Published:Updated:

`ஓட்டுக்கு ஆயிரம்; போட்டியாளர்களுக்கு ஒரு லட்சம்!' - அதிரவைக்கும் உள்ளாட்சி ஏலத் தொகைப் பிரிப்பு

இந்த ஊராட்சியில் தற்போது 492 வாக்காளர்கள் உள்ளனர். கிராம ஊராட்சிக்கு எனப் பெரிய வருவாய் எதுவும் கிடையாது. இதுவரை இங்கு தேர்தல் மூலமே கிராமப் பஞ்சாயத்து தலைவர் தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளார்.

சிறுகுடி கிராமப் பஞ்சாயாத்து தேர்தல்
சிறுகுடி கிராமப் பஞ்சாயாத்து தேர்தல் ( உ.பாண்டி )

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவியிக்குப் போட்டியிடும் நபரை தேர்வு செய்ய உள்தேர்தல் நடத்தப்பட்டது. இதுதவிர பல கிராமப் பஞ்சாயத்துகளின் தலைவர் பதவி பல லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன. இதில், முதுகுளத்தூர் அருகே உள்ள 500-க்கும் குறைவான வாக்காளர்களைக் கொண்ட ஒரு கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவி, அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்
விகடன்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சிறுகுடி ஊராட்சி. பலதரப்பட்ட மக்களும் வசிக்கும் இந்த ஊராட்சியில் தற்போது, 492 வாக்காளர்கள் உள்ளனர். கிராம ஊராட்சிக்கு எனப் பெரிய வருவாய் எதுவும் கிடையாது. இதுவரை இங்கு தேர்தல் மூலமே கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அக்கிராமத்தைச் சேர்ந்த இருளாயி என்பவர் 152 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவராகியிருந்தார்.

இந்நிலையில் இம்முறை ஏற்கெனவே தலைவராக இருந்து வந்த இருளாயி தவிர கஸ்தூரி, விஜயா ஆகியோரும் தலைவர் பதவிக்கான போட்டியில் இறங்கினர். இதனால் கிராம முக்கியஸ்தர்கள் சிலர் ஒன்றிணைந்து பஞ்சாயத்துத் தலைவர் பதவியினை ஏலம் விட முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கியுள்ளனர். இந்த ஏலத்திலும் 4 பேர் பங்கேற்றுள்ளனர். இதனால், ஏலத் தொகை எக்குத்தப்பாக எகிறியுள்ளது. இறுதியில் மகேஷ்வரன் என்பவரின் மனைவி போதும் பொண்ணு என்பவர் ரூ.28.60 லட்சத்துக்கு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவியினை ஏலத்தின் மூலம் பெற்றுள்ளார்.

சிறுகுடி கிராமப் பஞ்சாயத்து தேர்தல்
சிறுகுடி கிராமப் பஞ்சாயத்து தேர்தல்

இதனால், `ஏலத்தொகையினை அவர் முழுமையாகக் கட்டிவிட்டால் அவருக்கு எதிராக யாரும் தலைவர் பதவியில் போட்டியிடக் கூடாது' எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையில் இருந்து கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ஆயிரம் வீதமும், ஏலத்தில் பங்கேற்ற நபர்களுக்கு தலா ஒரு லட்சமும் எனப் பிரித்துக் கொடுப்பது எனவும், மற்ற தொகையினை ஊர் கணக்கில் வைக்கவும் தீர்மானித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

வாக்காளர்கள் 492 பேர். ஏலத் தொகையோ 28.60 லட்சம்.
கிராம மக்கள்

`உள்ளாட்சித் தேர்தல் பதவிகளுக்கு ஏலம் மூலமோ, சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் மூலமோ யாரையும் தேர்வு செய்யக் கூடாது' என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எச்சரித்துள்ளார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து இது போன்ற அத்துமீறல்கள் அரங்கேறி வருவது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.