Published:Updated:

சாலையில் ஓடும் கழிவுநீர்... தன் வீட்டு வாசலில் அமர்ந்து எம்.எல்.ஏ தர்ணா! - ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் எம்.எல்.ஏ மணிகண்டன்.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ மணிகண்டன். ( உ.பாண்டி )

`அடுத்தவங்க வீட்டுக்குள் தண்ணி புகுந்தா கண்டுக்காத எம்.எல்.ஏ மணிகண்டன், தற்போது அவர் வீட்டுப் பக்கம் வந்ததால், ஒத்தையில் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறார்’ என அவர் மீது விமர்சனமும் வைக்கப்படுகிறது.

ராமநாதபுரம் நகரில் நிரம்பி ஓடும் கழிவுநீரை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் மணிகண்டன் தனது வீட்டின் முன் தனியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கழிவுநீர் முன் அமர்ந்துள்ள ராமநாதபுரம் எம்.எல்.ஏ மணிகண்டன்
கழிவுநீர் முன் அமர்ந்துள்ள ராமநாதபுரம் எம்.எல்.ஏ மணிகண்டன்
உ.பாண்டி

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. பாதாளச் சாக்கடை வடிகால் மற்றும் வெளியேறும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், பாதாளச் சாக்கடைகளிலிருந்து கழிவுநீர் வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில், கடந்த சில நாள்களாக ராமநாதபுரம் பகுதியில் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் மழைநீர் வெளியேற வாய்ப்பின்றி குடியிருப்புப் பகுதிகள், முக்கிய சாலைகள், மார்கெட் மற்றும் கடை வீதிகளில் தேங்கியிருக்கிறது. இவற்றுடன் பாதாளச் சாக்கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து செல்வதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள், சமூகநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் செய்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. மேலும், கழிவுநீர் செல்லும் பாதாளச் சாக்கடையைப் பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அவர்களும் இந்தப் பணியை முறையாக மேற்கொள்வதில்லை. இதனால் ராமநாதபுரம் நகர்ப் பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல், நகருக்குள் வரும் அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆதரவாளர்களுடன் மணிகண்டன்
ஆதரவாளர்களுடன் மணிகண்டன்
உ.பாண்டி

இந்தநிலையில், முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் மணிகண்டன் வீடு அமைந்திருக்கும் வண்டிக்காரத் தெரு பகுதியிலுள்ள பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடியது. இதனால் வெறுப்படைந்த மணிகண்டன், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரி கழிவுநீர் ஓடிய தனது வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து சாலையில் ஓடும் கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், ``அ.தி.மு.க ஆட்சியின்போது பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு வந்த தி.மு.க-வினர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாக மேற்கொள்ளவில்லை. எனவேதான் நகரில் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் நிலைமை மாறவில்லை. இன்று என் வீடிருக்கும் பகுதியிலேயே இதுதான் நிலை. எனவேதான் நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்வதில்லை என்பதற்காக என் வீட்டின் முன் அமர்ந்திருக்கிறேன்'' என்றார்.

கழிவ நீரை அகற்ற கோரி அமர்ந்திருக்கும் மணிகண்டன்
கழிவ நீரை அகற்ற கோரி அமர்ந்திருக்கும் மணிகண்டன்
உ.பாண்டி

இதற்கிடையே ``அடுத்தவங்க வீட்டுக்குள் தண்ணி புகுந்தா கண்டுக்காத எம்.எல்.ஏ மணிகண்டன், தற்போது அவர் வீட்டுப் பக்கம் வந்ததால் ஒத்தையில் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறார்'' என்றும் ``தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தானே தெரியும்'' என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு