Published:Updated:

`ஸ்வப்னாவை பினராயி விஜயனுக்குத் தெரியாதா?' - ஆதாரத்தை அடுக்கும் ரமேஷ் சென்னிதலா


பினராயி விஜயன்
பினராயி விஜயன்

`ஸ்பேஸ் பார்க் நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஸ்வப்னாவைத் தெரியாது என முதல்வர் பினராயி விஜயன் எப்படிக் கூற முடியும்?' என்கிறார் ரமேஷ் சென்னிதலா.

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு வந்த பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம் வழியாக யு.ஏ.இ தூதரகத்துக்கு வந்த உணவுப் பார்சலில் 30 கிலோ தங்கம் கடந்த 6-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

பார்சலைப் பெறுவதற்காகத் தூதரக கடிதத்துடன் வந்த ஸரித் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய கேரள ஐ.டி துறை ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ளார். ஸ்வப்னா சுரேஷ் தமிழகத்தில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் அவர் முன்ஜாமீன் கேட்டு கேரள ஹைகோர்ட்டில் ஆன்லைன் மூலம் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்திவருகிறது. இந்தநிலையில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விபரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் அனைத்துத் துறைகளையும் ஈடுபடுத்தி வேகமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று கடிதம் எழுதினார்.

 ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஸ்வப்னாவின் வீட்டுக்குப் போகும் அளவுக்கு நெருக்கமாக இருந்த பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கரன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் ஸ்வப்னா யார் என்றே தனக்குத் தெரியாது எனவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

ஆனால், பினராயி விஜயனும் ஸ்வப்னாவும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் குறித்து எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. இந்த நிலையில் பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

கேரளம்: `தூதரகம் பெயரில் கடத்தல்; ரூ.15 கோடி தங்கம்!’- அதிரவைத்த ஐ.டி அதிகாரி ஸ்வப்னா

இதுகுறித்து ரமேஷ் சென்னிதலா கூறுகையில், "ஸ்வப்னா அரசு அதிகாரி அல்ல, ஐ.டி துறையின் அதிகாரியும் அல்ல எனப் பினராயி விஜயன் கூறியிருந்தார். அது உண்மைதான், முதலமைச்சரின் துறையான சயின்ஸ் ஆர்ட் அண்ட் டெக்னாலஜி துறையின்கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் ஸ்வப்னா வேலை செய்துள்ளார். கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் திருவனந்தபுரம் ராவீஸ் லீலா ஹோட்டலில் நடந்த 'எட்ஜ் 20-20 ஸ்பேஸ் கான்கிளே' நிகழ்ச்சியானது, ஸ்வப்னா தலைமையில் நடந்தது. மாநில அரசு நடத்திய இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஸ்வப்னாதான் அனுப்பினார். பிப்ரவரி 1-ம் தேதி மாலையில் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியதும், ஒப்பந்த பத்திரம் வழங்கியதும் ஸ்வப்னாதான்.

கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா
கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா

முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள சயின்ஸ் அண்ட் டெக்லானஜி துறையின்கீழ் உள்ள ஸ்பேஸ் பார்க்கில் அந்த நிகழ்ச்சி முதன் முறையாக நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஸ்வப்னாவைத் தெரியாது என முதல்வர் பினராயி விஜயன் எப்படிக் கூறமுடியும்.

ஸ்பேஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இது நாட்டின் பாதுகாப்பு விவகாரமாக மாறியுள்ளது. விண்வெளித்துறை சம்பந்தப்பட்ட ஐ.எஸ்.ஆர்.ஓ போன்றவை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு கொடுக்க ஸ்வப்னா யார்? அவருக்கு தலைமை பொறுப்பு கொடுத்தது யார். எனவே, பினராயி விஜயன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" என்றார் ஆவேசமாக.

அடுத்த கட்டுரைக்கு