Published:Updated:

புதுச்சேரி:`சாப்பாடே போட மாட்றாங்க; பசி எடுக்குது சார்!’- பதறவைத்த அரசுப் பள்ளி மாணவன் வீடியோ

அரசுப் பள்ளி மாணவன்
அரசுப் பள்ளி மாணவன்

``அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இன்றும் மூன்று வேளை உணவை உறுதிப்படுத்த முடியாதவர்கள். கொரோனா வேலை இழப்புகளுக்குப் பிறகு படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது அவர்களது நிலை” - அரசுப் பள்ளி ஆசிரியர்.

கொரோனா தொற்று நாடெங்கும் தீவிரமாகப் பரவத் தொடங்கியதையடுத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, 2020, மார்ச் மாதம் இறுதியில் புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. அதையடுத்து மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்கள் அனுமதியுடன் வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் `புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துவிட்டதால் 2021, ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது கல்வித்துறை.

மேலும், அந்த அறிவிப்பில் வாரத்தில் ஆறு நாள்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும், வருகைப் பதிவேடுகள் கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல ஜனவரி 18-ம் தேதியிலிருந்து பள்ளிகள் முழு நேரமாக இயங்கும் என்றும் தெரிவித்திருந்தது. மாணவர்களைப் பள்ளிகளுக்குள் அனுமதிக்க, கண்டிப்பாகப் பெற்றோர்களின் விருப்பக் கடிதம் தேவை என்றும் பள்ளி மற்றும் வகுப்பறைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது கல்வித்துறை.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

இதற்கிடையில், ``தனியார் கல்வி நிறுவனங்கள் வசூல் வேட்டைகளை நடத்துவதற்காகத்தான் தற்போது கல்வியாண்டு முடிவதற்கு மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் பள்ளிகளை திறந்துவிட்டிருக்கிறது அரசு” என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும், கல்வித்துறை கூறியபடி ஜனவரி 18-லிருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9:30 மணியிலிருந்து மதியம் 12:30 மணிவரை பள்ளிகள் நடைபெற்றுவருகின்றன. அரை நாள்தான் பள்ளி என்பதால், அவர்களுக்கான உணவு வழங்குவதையும் நிறுத்திவிட்டது புதுச்சேரி அரசு.

புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புராணசிங்குபாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசுப் பள்ளி என்ற குறிப்புடன் இருக்கும் அந்த வீடியோ காட்சியில், ``ஸ்கூல்ல சாப்பாடே போட மாட்றாங்க சார். பசி எடுக்குது சார்...” என்று அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன், மாற்றலாகிச் சென்ற ஆசிரியரிடம் சோகமாகப் பேசும் வீடியோ காட்சி பார்ப்பவர்களைப் பதறவைக்கிறது.

`மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்த முதல்வர் நாராயணசாமி, 2020 ,நவம்பர் 15-ம் தேதி அந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இட்லி, சாம்பார், சட்னி, கேசரி என்று ஆடம்பரமாகத் தொடங்கிய அந்தத் திட்டம் அன்றுடன் காணாமல்போனது. இது குறித்து நம்மிடம் பேசிய அரசுப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், ``புதுச்சேரி அரசுக்கென இதுவரை தனி கல்வி வாரியம் இல்லாத நிலையில், தமிழக அரசின் பாடத் திட்டத்தில்தான் புதுச்சேரி மாணவர்கள் படித்துவருகிறார்கள். தமிழகத்தில் தற்போதுவரை பள்ளிகள் திறக்கப்படாதபோது, அவசரப்பட்டு புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளையும் திறந்துவிட்டனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுடன் முதல்வர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்
அரசுப் பள்ளி மாணவர்களுடன் முதல்வர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்

அனைத்துப் பள்ளிகளையும் திறந்துவிட்ட அரசு, விளிம்புநிலை மாணவர்களின் உணவைப் பற்றியும், உயிரைப் பற்றியும் கவலைப்படவில்லை. தற்போது பள்ளிகளை மதியம் 12:30 மணிக்கு விடுகிறார்கள். மாணவர்களுக்கான இலவசப் பேருந்துகளையும் இன்னும் இவர்கள் விடவில்லை. அப்படி இருக்கும்போது மாணவர்கள் பசியுடன் எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போவார்கள்? அதேபோல அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், இன்றைய காலகட்டத்திலும் மூன்று வேளை உணவை உறுதிப்படுத்த முடியாத விளிம்புநிலை மாணவர்கள். கொரோனா வேலை இழப்புகளுக்குப் பிறகு அவர்களின் நிலை படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது அவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து பட்டினிபோட்டு வதைக்கலாமா?” என்றார் ஆதங்கத்துடன்.

இது குறித்து விளக்கம் கேட்க, பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர் ருத்ர கவுடுவை தொடர்புகொண்டோம். ``பள்ளிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படாததால், மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தவில்லை” என்று கூறிய அவரிடம், ``அப்படியெனில் மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி ஏன் வழங்குவதில்லை?’ என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, ``மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்பதால் வழங்குவதில்லை” என்று முடித்துக்கொண்டார்.

Vikatan

கொரோனா தொற்று குறைந்துவிட்டது, அதைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று கூறி அனைத்துப் பள்ளிகளையும் முழுமையாகத் திறந்துவிட்டு, தற்போது மாணவர்களுக்கு உணவு வழங்கினால் கொரோனா பரவும் என்ற காரணத்தை அரசு கூறுவது ஏற்புடையதா?

அடுத்த கட்டுரைக்கு