Published:Updated:

`தோப்பில் கறி விருந்து; ஃபேஸ்புக்கில் போட்டோ!' - அமைச்சரின் ஆதரவாளர்களை வளைத்த போலீஸ்

Representational Image
Representational Image

கொரோனா தொற்றால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தோப்பில் கறி விருந்து வைத்து ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் பதிவிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது புதுவை போலீஸ்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் வரும் மே மாதம் 3-ம் தேதிவரை நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பல மாவட்டங்களில் விதிகளை மீறுபவர்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல புதுவையில் விதிகளை மீறியும் தேவைகளற்றும் வெளியில் சுற்றிக்கொண்டிருப்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பிரியாணி விருந்து
பிரியாணி விருந்து

இது ஒருபுறமிருக்க, ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறி ஒன்றாக அமர்ந்து விருந்து கொண்டாடியதுடன், அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு போலீஸிடம் கூண்டோடு சிக்கியிருக்கின்றனர்.

புதுவை கால்நடை மருத்துவமனையின் உதவியாளரான கிருஷ்ணராஜ், டெபுடேஷன் அடிப்படையில் பல ஆண்டுகளாகப் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அதேபோல வனத்துறை ஓட்டுநராகக் கல்யாணசுந்தரம் என்பவரும் அமைச்சர் நமச்சிவாயத்தின் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம்
புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம்

இவர்கள் இருவரும் இணைந்து தங்கள் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து வைக்க முடிவெடுத்திருக்கின்றனர். அதனடிப்படையில் நேற்று தங்கள் நண்பர்கள் 14 பேரை அழைத்து, வில்லியனூரை அடுத்த மனவெளிப் பகுதியில் முட்டையுடன் பிரியாணி விருந்து வைத்தனர்.

வரிசையாகப் போடப்பட்ட வாழை இலைகளில் முட்டையுடன் பிரியாணியைப் பரிமாறினர். அத்துடன் பிரியாணியில் இருந்த கறித்துண்டை கடித்தவாறும் பிரியாணியை சாப்பிட்டவாறும் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து ஃபேஸ்புக்கில் பெருமையாகப் பதிவிட்டனர். ஆனால், அந்தப் படத்தை பதிவிறக்கம் செய்த நெட்டிசன்கள், ``ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில், அரசு அறிவித்த விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் இல்லாமலும் இருக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், வழக்கு எல்லாம் தக்காளி வாங்குவதற்காக மார்க்கெட் போவோர்கள் மீது மட்டும்தான் பாயுமா, அதிகாரவர்க்கத்தின் ஆதரவாளர்கள் மீது பாயாதா?” என்ற கேள்விகளுடன் சமூக வலைதளத்தில் உலவவிட்டனர்.

ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு

பெருமைக்காக செய்த பதிவு வில்லங்கமானதை அறிந்த பிரியாணிக் கும்பல், உடனே ஃபேஸ்புக்கில் இருந்து வீடியோ, போட்டாவை உடனடியாக நீக்கினர்.

``98 கிடா, 602 நாட்டுக்கோழி!" - இரவு 11 மணி வரை நடந்த மேலூர் கறி விருந்து!

ஆனால், வாட்ஸ்-அப் குழுக்களில் அவை வைரலானதால், சம்பத்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி வில்லியனூர் போலீஸாருக்கு உத்தரவிட்டனர் உயரதிகாரிகள். அதையடுத்து கிருஷ்ணராஜ், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 14 பேர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது, தொற்றுநோய் பரப்புதல் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் வில்லியனூர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு