Published:Updated:

`கலெக்டர் சொல்லாம விட முடியாது; சிகிச்சைக்குச் சென்ற முதியவர் தடுப்பு?!’- புதுச்சேரி சர்ச்சை

  முதியவர் மாரிமுத்து
முதியவர் மாரிமுத்து

`சாமானியர்களுக்கு ஓர் நீதி..செல்வாக்கு படைத்தவர்களுக்கு ஓர் நீதியா?’

`கண்ணில் முள் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசின் அனுமதி பெற்று புதுவை ஆஸ்பத்திரிக்குச் சென்றவரை தடுத்து உயிருடன் விளையாடியிருக்கிறார்கள் காவல்துறையினர்" என்று புதுவைப் போலீஸாருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் சமூக ஆர்வலர் சந்திரமௌலீஸ்வரர்.

 மாரிமுத்து
மாரிமுத்து

சந்திரமௌலீஸ்வரருடன் பேசினோம். ``காரைக்கால் திருவேட்டக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற (65 வயது) முதியவர் முள் வெட்டும்போது கண்ணில் முள் குத்தி கவலைக்கிடமான நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்றார். பின்னர், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்குத் தொழிலே முள்வேலி கட்டுவதுதான். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபரும் இவர்தான். எனவே, தற்போது அமலில் இருக்கும் கொரோனா ஊரடங்கு உத்தரவு நடைமுறை விதிகளின்படி காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி சீட்டு ( e-Pass) பெற்று, மாரிமுத்து, புதல்வர் துணையுடன் ஓட்டுநர் சகிதம் காரில் புதுச்சேரிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் கொடுத்த அனுமதி சீட்டில் (pass) காரைக்காலிலிருந்து புதுச்சேரி எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் பயணம் செய்த கார் கடலூர் தாண்டி, புதுச்சேரி எல்லையான கன்னியகோவில் என்ற இடத்தை அடைந்தபோது காவல்துறை வடிவத்தில் அவர்களுக்குப் பிரச்னை வந்தது. காவல்துறை கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் மற்றும் துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் அடங்கிய போலீஸ் டீம் அவர்களை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது.

`புதுச்சேரி எல்லைக்குள் செல்ல வேண்டும் என்றால் புதுச்சேரி ஆட்சியர் அருணின் கையொப்பமிட்ட பாஸ் வேண்டும்’ என்று கூறியதும் செய்வதறியாது திகைத்து நின்றவர்கள், காரைக்காலில் இருந்த என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு இது விஷயமாக ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டனர். உடனே நான் புதுச்சேரி டி.ஜி.பி.அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அங்கிருந்த ஊழியர் டொமினிக்கிடம் பேசியபோது அவர் என்னை, புதுச்சேரி ஆட்சியரிடம் பேசுமாறு கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதற்கிடையே காரில் இருந்த மாரிமுத்துவின் மகன் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமனிடம் கைபேசியில் என்னிடம் பேசுமாறு வேண்டுகோள் விடுத்ததை ஏற்க மறுத்துவிட்டார். கடைசியில் ஒரு வழியாக புதுச்சேரி ஆட்சியர் அருணிடம் தொடர்பு கொண்டு நிலைமையின் விபரீதத்தை விளக்கிச் சொன்ன பின்பு, அவரது வாய்மொழி உத்தரவின் பேரில் 2 மணி நேரக் காத்திருப்பிற்குப் பின்பு கார் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நோயாளிக்குத் தாமதமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சந்திரமௌலீஸ்வரர்
சந்திரமௌலீஸ்வரர்

கண்ணில் முள்குத்தி, சீழ் வடிந்த நிலைமையை எடுத்துச் சொல்லியும் காவல்துறை அதிகாரிகள் இரக்கம் காட்டவேயில்லை. இந்தச் சம்பவம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதலில் இ- பாஸ் தந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர் நோயாளியின் பயணத்தைப் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனை வரை உறுதி செய்திருக்க வேண்டாமா? காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கொடுத்த இ - பாஸில் இருந்த `காரைக்கால் டு புதுச்சேரி " என்ற வார்த்தைகளுக்கு என்ன மரியாதை?

emergency medical treatment certificate
emergency medical treatment certificate

சட்டத்தில் உள்ள எழுத்துக்களை மட்டும் பார்க்காமல் அதற்குப் பின்னே உள்ள மக்களின் உணர்வுகளையும் மதிக்கும் காலம் இந்தக் காவல்துறையினரிடமும் ஆட்சியாளர்களிடமும் எப்போது ஏற்படும்? சாமானியர்களுக்கு ஓர் நீதி..செல்வாக்கு படைத்தவர்களுக்கு ஓர் நீதியா? மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் புறப்படும் இடமான காரைக்காலில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து ஒரு பாஸூம், சேரும் இடமான புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இன்னொரு பாஸூம் வாங்கச் சொல்வதன் அடிப்படை நடைமுறையே வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது. அதிகாரிகள் சற்று மனிதாபிமான உள்ளத்துடன் சிந்தித்து செயல் படவேண்டும்" என்றார்.

`இங்கு மதுக்கடைகளைத் திறக்கவில்லையென்றால்..!' - புதுவை முதல்வருக்கு அமைச்சரின் அலர்ட்

இப்புகார் குறித்து காரைக்கால் ஆட்சியர் அலுவகத்தில் இ - பாஸ் வழங்கும் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் கேட்டோம். ``கண்ணில் முள்குத்திக் காயம்பட்ட மாரிமுத்துவுக்குப் பாண்டிச்சேரி அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்குச் செல்ல நாங்கள்தான் பாஸ் கொடுத்தோம். ஆனால், `கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏகப்பட்ட கொரோனா நோயாளிகள் இருப்பதால் பாண்டிச்சேரிக்குள் இரண்டு நாள்களாக எவரையும் அனுமதிப்பதில்லை’ என்று கடுமையாக விதியைக் கடைப்பிடிக்கிறார்கள். எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரையின்படி புதுவை செல்ல பாஸ் கொடுத்து விடுகிறோம். அங்கே தடுக்கிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு