Published:Updated:

`எங்களுக்கு மட்டும் உயிர் பயம் இல்லையா?' -நிவாரண அறிவிப்பால் கலங்கும் ரேஷன் ஊழியர்கள்

சென்னை
சென்னை

சென்னையில் லட்சக்கணக்கான வீடுகள் இருக்கு. வீடு வீடாகப் போயி பணம் கொடுக்குறது சாத்தியமே இல்லை. ஒரு ரேஷன் கடைக்கு இரண்டே ஊழியர்கள் வீதம், 1500 வீடுகளுக்கு தேடிப் போயி பணம் கொடுத்தாகணும்.

கொரோனா பாதிப்பு, தற்போது, சென்னையில் உச்சத்தில் இருக்கிறது. இங்கு பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுரேஷ் என்ற ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையிலும் தங்களை வீடு வீடாகச் சென்று, ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்க, தமிழக அரசு நிர்பந்திக்கிறது. இது மிகவும் ஆபத்தானது என ரேஷன் கடை ஊழியர்கள் குமுறுகிறார்கள்.

ரேஷன் ஊழியர்கள்
ரேஷன் ஊழியர்கள்

இதுகுறித்து நம்மிடம் வேதனையோடு பேசிய ரேஷன் கடை ஊழியர்கள் ‘’சென்னையைப் பொறுத்தவரைக்கும் பல தரப்பு மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக்கிட்டு இருக்காங்க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், முதலமைச்சர் அலுவலக தனிச் செயலாளர், காவல்துறை ஆய்வாளர்னு பலர் உயிரிழந்திருக்காங்க.

இது ஒரு இக்கட்டான காலகட்டம். கொரோனா பரவாமல் இருக்கத்தான், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மறுபடியும் முழு ஊரடங்கு போட்டிருக்காங்க. ஆனால் எங்களை மட்டும் வீடு வீடாக, தேடிப் போயி, பணம் கொடுக்கச் சொல்றது, ரொம்பவே அநியாயம். நாங்க போகக்கூடிய வீடுகளில் யாருக்காவது கொரோனா இருந்தால், நாங்களும்தானே பாதிக்கப்படுவோம்.

சென்னையில் லட்சக்கணக்கான வீடுகள் இருக்கு. வீடு வீடாகப் போயி பணம் கொடுக்குறது சாத்தியமே இல்லை. ஒரு ரேஷன் கடைக்கு இரண்டே ஊழியர்கள் வீதம், 1500 வீடுகளுக்குத் தேடிப் போயி பணம் கொடுத்தாகணும்.

பி.ஒ.எஸ் மிஷின்
பி.ஒ.எஸ் மிஷின்

இதையும்கூட 22-26-ம் தேதிக்குள்ளார கொடுத்து முடிச்சாகணும்னு காலக்கெடு நிர்ணயம் செஞ்சிருக்காங்க. இரண்டே ஊழியர்கள், 15 லட்சம் ரூபாயைக் கையில எடுத்துக்கிட்டு போயி, அஞ்சே நாள்களில், 1500 வீடுகளுக்கு தேடிப் போயி கொடுக்குறது, ரொம்ப சிரமம். இதுல பல ஆபத்துகள் இருக்கு. ரேஷன் கடை ஊழியர்கள், கையில் பணத்தோடு தெரு தெருவாகப் போகும்போது, யாராவது சமூக விரோதிகள் பணத்தை அபகரிச்சிக்கிட்டுப் போகக்கூடிய ஆபத்துகள் இருக்கு. இது எங்களோட உயிருக்கேகூட வினையாயிடும்.

Vikatan

ரேஷன் அட்டைதாரர்களின் ஸ்மார்ட் கார்டை, ஸ்கேன் செய்யக்கூடிய பி.ஒ.எஸ். மிஷினையும் கையில எடுத்துக்கிட்டுப் போகணும். இதை ஒரு மணிநேரத்துக்கு ஒரு தடவை சார்ஜ் போட்டாகணும். மக்கள் எல்லாருமே கொரோனா பயத்துல இருக்குறதுனால, சார்ஜ் போட, யாருமே எங்களை வீட்டுள்ள அனுமதிக்கமாட்டாங்க. நாங்க கிளவுஸ் போட்டுக்கிட்டுதான் போகணும்னு விதிமுறை. கையில கிளவுஸ் போட்டுருந்தால், பணத்தை எண்ணுவது ரொம்ப சிரமம்.

ஊரடங்குங்குறதுனால, உணவகங்கள் எதுவுமே இயங்காது. ஒரு டீ கூட கிடைக்காது. இந்த நாலு நாள்களும் சாப்பாடுகூட கிடைக்காமல் திண்டாடப்போறோம். சென்னையைப் பொறுத்தவரைக்கும் மாடி வீடுகளில் வசிக்கக்கூடிய குடும்பங்கள் அதிகம். ரேஷன் கடை ஊழியர்களில் பலர், சுகர், பி.பி, இதயநோய்கள் உள்ளவர்கள் அதிகம். இவங்களால் மாடிகளுக்கு ஏறிப்போயி பணம் கொடுக்குறது ரொம்ப சிரமம்.

Vikatan

அந்தந்த வீடுகள்ல பணத்தைக் கொடுத்துட்டு, பதிவேட்டில் கையெழுத்தும் வாங்கியாகணும். கொரோனா அச்சத்தால், நாங்க மக்களைப் பார்த்து பயந்தாகணும். அவங்க எங்களைப் பார்த்து பயப்படுவாங்க. இது உயிரோடு விளையாடுறதுக்குச் சமம். இது தேவையே இல்லை. அந்தந்த அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குல நிவாரணப் பணத்தைச் செலுத்திடலாம்.

அவங்க தங்களோட தேவைகளை, நெட் பேக்கிங், கூகுள் பே, பே.டி.எம் மூலம் பரிவர்த்தனை செஞ்சுக்குவாங்க. சென்னை வெள்ளத்தின்போது, வங்கிக் கணக்குலதான் நிவாரணம் செலுத்தப்பட்டது. ஆனால் இந்தத் தடவை , கொரோனா ஆபத்தைப் பத்திக்கூட கவலைப்படாமல், அரசியல் ஆதாயத்துக்காக, எங்களை நேரடியாக, வீடுகளுக்கே போயி நிவாரணத்தைக் கொடுக்கச் சொல்றாங்க” என வேதனையோடு தெரிவித்தார்கள்.

``இதனைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனவும் கோரிக்கை விடுக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு