Published:Updated:

முகாம் கொடுமையால் கொதித்த ஜவான்கள்! -ஆலோசித்த பொன்னார்; அதிகாரிகள் விளக்கம்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

ஜவான்கள் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த முகாமைப் பார்வையிட பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்றார்.

டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 27 பேர் விமானம்மூலம் திருவனந்தபுரம் ஏர்ப்போர்ட் வந்தனர். அதுபோன்று, கைக்குழந்தையுடன் பெண்கள் உள்ளிட்டவர்களும் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து கேரள அரசு வாகனம் மூலம் களியக்காவிளை சோதனைச் சாவடிக்கு வந்தனர்.

ராணுவ வீரர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டன. சோதனை முடிவுகள் வரும்வரை அவர்களை வீடுகளுக்கு அனுப்பாமல் ஆற்றூரில் உள்ள மரியா கல்லூரியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டனர். அந்தக் கல்லூரியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் உணவு இல்லாமலும் தவித்துள்ளனர்.

இதுகுறித்து தனிமை முகாமில் இருந்தபடியே ராணுவ வீரர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில், `நாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால் இஷ்டம் இல்லை என்றால் வெளியே செல்லுங்கள் எனக் கூறுகிறார்கள்.

முகாமில் இருந்த ஜவான்கள்
முகாமில் இருந்த ஜவான்கள்

`கொரோனாவை பரப்ப வந்த ராணுவ வீரர்கள் என வழக்குப்பதிவு செய்யப்படும்' எனவும் மிரட்டுகிறார்கள். இந்திய எல்லையில் நாட்டுக்காகப் போராடி வரும் எங்களை திருவனந்தபுரத்தில் இருந்து களியக்காவிளை வரை கொண்டு வந்துவிடும்போது கேரளா அதிகாரிகளும் போலீஸாரும் மிகவும் மரியாதையாக நடத்தினர். ஆனால், தமிழக அரசு அதிகாரிகளும் போலீஸாரும் எங்களை கேவலமாக நடத்துகிறார்கள்' என வேதனையுடன் அந்த வீடியோவில் கூறியிருந்தனர்.

Vikatan

அந்தக் கட்டடத்தில் தங்கவைக்கப்பட்ட பெண்களுக்கும் போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அந்த வீடியோ மூலம் தெரிவித்திருந்தனர். ஏற்கெனவே, ஹாஸ்டலாக செயல்பட்டுவந்த அந்தக் கட்டடத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், குறைந்த அளவு பாத்ரூம்களே நல்லநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சரியான காம்பவுண்ட் வசதிகூட இல்லாத அந்தக் கட்டடத்தில், தனிமை முகாம் அமைக்க அப்பகுதி மக்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருப்பினும் அதிகாரிகள் அங்கு முகாம் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

ஜவான்கள் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த முகாமைப் பார்வையிட பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்றார். பின்னர், அங்கிருந்த அதிகாரிகளிடம் ஜவான்களின் நலன் குறித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், இந்த முகாம் திறந்து இரண்டு நாட்களே ஆகிறது என்பதால் ஏற்பாடுகள் முழுமையாகச் செய்து முடிக்கவில்லை என்றும், உடனடியாகக் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட்டார்.

தமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 2,516 பேருக்கு பாதிப்பு; 800 -ஐ கடந்த பலி எண்ணிக்கை  #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு