Published:Updated:

`கொடுக்காப்புளி சாப்பிடுங்க... கொரோனா வராது!' -சர்ச்சையை ஏற்படுத்திய புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

”கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது” என்று புதுச்சேரியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மருத்துவரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அதேசமயம், இந்தியாவில் அதன் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் மக்கள். அதைப் பயன்படுத்தி, நிரூபிக்கப்படாத பல்வேறு போலி வைத்திய முறைகளை சமூக வலைதளத்தில் சிலர் பரப்பிவருகின்றனர்.

விழாவில் கிரண்பேடி
விழாவில் கிரண்பேடி

இந்த வரிசையில், பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்காது என்ற தகவல் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. ஆனால், அந்தத் தகவல் நிரூபிக்கப்படவில்லை என்று விளக்கமளித்தது உலக சுகாதார நிறுவனம்.

இந்நிலையில் கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது என்று புதுச்சேரியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் நேற்று மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருது வழங்கினர்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

விழாவில் கலந்துகொண்டு பேசிய காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், “தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸைத் தடுக்க எளிய வழிமுறைகள் இருக்கின்றன. கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது. அத்துடன் காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், கொரோனா நம்மை நெருங்கவே பயப்படும்.

அறை எண் 215ல் கொரோனா... ராஜீவ் காந்தி மருத்துவமனை நிலவரம் என்ன? #spotvisit

அதேபோல காலை மற்றும் மாலையில், அரை மணி நேரம் வெயிலில் வியர்வை வரும் வரை நிற்க வேண்டும். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பூரிக்குப் பதிலாக பழைய சாதத்தை காலை உணவாகக் கொடுத்தால் மரணம்கூட கிட்டே நெருங்காது” என்று பேச, மேடையிலிருந்த முதல்வரும் அமைச்சரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார்
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார்

இதுகுறித்து விளக்கம் கேட்க, எம்.எல்.ஏ ஜான்குமாரைத் தொடர்புகொண்டபோது, “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் குணம் கொடுக்காப்புளிக்கு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தது. அதனடிப்படையில்தான் கூறினேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு