Election bannerElection banner
Published:Updated:

பிரதாப் பானு மேத்தாவின் பதவி விலகல் எழுப்பும் கேள்விகள்!

அசோகா பல்கலைக்கழகம்
அசோகா பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்துடனான தன்னுடைய தொடர்பு, பல்கலைக்கழகத்துக்கு ‘அரசியல் நெருக்கடி’யாக இருக்கிறது என்பதை அறிந்த மேத்தா, பேராசிரியர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

சமகால இந்தியாவின் முதன்மைச் சிந்தனையாளர்களில் ஒருவர், கூர்மையான அரசியல் விமர்சகர், அறிவுஜீவி பிரதாப் பானு மேத்தா. அசோகா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பேராசிரியர் பதவியிலிருந்து கடந்த வாரம் விலகியிருப்பது இந்திய அறிவுப்புலத்தில் சலனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

நாளிதழ் ஒன்றின் பங்களிப்பு ஆசிரியராகவும் உள்ள மேத்தா, சமகால இந்தியாவின் அரசியல் போக்குகள் குறித்துத் தொடர்ச்சியாக அதில் எழுதிவந்தார். பா.ஜ.க மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைத்த அவருடைய கட்டுரைகள் அரசியல், கல்வி வட்டங்களில் ஆழ்ந்து வாசிக்கப்பட்டன.

இந்தியாவின் மிகச் சிறந்த தனியார் பல்கலைக்கழகம் என்று கருதப்படும், ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியராக மேத்தா பணியாற்றிவந்தார். முன்னதாக இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த மேத்தா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அப்பதவியிலிருந்து விலகி, பேராசிரியராக மட்டும் செயல்பட்டுவந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அவர் கூறினாலும், அதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்றும் அப்போது பேசப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் அசோகா பல்கலைக்கழகத்தின் நிறுவனர்கள் சிலருடனான சந்திப்பில், பல்கலைக்கழகத்துடனான தன்னுடைய தொடர்பு, பல்கலைக்கழகத்துக்கு 'அரசியல் நெருக்கடி'யாக இருக்கிறது என்பதை அறிந்த மேத்தா, பேராசிரியர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேத்தா -  மோடி
மேத்தா - மோடி
World Economic Forum
மேத்தா பதவி விலகியிருக்கும் விதம் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிர்வுகளையும், இந்தியாவில் சுதந்திரவாதச் சிந்தனையின் (liberal thought) போக்கு குறித்த ஆழமான கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

மேத்தாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக, பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த, இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியனும் பதவி விலகியிருக்கிறார். “ஒரு தனியார் பல்கலைக்கழகமாக இருந்தபோதிலும், கல்வியியல் வெளிப்பாட்டுக்கும் சுதந்திரத்துக்குமான வெளியை அசோகாவால் வழங்கமுடியவில்லை” என்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் அரவிந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

இருவரின் பதவி விலகல் குறித்து அதிர்ச்சியடைந்த கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல தரப்பினரும், இந்தியாவில் இன்றைக்குக் கருத்துரிமை, கல்விச் சுதந்திரம் ஆகியவற்றின் நிலை குறித்தும், அசோகா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் நோக்கம் இன்று சிதைந்து கொண்டிருப்பது குறித்தும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். மேலும், கொலம்பியா, ஆக்ஸ்ஃபோர்டு, யேல் உள்ளிட்ட உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் மேத்தா பதவி விலகும் நிலை ஏற்பட்டது குறித்த விமர்சனத்தைப் பகிரங்கக் கடிதம் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின்
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின்

மேத்தாவின் பதவி விலகல் குறித்த செய்திகள் மாணவர்களிடையே பரவிக்கொண்டிருந்த நிலையில், வகுப்புக்குள் நுழைந்த மேத்தாவை மாணவர்கள் அதிர்ச்சியுடனும் ஏமாற்றத்துடனும் எதிர்கொண்டனர்; ராஜினாமாவுக்கான காரணத்தை வினவினர். “விஷயம் அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். நாட்டின் சக்திவாய்ந்த அமைப்புகளில் இரண்டான பாலிவுட்டும் உச்ச நீதிமன்றமும் வீழும்போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் புள்ளிகளை இணைப்பதுதான்” என்று மேத்தா அவர்களுக்குப் பதிலளித்தார்.

மேத்தா பேராசிரியர் பதவியிலிருந்து விலகியிருப்பது ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது? பிரதாப் பானு மேத்தா யார்? அசோகா பல்கலைக்கழகம் என்பது என்ன?

இந்தியாவின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராக இன்று விளங்கும் பிரதாப் பானு மேத்தா, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை முடித்தார்; பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். American Political Science Review, the Journal of Democracy, India and Global Affairs உள்ளிட்ட ஆய்விதழ்களின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகிக்கும் மேத்தா, இந்தியாவின் முதன்மைச் சிந்தனை மையங்களில் ஒன்றான, Centre for Policy Research-ன் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார். மேலும், தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, தேசிய அறிவுசார் ஆணையம், இந்தியப் பல்கலைக்கழகங்களில் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் அமைத்த குழு ஆகியவற்றில் மேத்தா பங்கெடுத்திருக்கிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் பேராசிரியர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசாங்கப் படிப்புகளுக்கு வருகைதரு பேராசிரியர், சமூகவியல் படிப்புகளுக்கு இணைப் பேராசிரியர், தில்லி ஜே.என்.யூ-வில் சிறிது காலம் சட்டம் மற்றும் அரசாங்கத் தத்துவத் துறைப் பேராசிரியர் என மதிப்புமிக்க கல்விப்புலப் பின்னணியைக் கொண்டிருக்கும் மேத்தா, அசோகா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் ‘இந்திய நாகரிகம்’, ‘மேற்கத்திய அரசியல் சிந்தனை’ ஆகிய பாடங்களை நடத்திவந்தார்.

பிரதாப் பானு மேத்தா
பிரதாப் பானு மேத்தா

ஹரியானா மாநிலம் சோனிபாட்டில், ராஜீவ் காந்தி எஜுகேஷன் சிட்டி என்ற பகுதியில் 10 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக, சுமார் 25 ஹெக்டேருக்குப் பரவியிருக்கிறது அசோகா பல்கலைக்கழகம். ஒரு சுதந்திரவாதக் கல்வி நிறுவனமாக அசோகா பல்கலைக்கழகம் 2014-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்தியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. கலை, அறிவியல் படிப்புகளுக்கான தனியார் உயர்கல்வி நிலையங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இந்தப் பின்னணியில், இந்தியாவில் உயர்கல்வியில் ‘சுதந்திரவாதக் கலைகள்’ என்று வழங்கப்படும் கலை, அறிவியல் துறைப் படிப்புகளை உலகத் தரத்தில் கிடைக்க வழிசெய்யும் நோக்கில், சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள், கொடையாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பில் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரதாப் பானு மேத்தாவைப் போன்ற உலகின் முதன்மைச் சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் பேராசிரியர்களாகப் பணியாற்ற இங்கு அழைக்கப்பட்டனர். இந்தியவியல் அறிஞரான ஷெல்டன் போலக் தன்னுடைய நூலகத்தையும், காலமாகிவிட்ட தன்னுடைய மனைவியின் நூலகத்தை ஒட்டுமொத்தமாக அசோகாவுக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார். தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே இப்படிப் பட்ட செயல்பாடுகள் மூலம் கல்விப் புலத்தில், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தித் தொடங்கிய அசோகா, தனியார் மூலதனத்தில் இயங்கும் பல்கலைக்கழகமாக இருந்தபோதிலும் அரசுக்குப் பணிந்துவிட்டதால், மேத்தா போன்ற சிந்தனையாளர்கள் அங்கு தொடர்ந்து இயங்க முடியாத சூழல் உருவாகிறது.

“இது 100 சதவிகிதம் தனியார் முதலீட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பல்கலைக்கழகம். தனிப்பட்ட ஒரு குடும்பமோ, தொழில்முனைவோரோ இல்லாமல் சுமார் 150 பேரை நிறுவனர்களாகக் கொண்டு இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்பு துணைவேந்தராக இருந்த பிரதாப் பானு மேத்தா, ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக அப்பதவியிலிருந்து விலகினார்; தற்போது தன்னுடைய எழுத்துகள் பல்கலைக்கழகத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து பேராசிரியர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது அவர் எடுத்த முடிவு என்றபோதிலும், நிர்வாகம் கண்டிப்பாக இதைத் தவிர்த்திருக்க வேண்டும்; பல்கலைக்கழகத்துக்கு நெருக்கடி என்று ஏன் அவர்கள் நினைக்கிறார்கள் என்பதில்தான் பிரச்னையே. மேலும் அரசாங்கம் கருத்துரிமை, பேச்சுரிமையை எப்படிக் கையாள்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. நாளையே வகுப்பில் ஜனநாயகம், குடிமக்களின் பொறுப்பு, கருத்துரிமை குறித்தெல்லாம் மாணவர்களிடம் எப்படிப் பேசுவது? இந்திய ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது!” என்கிறார் அசோகா பல்கலைக்கழக மானிடவியல் துறைப் பேராசிரியர் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன்.

ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன்
ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன்

கருத்துச் சுதந்திரம் சார்ந்த பிரச்னை அசோகா பல்கலைக்கழகத்தில் எழுவது இது முதல் முறை அல்ல; 2016-ம் ஆண்டு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் படைத் தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதையடுத்து நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்தும், ஜம்மு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் மனு ஒன்றில் கையெழுத்திட்டது சம்பந்தமாகப் பேராசிரியர் ஒருவரும், நிர்வாகப் பணியாளர்கள் இரண்டு பேரும் பதவி விலகினர். “சுதந்திரம், அனைத்துக் குடிமக்களுக்குச் சம மரியாதை என அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு மரியாதை செய்ய முயலும் அரசியலுக்கு என்னுடைய எழுத்துகள் ஆதரவளிக்கின்றன; இது பல்கலைக்கழகத்துக்கு நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது” என்று மேத்தா தன்னுடைய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்பிரச்னை குறித்துப் பேச பிரதாப் பானு மேத்தாவைத் தொடர்பு கொண்டபோது, “தற்போதைய சூழலில் கருத்து கூற விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.

தற்போதைய சூழலில் கருத்து கூற விரும்பவில்லை
பிரதாப் பானு மேத்தா

எழுத்தாளரும், விமர்சகரும், தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ராஜன் குறை கிருஷ்ணன், இப்பிரச்னை குறித்துப் பேசும்போது, “இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க-விற்குக் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், அறிவுப் புலத்தில் ஒரு பேராசிரியர், அரசை விமர்சித்து எழுதினால், அதற்கு அந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியவர்கள், தங்கள் நிறுவனத்துக்கு நல்லதல்ல என்று கூறுவதைப் பாருங்கள். இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது ஆச்சர்யமாக இல்லை? மக்கள் பேச முடியாமல் இருக்கும்போது, சக்திவாய்ந்த பணக்காரர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் சிவில் சமூகத்தின் அடிப்படை. அரசியல் கோட்பாட்டில் சிவில் சமூகம் என்பது, அரசாங்கம் தவறு செய்யும்போது, சமூகத்தில் பணக்காரர்கள், அறிஞர் பெருமக்கள், செல்வாக்கு உள்ளவர்கள் அந்தத் தவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால், சக்திவாய்ந்தவர்கள் அரசாங்கத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்; ஆனால் சாதாரண மக்கள் அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள்; இது தலைகீழாக இருக்கிறது” என்றார்.

ராஜன் குறை கிருஷ்ணன்
ராஜன் குறை கிருஷ்ணன்

எந்த நிபந்தனையும் இன்றி மேத்தாவை மீண்டும் பணிக்கு அழைக்க வேண்டும் என்று அசோகா பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். எனினும், “பதவி விலகலுக்கு வழிவகுத்த அடிப்படைச் சூழ்நிலைகள் எதிர்வரும் காலத்தில் மாறாது, என் விஷயத்தில், எந்த வகையிலும்” என்று மாணவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தன் நிலைப்பாடு குறித்து மேத்தா தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும், “நாம் சிக்கலான காலகட்டத்தில் வாழ்கிறோம். இந்தியா படைப்பாற்றலுடன் வெடிக்கிறது. ஆனால் சர்வாதிகாரத்தின் இருண்ட நிழல்களும் நம்மீது சுற்றிக்கொண்டிருக்கின்றன. நம் அனைவரையும் அடிக்கடி சங்கடமான மற்றும் சில நேரங்களில் நேர்மையற்ற நிலைகளில் ஆழ்த்துகின்றன. இந்த நிலையைச் சமாளிப்பதற்கான கொள்கை ரீதியான மற்றும் அறிவார்ந்த வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்'' என்றும் மாணவர்களுக்கு அக்கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

“நிறுவனச் செயல்முறைகளில் சில குறைபாடுகள் இருக்கின்றன; அனைத்துப் பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்துச் சரிசெய்ய நாங்கள் செயல்படுவோம்” என்று மேத்தாவின் பதவி விலகலையடுத்து கூட்டு அறிக்கை ஒன்றைப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தின் ஒருமைப்பாடு என்பது அதன் தலைவர் மற்றும் துணைவேந்தரின் கைகளில் உள்ளது. ஆனால், மேத்தாவின் பதவி விலகலுக்கு வழிவகுத்த கூட்டத்தில் அசோகா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பங்கெடுக்கவில்லை. இது பல்கலைக்கழகத்தின் தலைவரான துணை வேந்தரின் மேற்பார்வைக்குப் பதிலாக, நிதி வழங்குநர்களின் விருப்பப்படி எவ்வாறு இயங்குகிறது என்பதை இது வெளிச்சத்துக் கொண்டுவந்திருக்கிறது.

மேத்தாவின் பதவி விலகல் செய்தி வெளிவருவதற்கு முந்தைய நாள்களில், இந்தியாவில் உயர்கல்வியில் கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற புதிய கல்விக் கொள்கையின் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பேராசிரியர்கள் எழுதக் கூடாது; மாணவர்கள் படிக்கக் கூடாது!

இந்தியா பின்னோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு