Published:Updated:

`ரிமாண்ட் பண்ணிடுவேன் ஓடிடு; ஸ்டேஷனில் மோதிக்கொண்ட இன்ஸ்பெக்டர்- எஸ்.ஐ!'- அதிரடி காட்டிய டி.ஐ.ஜி

இன்ஸ்பெக்டர் வனஜா
இன்ஸ்பெக்டர் வனஜா

புகார் குறித்து விசாரிக்க வந்த ஆண் எஸ்.ஐ-யிடம் கடுமையாக நடந்துகொண்ட பண்ருட்டி பெண் இன்ஸ்பெக்டர் வனஜா, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

காவல் நிலையத்தில் சீருடையில் இருக்கும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரும், சாதாரண உடையில் இருந்த எஸ்.ஐ ஒருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி ஒன்று நேற்று சமூக வலைதளத்தில் வெளியானது. அந்தக் காட்சியில்.

ஆண் எஸ்.ஐ: ``புகார் கொடுத்தவரை அழைத்து விசாரிங்க...”

பெண் இன்ஸ்பெக்டர்: ``விசாரிக்க முடியாது... போய்யா…”

ஆண்: ``அப்புறம் எதற்கு போலீஸ் ஸ்டேஷனில் நீங்க இருக்கீங்க?”

பெண் அதிகாரி: ``ரிமாண்ட் பண்ணிடுவேன்.” (கையைக் காட்டி மிரட்டுகிறார்)

ஆண்: ``அப்புறம் புகார் கொடுத்தால் யார் விசாரிப்பது?”

பெண் அதிகாரி: ``எஸ்.பி-யிடம் சொல்லி உன்னை ரிமாண்ட் செஞ்சிடுவேன்.”

எஸ்.ஐ பிரபு
எஸ்.ஐ பிரபு

ஆண்: அங்கிருந்த இன்னொருவரிடம், ``நான் போன் பண்ணி சொல்கிறேன். ஒரு வார்த்தைகூட கேட்காமல். கொம்பு முளைச்சிருக்கான்னு கேக்கறாங்க. பெட்டிஷனைக் கொடுங்க.”

பெண் அதிகாரி: ``ரிமாண்ட் பண்ணிடுவேன் உன்னை.”

ஆண்: ``வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்யுங்க முதல்ல.”

பெண் அதிகாரி: ``யாருகிட்டய்யா பேசிக்கிட்டிருக்க... ஏய்... உக்கார வைய். ரிமாண்ட் பண்ணு” (பெண் காவலர்களுக்கு கட்டளையிடுகிறார்.)

ஆண் எஸ்.ஐ: ``நான் எஸ்.ஐனு போன்ல சொல்றேன். உனக்கு கொம்பு முளைச்சிருக்கான்னு கேட்கிறாங்க.”

பெண் இன்ஸ்பெக்டர்: ``உன் பொண்டாட்டிய போயி கேளு.”

ஆண் எஸ்.ஐ: ``பெட்டிஷன விசாரிக்கணும்னா ஆட்டோ கூட்டிகிட்டு வான்னு சொல்றாங்க”

பெண் இன்ஸ்பெக்டர்: ``யோய் நீ யாருய்யா ஆட்டோ வைக்கிறதுக்கு ?”

ஆண் எஸ்.ஐ: ``மரியாதையா பேசுங்க.. புகாருக்கு சி.எஸ்.ஆர் குடுங்க.”

பெண் இன்ஸ்பெக்டர்: ``உதை வாங்கிட்டு ஓடுவ நீ...”

ஆண் எஸ்.ஐ: ``மரியாதையா பேசுங்க... பெட்டிஷனைக் கொடுங்க.”

பெண் இன்ஸ்பெக்டர்: ``பிச்சிடுவேன் உன்னை.”

ஆண் எஸ்.ஐ: ``மரியாதையாகப் பேசுங்க. நீங்கள் சும்மா வேலை செய்யவில்லை. அரசாங்கத்துக்கு வேலை செய்றீங்க.”

பெண் இன்ஸ்பெக்டர்: ``மரியாதை கெட்டுடும். ஓடிப்போயிடு இங்கிருந்து.”

எஸ்.ஐ பிரபுவை மிரட்டும் இன்ஸ்பெக்டர் வனஜா
எஸ்.ஐ பிரபுவை மிரட்டும் இன்ஸ்பெக்டர் வனஜா

ஆண் எஸ்.ஐ: ``நான் எஸ்.பி சாரிடம் குடுத்துக்கிறேன். பெட்டிஷனைக் கொடுங்க. யாராக இருந்தாலும் வா...போன்னு பேசக் கூடாது.”

பெண் இன்ஸ்பெக்டர்: ``அறைஞ்சிடுவேன் உன்னை.”

ஆண் எஸ்.ஐ: ``அறையுங்க.”

பெண் இன்ஸ்பெக்டர்: ``சீன் போடுறியா?”

ஆண் எஸ்.ஐ: ``சீன் போடல. இன்ஸ்பெக்டர்னா கொம்பு முளைச்சிடுச்சா?”

பெண் இன்ஸ்பெக்டர்: ``முளைச்சிடுச்சிடா போடா.”

ஆண் எஸ்.ஐ: ``மரியாதையா பேசுங்க.”

பெண் இன்ஸ்பெக்டர்: ``அறைஞ்சிடுவேன்... செருப்பு பிஞ்சிடும். வேற எங்கேயாவது வெச்சிக்க” (எஸ்.ஐயை சட்டையைப் பிடித்து இழுக்க முயல்கிறார்).

சமூக வலைதளத்தில் வெளியான இந்த வீடியோ காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து நமது விசாரணையில் கிடைத்த தகவல் இதுதான். காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள்தான் அந்த வீடியோ காட்சியை எடுத்து சமூக வலைதளத்தில் விட்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வருகிறார்.

இவரின் மனைவி சசிகலாவுக்கும், எஸ்.ஐ பிரபுவின் தாய் அல்லி, சகோதரி சுகந்திக்குமிடையே சொத்துப் பிரச்னை எழுந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பிரச்னை காரணமாகத் தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக சசிகலா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததுடன் தன் கணவர் எஸ்.ஐ என்றும் கூறியிருக்கிறார்.

Representation image
Representation image

அந்தப் புகாரை விசாரிக்கத் தாமதப்படுத்திய இன்ஸ்பெக்டர் வனஜா, `உன் கணவர் எஸ்.ஐ என்றால் கொம்பா முளைத்திருக்கிறது ? புகாரை விசாரிக்க வேண்டுமென்றால் ஆட்டோவை அழைத்து வா’ என்று சசிகலாவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து சசிகலா தன் கணவர் பிரபுவிடம் கூற, எஸ்.ஐ என்ற முறையில் இன்ஸ்பெக்டர் வனஜாவை செல்போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் பிரபு.

அப்போது அவரிடமும், `எஸ்.ஐ-ன்னா உனக்கு கொம்பு முளைத்திருக்கிறதா?” என்று கேட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர் வனஜா. அதையடுத்து எஸ்.ஐ பிரபு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்தபோதுதான் இந்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

எஸ்.ஐ பிரபு
எஸ்.ஐ பிரபு

வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து விசாரித்திருக்கிறார் கடலூர் மாவட்ட எஸ்.பி அபிநவ். அதையடுத்து இன்ஸ்பெக்டர் வனஜாவை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க டி.ஐ.ஜி சந்தோஷ்குமாரை தொடர்புகொண்டோம். ``இருவர் மீதும் தவறு இருக்கிறது. அந்தப் பெண் அதிகாரி எங்கள் மாவட்டத்தில் இருப்பதால், அவரை ஆயுதப் படைக்கு மாற்றியிருக்கிறோம். அந்த எஸ்.ஐ குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு தகவல் அளித்திருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு