Published:Updated:

புதுச்சேரி: `நாராயணசாமி Vs கிரண் பேடி; வாருங்கள்... வராதீர்கள்!’ - குழப்பும் `புத்தாண்டு அரசியல்’

கிரண் பேடி - நாராயணசாமி
News
கிரண் பேடி - நாராயணசாமி

புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு `வாருங்கள்’ என்று முதல்வர் நாராயணசாமியும், `வராதீர்கள்’ என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடியும் கூறிவரும் நிலையில், `குறைவான மக்களுக்கு மட்டுமே கடற்கரையில் அனுமதி’ என்ற போலீஸின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தொற்றுப் பரவலின் காரணமாக தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, `புதுச்சேரியிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இல்லை’ என்று கடந்த வாரம் அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க். ஆனால், `புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாடுவதற்குத் தடை இல்லை’ என்றும், `அதற்கு தடை விதிக்க யாருக்கும் அதிகாரமில்லை’ என்றும் கறார் காட்டினார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி
புதுச்சேரி

உடனே புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தடை செய்திருக்கும் மாநிலங்களைச் சுட்டிக்காட்டிய கிரண் பேடி,`மற்ற விஷயங்களைவிட மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு உடனே தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால், புதுச்சேரிக்குள் நுழையும் தமிழக மக்களால் கொரோனா தொற்று தீவிரமடையும்’ என்று நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதற்கு,`விழாக்களோ, கொண்டாட்டங்களோ இல்லாமல் இருப்பது கொரோனாவைத் தடுக்காது. அப்படித் தடுக்க முடியும் என்றால் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்’ என்று நாராயணசாமி பதிலளித்தார். இப்படிக் கடிதம் மற்றும் சமூக வலைதளங்களில் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட அயல் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி விடுதிகளில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நடத்தலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில், கட்டணத்தை மட்டும் இரு மடங்கு உயர்த்தி அறைகளை நிரப்பிவைத்திருக்கின்றன விடுதி நிர்வாகங்கள்.

மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைவர் செய்தியாளர் சந்திப்பு
மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைவர் செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரியின் ஒயிட் டவுன் முழுவதும் திருப்பதி தேவஸ்தானத்தில் கட்டியிருப்பதைப் போன்று மரக்கட்டைகளைக் கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறைத் தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா, மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் மற்றும் கூடுதல் காவல்துறை தலைவர் ஆனந்த மோகன் ஆகியோர், ``புதிதாகப் பரவும் கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரியில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அண்டை மாநிலங்களில் கொண்டாட்டம் தடை செய்யப்பட்டிருப்பதால், நிறைய சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால் புதுச்சேரி மக்கள் வெளியே வரும்போது சுகாதார பாதுகாப்புகளைக் கடைபிடிப்பது அவசியம். கடற்கரையிலுள்ள குறைவான இடத்துக்கு ஏற்றாற்போலும் சுற்றுலாப் பயணிகளும், மக்களும் அனுமதிக்கப்படுவார்கள். தடுப்புகள் அமைக்கப்பட்டு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் 31-ம் தேதி பகல் 2 மணிக்கு பிறகு மறுநாள் காலை 9 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. எல்லைகளில் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு நோய்த் தொற்று சந்தேகம் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். கடற்கரை சாலையில் மது அருந்துவதற்கும், கடற்கரைப் பாறைகளில் நிற்கவும், உணவு விடுதிகள் மற்றும் கடற்கரை விடுதிகளில் புத்தாண்டு கேளிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

தடுப்புக் கட்டைகள்
தடுப்புக் கட்டைகள்

அதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உண்டா... இல்லையா... என்று புதுவை மக்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் குழப்பமான சூழல் நிலவுகிறது.

புதுவையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும். நாடு முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புதுவை பிரெஞ்சு கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தது.

புதுச்சேரி கடற்கரை சாலை
புதுச்சேரி கடற்கரை சாலை

புதுவைக்கு தனித்தன்மை உண்டு. அனைத்துக்கும் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. புதுவை, சுற்றுலாவை நம்பியுள்ள மாநிலம். சுற்றுலா வளர்ந்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும், வருவாய் கிடைக்கும். புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தடை விதிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை” என்றார்.

முதல்வரின் பேட்டிக்கு பதிலடியாக, ``புத்தாண்டை குடும்பத்துடன், வீட்டிலிருந்து கொண்டாடுங்கள். கொரோனா சூப்பர் பரவலின் ஒரு பகுதியாக இருக்காதீர். அதேபோல் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு யாரும் வர வேண்டாம். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எங்கும் அனுமதிக்கப்படவில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கொரோனாவை சூப்பர் பரவலாக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களை எச்சரித்திருக்கிறது" என்று ட்விட்டரில் தட்டியிருக்கிறார் கிரண் பேடி.

இந்தக் குழப்பங்கள் ஒருபுறமிருக்க, ``குறிப்பிட்ட மக்கள்தான் கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றால் அங்கு ஏற்கெனவே குவிந்த மக்கள் உடனே வீட்டுக்குத் திரும்பிவிடுவார்களா? முதலில் சென்றுவிட வேண்டும் என்று முந்திக்கொண்டு வரும் மக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைந்த எண்ணிக்கையிலான காவல்துறையினரால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? கொரோனா பரவலைக் காரணம் காட்டி கடற்கரை சாலையையே 10 பகுதிகளாகப் பிரித்து மக்களை உள்ளே வரவழைக்கிறார்கள். அந்த மக்களுக்கு கொரோனா பரவாதா? முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றால் அந்த நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதா?” என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.