Published:Updated:

`கொரோனா பிரிவிலேயே சாதாரண மக்களுக்கும் சிகிச்சை!'- கொந்தளிப்பை ஏற்படுத்திய புதுச்சேரி அரசின் முடிவு

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனையின் வளாகத்திலேயே, சாதாரண மக்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மேற்கொண்டிருக்கிறது.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் முதலே புதுச்சேரி அரசு மருத்துவமனை, இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகள் குறைக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இதில், கதிர்காமத்தில் இருக்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்துத் துறைகளும் நிறுத்தப்பட்டு, எந்தவித முன்னேற்பாடுகளுமின்றி ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது, புதுச்சேரியில் கொரோனா தொற்று 104 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், 42 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட 62 பேர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இந்நிலையில்தான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றிய பின்பு, மற்ற துறைகள் அங்கு செயல்படவில்லை. அதனால் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலர், தலைமைச் செயலரை அழைத்துப் பேசி அனைத்துவித மருத்துவமும் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து நேற்று மாலை முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் கொரோனா தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளை மூன்றாவது தளத்துக்கு மாற்றிவிட்டு, மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, அறுவைசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் வருகின்ற திங்கள்கிழைமை முதல் தொடங்குவதற்கு முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத்துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, ``அரசின் இந்த முடிவு மிகவும் அபாயகரமானது மட்டுமல்லாமல், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கும் எதிரானது. கொரோனா தொற்றுக்காக ஏற்படுத்தப்படும் மருத்துவமனை முழு மருத்துவமனையாகத் தனியாகச் செயல்பட வேண்டும் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வளாகத்தில் செயல்பட வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது அரசின் இந்த யோசனையை எப்படிச் செயல்படுத்த முடியும்?

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்
ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்

அப்படிச் செயல்படுத்தினால் ஒருசில வாரங்களிலேயே புதுச்சேரியில் கொரோனா தொற்று 20,000-த்தைத் தொட்டுவிடும். தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்படும் ஒருவரும், வேறுசில நோய்களால் பாதிக்கப்பட்டவரும் ஒரே மருத்துவமனைக்குச் செல்லும்போது கொரோனா தொற்று ஏற்படதா? வாகனம் நிறுத்துமிடம், சீட்டு பதியுமிடம் போன்ற இடங்களை எப்படிச் சமாளிப்பார்கள்.

ஆகஸ்ட் மாதம் மருத்துவக் கல்லூரி செயல்படும்பட்சத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களை அனுப்புவார்கள்... தவிர மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாதச் சூழலில், கொரோனா பணியையும் கூடுதலாக அவர்களால் எப்படிப் பார்க்க முடியும்?

வகுப்பெடுக்க பேராசிரியர்கள் எப்படி கல்லூரிக்கு வருவார்கள். தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அந்தத் தெருவையே சீல் வைக்கும் அரசு, 62 கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான மக்களை அன்றாடம் அனுமதித்தால் என்ன ஆகும்... கடும் இடநெருக்கடியுடன் இயங்கிக்கொண்டிருக்கும் புதுச்சேரி அரசு மருத்துவமனையை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றிவிட்டு, அந்த மருத்துவமனையைக் கொரோனா மருத்துவமனையாக மாற்றலாம். அல்லது ஜிப்மர் மருத்துவமனையில் தனி வளாகமாகச் செயல்பட்டுவரும் கொரோனா பிரிவை பயன்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்கலாம்” என்றனர்.

`இது, கொரோனா நோயாளி பயன்படுத்திய படுக்கை!' - பதறவைக்கும் புதுவை அரசு மருத்துவமனை; அதிர்ச்சி வீடியோ

அடம்பிடிக்கும் ஜிப்மர் மருத்துவமனை:

புதுச்சேரியில் கொரோனா தீவிரமடையும் முன்பே `250 படுக்கைகளுடன் கொரோனா பிரிவை ஏற்படுத்தியிருக்கிறோம்’ என்று அறிவித்தது ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம். ஆனால், அதன்பிறகு நோய்த் தாக்கம் அதிகமானவர்களை மட்டுமே அனுமதிப்போம் என்று மழுப்பியதுடன், தமிழகத்திலிருந்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்போம் என்று கறார் காட்டிவருகிறது.

சமீபத்தில் ஜிப்மர் மருத்துவமனையின் ஓட்டுநர் மற்றும் அவரின் உறவினர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதில் இருவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை மட்டும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறது ஜிப்மர் நிர்வாகம். இந்த இக்கட்டான சூழலில் புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை ஜிப்மர் நிர்வாகம் உணர வேண்டும்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக்கூட வாங்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் புதுச்சேரி அரசு கவனமாகச் செயல்பட வேண்டிய தருணமிது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு