Published:Updated:

ரேஷன் கடையைப் பூட்டிவிட்டு தலைமறைவான ஊழியர்! - ஆய்வுக்கு வந்த ஆட்சியர் அதிர்ச்சி

பூட்டிக் கிடந்த ரேஷன் கடை முன் ஆட்சியர்
பூட்டிக் கிடந்த ரேஷன் கடை முன் ஆட்சியர் ( உ.பாண்டி )

ரேஷன் கடை விற்பனையாளர் முத்துமாரி என்பவர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்துகொண்டிருந்த போதே திடீரெனக் கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு நடத்த உள்ளதாகத் தகவல் வந்ததையடுத்து, ரேஷன் கடை விற்பனையாளர் கடையைப் பூட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரேஷன் கடையில் உள்ள பொருள்கள் இருப்பு குறித்து முழு விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ரேஷன் பொருள்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு
ரேஷன் பொருள்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு
உ.பாண்டி

முதுகுளத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிப்பதற்காக 5 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், முதுகுளத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்த வருவதாகத் தகவல் வந்துள்ளது.

ரேஷன் விநியோகத்தைப் பார்வையிட்ட ஆட்சியர்.
ரேஷன் விநியோகத்தைப் பார்வையிட்ட ஆட்சியர்.
உ.பாண்டி

இதையடுத்து முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் முத்துமாரி என்பவர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்துகொண்டிருந்த போதே திடீரெனக் கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதனால் தங்களது ரேஷன் பொருள்களை வாங்க வந்த பொதுமக்கள் நீண்டநேரமாகக் காத்துக்கிடந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் அந்த ரேஷன் கடைக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு நடத்துவதற்காக அதிகாரிகளுடன் வந்தார். ஆனால், ரேஷன் கடை பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம், கடை பூட்டப்பட்டுள்ளதற்கான காரணத்தைக் கூற முடியாமல் பரிதவித்தனர்.

பூட்டிக் கிடந்த ரேஷன் கடை முன் ஆட்சியர்
பூட்டிக் கிடந்த ரேஷன் கடை முன் ஆட்சியர்
உ.பாண்டி

இதையடுத்து அந்த ரேஷன்கடை பணியாளர் குறித்தும், மேலும் கடையில் உள்ள இருப்புப் பொருள்களின் முழுவிவரத்தையும் ஆய்வு செய்வதுடன், விற்பனையாளர் ஏன் கடையை அடைத்துச் சென்றார் என்பது குறித்தும் முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆட்சியர் ஆய்வுக்கு வந்தபோதே ரேஷன் கடை பணியாளர் கடையைப் பூட்டிவிட்டு தலைமறைவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு