Published:Updated:

`ஊருக்கு மட்டும்தான் உபதேசமா அமைச்சரே?’ - சர்ச்சையில் சிக்கிய புதுச்சேரி அமைச்சர்

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

``கொரோனா பிரிவுக்கு புகைப்படக்காரர்களுடன் சென்று, நோயாளிகளின் முகம் தெரியும் வீடியோக் காட்சிகளை வெளியிட்டிருப்பது நியாயமா... ஊருக்கு மட்டும்தான் உபதேசமா அமைச்சரே” என்று சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கின்றனர் பொதுமக்கள்.

`ஊருக்கு மட்டும்தான் உபதேசமா அமைச்சரே?’ - சர்ச்சையில் சிக்கிய புதுச்சேரி அமைச்சர்

``கொரோனா பிரிவுக்கு புகைப்படக்காரர்களுடன் சென்று, நோயாளிகளின் முகம் தெரியும் வீடியோக் காட்சிகளை வெளியிட்டிருப்பது நியாயமா... ஊருக்கு மட்டும்தான் உபதேசமா அமைச்சரே” என்று சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கின்றனர் பொதுமக்கள்.

Published:Updated:
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி அரசு `கொரோனா’ சிறப்பு மருத்துவமனையிலுள்ள ஒரு கழிவறையை, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சுத்தப்படுத்துவது போன்று வெளியான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்வினைகளை எழுப்பியிருக்கின்றன.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரியில் கொரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கடந்த 29-ம் தேதி ஆய்வுக்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அங்கு சரியாகச் சுத்தம் செய்யப்படாத கழிவறை ஒன்றை, எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அங்கிருந்த பெண் பணியாளருக்குச் செய்து காட்டினார். அந்தப் புகைப்படம் மற்றும் வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. அதுதான் தற்போது விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. `அமைச்சரின் செயல் பாராட்டப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம், அங்கிருக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு சரிசெய்யாமல், இப்படியான வீடியோக்களை வெளியிடுவது வெற்று விளம்பரத்தைப் பெற்றுத்தருமே தவிர, அதனால் நோயாளிகளுக்கு எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை என்பது எப்படி அமைச்சருக்குத் தெரியாமல் போனது?’ என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆட்சிக்காலத்தில் `பல்நோக்கு ஊழியர்கள்’ என்ற பெயரில் சுமார் 700 பேர் இந்த மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஊழியர்கள் கழிவறைகள், சமையற்கூடம், அறுவை சிகிச்சைக்கூடங்கள், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுகள் எனச் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். இவர்களுக்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயும், அதிகபட்சம் 6,500 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் நாளொன்றுக்கு 10 பேர் கொரோனா தொற்றால் உயிரிழக்கிறார்கள். லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் மருத்துவர்களே உயிருக்கு பயந்துகொண்டிருக்கும் நிலையில், குறைந்த ஊதியத்தை பெறும் இவர்கள், முழுக்கவச உடைகளை சகித்துக்கொண்டு உயிர் பயத்துடன் பணி செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கழிவறைகள் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்தக் குழுவினரிடம் இந்தப் பணியை ஒப்படைத்தால், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வைக் காணலாம். மாநில அரசிடம் அதற்கான நிதி இல்லையென்றால், முதல்வரின் கொரோனா நிதியைப் பயன்படுத்தலாம். கடந்த மார்ச் மாதம் `கொரோனா’ சிறப்புப் பிரிவாக அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், முகக்கவசம், முழுக் கவச உடைகள், படுக்கைகள் பற்றாக்குறை போன்றவற்றுக்கு இன்றுவரை தீர்வு காணப்படவில்லை'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `ஆய்வுகளுக்குச் செல்வதை போட்டோகிராபர் மூலம் ஷூட் செய்து வெளியிடுகிறார்’ என்று ஆளுநர் கிரண் பேடியைக் கடுமையாகச் சாடிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்தான், தற்போது `கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது’ என்ற விதியைக் காற்றில் பறக்கவிட்டு, கொரோனா பிரிவுக்கு புகைப்படக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் சென்று, நோயாளிகளின் முகம் தெரியும் வீடியோக் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். இது நியாயமா? ஊருக்கு மட்டும்தான் உபதேசமா அமைச்சரே!” என்று சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கின்றனர் பொதுமக்கள்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

சில நாள்களுக்கு முன்னர் தனது தொகுதியான ஏனாமில் வெள்ளச் சேதத்தை பார்வையிடச் சென்ற அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இடுப்பளவு வெள்ளத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் புடைசூழ நின்றுகொண்டு பேட்டி கொடுத்த சம்பவத்துக்கு,`கடமை உணர்வுக்கு அளவே இல்லையா அமைச்சரே...’ என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism