Published:Updated:

சர்ச்சை:`கூட்டுறவுப் பொருள்களை வாங்கினால்தான் ரேஷன்!’ - கட்டாயப்படுத்தும் கடை ஊழியர்கள்

ரேஷன் கடை
ரேஷன் கடை ( விகடன் )

சென்னை ஜி.கே.எம் காலனியில் அமைந்துள்ள ஒரு ரேஷன் கடையில் கூட்டுறவு சங்கப் பொருள்களை வாங்குமாறு பொதுமக்களை ஊழியர்கள் வற்புறுத்துகின்றனர் என்று கண்ணீர் வடிக்கின்றனர் மக்கள்.

தமிழகத்தில் இயங்கும் பல நியாய விலைக்கடைகளில் கூட்டுறவு சங்கப் பொருள்களைக் கட்டாயப்படுத்தி விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ஜி.கே.எம் காலனியில் அமைந்துள்ள ஒரு நியாயவிலைக் கடையில் கூட்டுறவு சங்கப் பொருள்களை வாங்குமாறு பொதுமக்களை ஊழியர்கள் வற்புறுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். 'கொரோனா காலத்தில் சிரமப்படும் வேளையில் இப்படிச் செய்வது நியாயமா?' எனவும் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஜி.கே.எம் காலனியில் உள்ள கடைகள்
ஜி.கே.எம் காலனியில் உள்ள கடைகள்
பாலமுருகன்

"அப்படிக் கட்டாயப்படுத்தி விற்கப்படும் பொருள்களில் விலையும் ஒட்டப்பட்டு இருப்பதில்லை. மளிகைக் கடைகளில் விற்கப்படும் விலையைவிட இங்கு அதிக விலை வைத்து பொருள்கள் விற்கப்படுகின்றன. மேலும், வாங்கும் பொருள்களுக்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை. இது வரை இரண்டு முறை ஆப் மூலமாகப் புகார் அளித்துள்ளோம். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அக்கடையின் அட்டைதாரர் ஒருவர் புகார் தெரிவிக்கிறார்.

கடையில் பணி செய்யும் ஊழியர்களிடம் இதற்கான காரணத்தைக் கேட்டபோது, ``இந்தக் கடை சிந்தாமணி கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படுகிறது. எங்களுக்குச் சம்பளம் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. இப்பொருள்களை விற்று பெறும் வருமானத்தில்தான் கடைக்கான வாடகையைக் கட்ட முடியும்" என்று கூறுகின்றனர். அவர்கள் கூறுவது ஒருவேளை உண்மையாக இருந்தாலும், விலைகளை அச்சிடாமல் பொருள்களை விற்பது ஏன் என்றும் வாங்கிய பின் ரசீது தராததற்கு என்ன காரணம் என்றும் அப்பகுதி மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

பெரியப்பட்டி
பெரியப்பட்டி

இதேபோல், குரோம்பேட்டை லஷ்மிபுரம் பகுதியில் உள்ள கடையிலும், ஒவ்வொரு ஸ்மார்ட் அட்டைதாரரும் ஏதேனும் ஒரு பொருளைக் கட்டாயமாக வாங்க வேண்டும் என்று நியாய விலைக்கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மேலும், விழுப்புரம் மாவட்டத்தின் ஆனாங்கூர் பகுதியில் அமைந்திருக்கும் கடையின் கீழ் ஸ்மார்ட் அட்டை வைத்திருக்கும் ஒருவர், ``மே மாதத்தில் 50 ரூபாய் கொடுத்து இரண்டு தேயிலை பாக்கெட்டுகளை வாங்க வைத்தார்கள். ஜூன் மாதத்தில் 22 ரூபாய் என்று விலை அச்சிடப்பட்ட கபசுரக் குடிநீரை 30 ரூபாய்க்கு வாங்கச் செய்தார்கள். அதோடு 35 ரூபாய்க்கு தரமற்ற புளியும் வாங்க வைத்தார்கள். ஒரு முறை கடையின் ஊழியர்கள் 30 ரூபாய் இல்லாததால் வரிசையில் நிற்கவே விடவில்லை" என்று கவலை தோய்ந்த குரலில் தெரிவிக்கிறார்.

`எங்களுக்கு மட்டும் உயிர்  பயம் இல்லையா?' -நிவாரண அறிவிப்பால் கலங்கும் ரேஷன் ஊழியர்கள்

விருதுநகர் மாவட்டம் சித்துராஜபுரம் கிராமத்தின் நியாய விலைக் கடையிலும் இதேநிலைதான்.``பொருள்கள் வாங்கவில்லையெனில் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் திட்டுவார்கள். மளிகைக் கடையில் விதிக்கப்படும் விலையைவிட ரேஷன் கடையில் அதிக விலை வைத்து விற்கிறார்கள். 12.50 ரூபாய்க்குக் கடைகளில் விற்கப்படும் கடுகு 20 ரூபாய்க்கு இங்கு விற்கப்படுகிறது. மேலும் ரசீதும் கொடுப்பதில்லை" என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர்.

விலையும் தேதியும் ஒட்டப்படாமல் விற்கப்படும் பொருள்கள்
விலையும் தேதியும் ஒட்டப்படாமல் விற்கப்படும் பொருள்கள்
பாலமுருகன்

நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி என்ற இடத்தில் உள்ள நியாய விலைக் கடையில் புளி, பூண்டு, மிளகாய், கோதுமை மாவு போன்ற பொருள்களை வாங்கச் சொல்லி மக்களை ஊழியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். வாங்கும் பொருள்களுக்கு ரசீதாக துண்டுச் சீட்டில் எழுதித்தருகின்றனர்; இப்பொருள்களை விற்றே ஆக வேண்டும் என்று ஊழியர்களுக்கு மேல் இடத்திலிருந்து அழுத்தம் கொடுப்பதாகவும் மக்களிடம் கூறுகிறார்களாம்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கடைகளில் மட்டுமல்லாது இத்தகைய சம்பவங்கள் தமிழ்நாட்டின் பல நியாய விலைக்கடைகளில் நடைபெற்று வருகின்றன. தங்களுக்கு தேவையற்ற ஒரு பொருளை வாங்குவதற்கு நுகர்வோர் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்; விலையும் அதிகமாக வைத்து பொருள்கள் விற்கப்படுகின்றன என்பதே மக்களின் புகாராக உள்ளது. மேலும், இத்தகைய சம்பவங்கள் நடக்காதிருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு