Published:Updated:

`அழகுபடுத்த ரூ.5 கோடி; ஆழப்படுத்த 50 வருட போராட்டம்!' -கரைவெட்டி பறவைகள் சரணாலய சர்ச்சை

கரைவெட்டி ஏரி
கரைவெட்டி ஏரி

கரைவெட்டி ஏரியால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதை அழகுபடுத்துவதைவிட ஆழப்படுத்துவதான் அவசியம் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இதில் 4.95 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஆங்காங்கே மணல் திட்டுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

``ஏரியை அழகுபடுத்துவதை விட ஆழப்படுத்துவதே மிகவும் அவசியம். இவ்வளவு பெரிய தொகையை வீண் விரயம் செய்ய வேண்டாம். ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பலன் அடைவோம். இந்தப் பணத்தில் ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி, தண்ணீர் தேக்கப்பட்டால்தான் இங்கு பறவைகளும் வரும்" என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

கரைவெட்டி ஏரி
கரைவெட்டி ஏரி

தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரமாண்டமான ஏரிகளில் முதன்மையானது கரைவெட்டி ஏரி. 1,100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் இந்த ஏரியானது, அரியலூர் மாவட்டம் கீழகாவட்டாங்குறிச்சி அருகே அமைந்துள்ளது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரியானது, காமராஜர் ஆட்சிக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்கும்போது, லட்சக்கணக்கான பறவைகள் இங்கு வந்து சென்றதால், இதைப் பறவைகள் சரணாலயமாகத் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த ஏரி கடந்த 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட தூர்வாரப்படவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

`ஏரியை ஆழப்படுத்தினால்தான் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைநிலங்கள் பாசனம் பெறுவதோடு, ஏராளமான பறவைகளும் இங்கு வந்து செல்லும். இது எங்களது நீண்டகால கோரிக்கை' என்கிறார்கள். ஆனால், தமிழக அரசு இதைக் கண்டுகொள்ளாமல், இங்கு மணல் திட்டுகள் அமைக்க பல கோடி ரூபாயை விரயம் செய்வதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

Vikatan

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய விவசாயி தங்க சண்முகசுந்தரம், ``இந்த ஏரியில 15 - 20 அடி உயரத்துக்கு வண்டல் சேர்ந்து, மேடாகிக் கிடக்குது. காட்டுச் செடிகளும் நிறைய மண்டியிருக்கு. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இதோட உண்மையான கொள்ளளவுக்கு முழுமையாகத் தண்ணீர் தேக்க முடியலை. இங்கு பறவைகள் வருவதும் குறைஞ்சிடுச்சு. இந்த ஏரியை நம்பிப் பாசனம் பெற்ற பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கு.

தூர்வாரி ஆழப்படுத்தணும்னு நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைச்சுகிட்டு இருக்கோம். ஆனால், இதுல திட்டுகள் அமைக்க 4.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டுகள் அமைச்சா, தண்ணீர் தேக்குவது பாதிக்கப்படும். கரையில் இருந்து 150 அடி தூரத்துல 10 திட்டுகள் அமைக்கப்போறாங்க.

மக்கள் நடமாட்டம் உள்ள இடத்துக்கு பக்கத்துல மணல் திட்டுகள் அமைச்சா, பறவைகள் எப்படி வரும்? ஏரியில் உள்ள மணலை வெட்டி, ஏரிக்குள்ளேயே திட்டுகள் அமைக்க 4.95 கோடி ரூபாயா செலவாகும். இதுக்கு பதிலாக, இந்தப் பணத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால், விவசாயிகளும் பயன் அடைவோம். பறவைகளும் பலன் அடையும். இதை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்திக்கிட்டு இருக்கோம்” என்றார் ஆதங்கத்துடன்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ``ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, காற்றினால் அலைகள் உருவாகி, தண்ணீர் கரைகளுக்கு வெளியே வடிந்து, விரயமாகிறது. இதைக் கட்டுப்படுத்தவும், பறவைகள் இங்கு வந்து இளைப்பாறவும் மணல் திட்டுகள் மிகவும் அவசியம். இது மிகப்பெரிய பணி. நிறைய செலவாகும். இதில் எந்த முறைகேடு நடைபெறவில்லை’ என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு