோடு இருக்கிறோம். ஆனால், அதைக் கேட்பதற்கு உண்மையிலேயே ஆர்வம்காட்டுகிறார்களா எனவும் தெரியவில்லை" என்றனர் ஆதங்கத்துடன்.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் விளக்கம் கேட்டோம். `` உண்மையில் என்ன நடக்கிறது என எங்களுக்கும் தெரியவில்லை. இது தொடர்பாக நான் கருத்து தெரிவிக்காமல் இருப்பதே நல்லது" என்றதோடு ஒதுங்கிக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு