Published:Updated:

மூன்று மடங்கு, நான்கு மடங்கு மின் கட்டணப் புகார்கள்... உண்மைநிலைதான் என்ன?

மக்களுக்கு இந்தச் சந்தேகம் ஏற்படவும் சில நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கொரோனா ஊரடங்கின் காரணமாக, ரீடிங் எடுக்க ஊழியர்கள் வர இயலாத காரணத்தால் பல இடங்களில் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதத்துக்கு, முந்தைய மாதக் கட்டணத்தையே கட்டலாம் என மின்சார வாரியம் தெரிவித்திருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB கொரோனா லாக் டௌனில் கொள்ளை அடிக்கிறது என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?'' என நடிகர் பிரசன்னா ஒரேயொரு ட்வீட் போட, எனக்கு மூன்று மடங்கு அதிகம், நான்கு மடங்கு அதிகம் எனப் பல குரல்கள் தமிழக முழுவதும் ஒலிக்கத் தொடங்கின. இதற்கு முந்தைய மாதங்களில் வந்த மின் கட்டண அளவையும், தற்போது வந்திருக்கும் அளவையும் ஸ்கீரீன் ஷாட் எடுத்து பலரும் தங்களின் ட்விட்டர் பக்கங்களிலும் ஃபேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்தார்கள். மின் கணக்கீடு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, டி.டி.வி தினகரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

Prasanna twit
Prasanna twit

அதேவேளையில் பிரசன்னாவிடமிருந்து உடனடியாக மறுப்பு அறிக்கை ஒன்று வந்தது. அதில், ''ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாள்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌, மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்தத் தவறியது உண்மைதான். அதே அளவு இதற்கு முன்‌ காலதாமதமின்றித் தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வதுபோல்‌ நான்கு மாதக் கணக்கீட்டாலும்‌ மார்ச்‌ மாதக் கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்குத் தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்னையாக இதை நான்‌ எழுப்பவில்லலை'' என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

மின் நுகர்வோரைக் குழப்பத்தில் ஆழ்த்தி மக்களை சுரண்டும் நிலைக்கு மின்வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களை துயரப் படுகுழியில் தள்ளக்கூடாது.
வைகோ

அதேபோல, கிரிக்கெட் வர்ணனையாளர், மருத்துவர் சுமந்த் சி ராமனும் இதே போல, மார்ச் மாத மின் கட்டணத்தைவிட நான்கு மடங்கு அதிகமாக கட்டண வந்திருப்பதாக ட்வீட் செய்திருந்தார். தொடர்ந்து, கடந்த வருடம், கோடைக்காலத்தில் வந்ததை, விட 15 சதவிகிதம் மட்டுமே அதிகமாக வந்திருப்பதாகவும் அதனால் மின் கணக்கீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் மீண்டும் ரீ ட்வீட் செய்து விளக்கமளித்தார்.

இதேபோல. கட்டணம் அதிகமாக வந்துவிட்டது என சமூக வலைதளங்களில் பதிவிட்ட பலரையும் நாம் தொடர்பு கொண்டு பேசியபோது, பெரியளவில் குளறுபடிகள் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒருசிலரோ, அவர்கள் சொன்னார்கள், நண்பர் ஒருவருக்கு அதிகமாக வந்ததாகச் சொன்னார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களையே தந்தார்கள்.

Sumanth tweet
Sumanth tweet

அதேவேளையில், மக்களுக்கு இந்தச் சந்தேகம் ஏற்படவும் சில நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ''கொரோனா ஊரடங்கின் காரணமாக, ரீடிங் எடுக்க ஊழியர்கள் வர இயலாத காரணத்தால், பல இடங்களில் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதத்துக்கு, முந்தைய மாதக் கட்டணத்தையே கட்டலாம்'' என மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. அப்படி, ''கடந்த மாதக் கணக்கீட்டுத் தொகையின்படி மின் கட்டணம் செலுத்திய, நுகர்வோர்களுக்கு அடுத்த மின் அளவீடு கணக்கெடுக்கப்படும் போது, மின் கணக்கீடானது இரண்டு இருமாத (அதாவது 4 மாதங்கள்) மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும். அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவீட்டுக்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும்'' எனவும் மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. தவிர கட்டணம் கட்டுவதற்கும் பல நாள்கள் கால நீட்டிப்பும் தந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்குப் பிறகுதான் ஆரம்பித்தது பஞ்சாயத்து. மீட்டர் ரீடிங் எடுக்க வருபவர்களிடம் கட்டிய பணத்தைக் கழிக்காமல், அதற்கான யூனிட்டைக் கழிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. அது மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கியது. ஆனால், விகடன் சார்பாக அப்போதே இது போலியான தகவல் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும், கட்டணம் எப்படி வசூலிக்கப்படுகிறது என்பது குறித்தும் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

வதந்திகளை நம்ப வேண்டாம்... மின் கட்டணம் கணக்கிடப்படும் முறை இதுதான்! #VikatanFactCheck

தற்போது, மின் கட்டணம் தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் இருந்தால், பக்கத்தில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம் என மின்சார வாரியமும், வாரியத்தின் அமைச்சர் தங்கமணியும் விளக்கமளித்துள்ளனர். இருந்தும் கூட பலருக்கு சந்தேகம் தீராததால், சிலரின் மின் கணக்கீட்டுத் தகவல்களைப் பெற்று, ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரும், இந்திய ஊழல் ஒழிப்புக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான செல்வராஜிடம் அனுப்பி செக் செய்தோம்.

செல்வராஜ்
செல்வராஜ்

''வழக்கமாக மற்ற மாதங்களைவிட கோடைக்காலத்தின் மின் பயன்பாடு என்பது அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அதிகமான கட்டணம் வரும். தவிர, ஊரடங்கின் காரணமாக இரண்டு மாதங்களாக பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இரவில் செலவாகும் அதே மின்சாரம் பகலிலும் ஆகும். அதனால் இரண்டு மடங்கு மூன்று மடங்கு கட்டணம் வந்திருக்கிறது. தவிர ஏ.சி பயன்பயன்படுத்தும் பலர், ஏ.சியை நன்றாக குளுமையாக வைத்துவிட்டு, போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். எதற்கு அவர்கள் ஏ.சி பயன்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை. சரியான அளவில் வைத்துப் பயன்படுத்தினால் தேவையற்ற மின் விரயம் ஏற்படாது. தற்போது பலருக்கு அதிகரித்திருக்கும் மின் கட்டணம் என்பது முழுக்க முழுக்க அவர்களின் பயன்பாட்டின் காரணமாகவே வந்திருக்கிறது. மின் கணக்கீட்டில் எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை'' என அடித்துச் சொன்னார் அவர்.

மின் கணக்கீடு செய்ததில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்றாலும், மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக வந்திருக்கிறது என்பது உண்மைதான். ''அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுத்தான் மக்கள் வீட்டுக்குள் இருந்தார்கள். அதன் காரணமாகவே மின் பயன்பாடு அதிகரித்து தற்போது கட்டணம் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. அதனால் அரசாங்கம் சில சலுகைகளை அறிவிக்க வேண்டும்" என்கிற கோரிக்கைகளும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

மின் கட்டணத்தை பொறுத்தவரை ஜனவரியில் என்ன கட்டணமோ அதைச் செலுத்த வேண்டும் எனச் சொல்லியிருந்தோம். இப்போது புதிதாக கணக்கு எடுக்கிறோம். ஏற்கெனவே இரண்டு மாதங்களுக்கும் தற்போது எடுத்த இரண்டு மாதங்களும் சேர்த்து நான்கு மாதமாகிறது. அந்த நான்கு மாதத்துக்கும் இரண்டு மாதத்துக்கு உண்டானதை யூனிட் பிரித்துக் கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு பில் தொகையை அனுப்பி வருகிறோம். மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்.
மின்துறை அமைச்சர் தங்கமணி

இது குறித்து, நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்,

"தமிழக மின்சார வாரியம் கடந்த 4 மாதங்களுக்கான மின்கட்டணத்தைத் தற்போது வசூலிக்கிறது. கொரோனாவுக்காகத் தள்ளி வைக்கப்பட்ட இந்த வசூல், கொரோனா தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக்கொண்டிருப்பது தள்ளி வைத்ததன் நோக்கத்தையே சிதைக்கிறது. இந்த மாதங்களில் அரசு ஊரடங்கை அமல்படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். கோடைக்காலம் என்பதால், நாள் முழுவதும் மின்விசிறிகள் இயக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. அடைந்து கிடந்த மக்கள் வேறு வழியின்றித் தொலைகாட்சி பெட்டிகளுக்கு முன்பு கூடியிருப்பதும், தவிர்க்க முடியாததாகி போனது. இதுபோன்ற காரணங்களால் மக்களின் மின்சாரப்பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

வேலையில்லை, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டுதான், அரசு ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கியது, செலவுக்கு 1000 ரூபாயை நிவாரணமாகக் கொடுத்தது, இப்படி ஒரு சூழலில் கட்ட முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது. அரசின் கணக்கீட்டு முறை 500 யூனிட்டுகளுக்கு மேல் போகும்போது அடுத்த கணக்கீட்டு விகிதத்துக்கு மாறி விடுகிறது. இதன் காரணமாக கட்டணம் இரு மடங்காகி விடுகிறது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

ஒட்டு மொத்த மின்கட்டணத்தையும் அரசு தள்ளுபடி செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் தற்போதுள்ள வருமானமற்ற சூழ்நிலையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 500 யூனிட்டுக்கு அதிகமாகப் பயன்படுத்தினாலும், 500 யூனிட்டுக்குக் கீழே என்ன கட்டண விகிதம் கணக்கிடப்பட்டதோ, அதே கட்டண விகிதத்தையே 500 யூனிட்டுக்கு மேலே பயன்படுத்துவோருக்கும் கணக்கிடப்பட வேண்டும். கொரோனா நெருக்கடிகள் தீரும் வரை இத்தகைய கணக்கீட்டு முறையையே செயல்படுத்த வேண்டும். தவிர, மிகக்குறைந்த யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்திய வீடுகளில் கூட பல மடங்கு மின்கட்டணம் செலுத்த வேண்டுமென வந்துள்ளது. பூட்டியே கிடந்த வீடுகளுக்குக் கூட மின்கட்டணம் ரூபாய் 1000, 2000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும்.'' என்கிறார் அவர்.

சராசரியாக ஒரு நாளைக்கு 8 யூனிட் மின்சாரம் செலவழிக்கும் ஒரு குடும்பம் கூடுதலாக ஒரு நாளைக்கு 1/2 யூனிட் அதிகமாகச் செலவழித்தாலே அந்தக் குடும்பம் 1130 ரூபாய்க்குப் பதிலாக 1846 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி வரும், கூடுதலாக ஒரு நாளைக்கு அரை யூனிட் மின்சாரம் செலவழித்த ஒரே காரணத்தினால் 716 ரூபாய் கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது அரசு கொடுத்த 1000 ரூபாயை அப்படியே பறித்துக் கொள்வதற்குச் சமமானது.
கே.பாலகிருஷ்ணன்
`செப்டம்பர் இறுதியில் கொரோனா உச்சநிலை... அதன்பிறகு என்னவாகும்?' - கணிக்கும் மருத்துவர்

"ஏற்கெனவே வாடகை வசூலிக்கக் கூடாது என அரசு அறிவித்தும் பல இடங்களில் அது கடைபிடிக்கப்படவில்லை. வாடகை கொடுக்காததால், பல இடங்களில் வீடுகளைக் காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் வழக்கத்தை விட அதிகமான மின் கட்டணம் கட்ட வேண்டிய சூழல் வந்தால் மக்கள் இன்னும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். அதனால், ஒட்டுமொத்தமாக  மின் கட்டணத்தை ரத்து செய்து அரசு உத்தரவிட வேண்டும்'' என்பதே எங்களின் கோரிக்கை என்கிறார், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் பால் பர்ணபாஸ்.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

இது தொடர்பாக பேச, மின்துறை அமைச்சர் தங்கமணியைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள இயலாத காரணத்தால், அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் இந்தக் கோரிக்கைகள் குறித்துப் பேசினோம்,

"கட்டணத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால், மின்வாரிய அலுவலகங்களில் கேட்டுத் தெளிவு பெறலாம். கட்டணம் செலுத்த கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கிறது. கட்டணத்தைத் தள்ளுபடி செய்யவோ, சலுகைகள் அளிக்கவோ தற்போதுள்ள சூழலில் வாய்ப்புகள் இல்லை" எனத் தெரிவித்தார். 

கொரோனா நெருக்கடி காலகட்டத்தில், அதிகமான கட்டணம் செலுத்துவதிலிருந்து, விலக்களித்து நெருக்கடியிலிருந்து தங்களைக் காக்க வேண்டும் என்பதே பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அரசு செவிமடுக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு