Published:Updated:

ஒதுங்கிய ஓ.பி.எஸ்; செக் வைத்த அப்போலோ... கடிதத்தில் கொந்தளித்த ஆறுமுகசாமி ஆணையம்!

அரசு வழக்கறிஞரென்றால், அரசு சொல்லக்கூடியதைத்தான் செய்வார். ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தடையை நீக்குவதற்கு இவர்கள் ஒன்றரை வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம், அரசுக்கு எழுதியிருக்கும் கடிதம் புயலைக் கிளப்பியிருக்கிறது. `ஆணையத்தின் விசாரணையைக் கிடப்பில்போடும் வேலைகள் நடந்துவருவதால், தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆறுமுகசாமி' என்கின்றனர் ஆணையத்தின் ஊழியர்கள்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2016, டிசம்பர் மாதம் 5-ம் தேதி காலமானார். `அவரது மறைவிலுள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும்' என தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கைகோத்த பிறகு, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை 154 சாட்சிகளிடம் இந்த ஆணையம் விசாரணை நடத்திவிட்டது. ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனில் சிகிச்சையளித்துவந்த மருத்துவர் சிவக்குமார், அப்போலோ மருத்துவர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுச் செயலர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எனப் பலரிடமும் விசாரணை நீண்டது. ஆனால், ஆணையம் அமைவதற்குக் காரணமான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருமுறைகூட ஆணையத்தின் விசாரணையில் நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு ஒன்பது முறைக்கும் மேல் சம்மன் அனுப்பப்பட்டும், ஆஜராவதிலிருந்து விலக்குக் கேட்டபடியே இருந்தார். இது ஆறுமுகசாமி ஆணையத்துக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

அதேநேரம், கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் அப்போலோ தரப்பும் ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றம் சென்றது. அப்போது அப்போலோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், `சம்பந்தமில்லாத தகவல்களையெல்லாம் ஆணையம் கேட்கிறது. அப்போலோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்திவிட்டனர். இதே அப்போலோவில்தான் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்றுவந்தார். அதன் பிறகு அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்குழு மட்டுமே ஆராய முடியும். விசாரணை ஆணையத்தால் ஆராய முடியாது. அதிலும், ஒருதலைபட்சமாக ஆணையம் செயல்படுகிறது. விசாரணையில் தொடர்பில்லாத தகவல்களையெல்லாம் கேட்கின்றனர்’ என வாதிட்டார். அதற்கு பதில் கொடுத்த தமிழக அரசின் வழக்கறிஞரோ, `ஆணையத்தின் விசாரணை ஏறத்தாழ முடிந்துவிட்டது. எனவே, தடைவிதிக்க வேண்டிய அவசியமில்லை' என்றார். முடிவில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது.

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை

இந்தநிலையில், ஆணையத்தின் விசாரணைக்கு எட்டாவது முறையாகக் கொடுக்கப்பட்ட அவகாசம், வரும் 24-ம் தேதியுடன் நிறைவடையவிருப்பதால், மேலும் மூன்று மாத காலம் அவகாசம் கேட்டு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். அந்தக் கடிதத்தில், `அப்போலோ தரப்பு நீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்கக் கோரும்போது, குறைந்தபட்சம் ஆட்சேபனையைக்கூட தெரிவிக்காமல், வழக்கு விசாரணை தாமதம் ஆவதை அரசு வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தனர். இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரும் மனு மற்றும் நீதிமன்றத்திலுள்ள தடை ஆணையை நீக்குவதற்கான மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை' எனக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் அரசு வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க வழக்கறிஞர் காசிநாத பாரதி, `` அரசின் நடவடிக்கைகளைப் பார்த்தால் இனி கமிஷன் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அரசு வழக்கறிஞர் என்றால் அரசு சொல்லக்கூடியதைத்தான் செய்வார். ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தடையை நீக்குவதற்கு இவர்கள் ஒன்றரை வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தக் கோபத்தைத்தான் ஆறுமுகசாமி வெளிப்படையாகக் காட்டுகிறார். ஆணையத்தில் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்கள், சாட்சிகளின் அடிப்படையில்தான் அவர் அறிக்கை எழுத முடியும். இதுவரையில் 154 சாட்சிகளை அவர் விசாரித்திருக்கிறார். அதில் ஒருவர்கூட சசிகலாவுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. இதை மாற்றி எழுதினால் ஆணையத்துக்குத்தான் சிக்கல்.

சசிகலா
சசிகலா

அதனால்தான் இந்த ஆணையத்தை இழுத்து மூடுவதற்கு அரசு முயல்கிறது. ஓ.பி.எஸ்ஸுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அதேநேரம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, `நாங்கள் அனைவரும் இணைந்துதான் சிகிச்சை தொடர்பாக முடிவெடுத்தோம்' என்கிறார். அப்போது முதல்வராக இருந்தவர் பன்னீர்செல்வம். அமைச்சரின் இந்தக் கருத்தை மறுத்துப் பேச முடியாது. அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டி வரும். மேலும், குறுக்குக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதனால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும் என்பதால் ஒதுங்கியிருக்கிறார். இப்போது மொத்தமாக ஆணையத்தை இழுத்து மூடும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறோம்" என்றார் கொதிப்புடன்.

Vikatan

இது தொடர்பாக, தமிழக அரசின் வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம். ``ஆணையத்தின் விசாரணையில் கேட்கப்பட்ட பல கேள்விகளில் அப்போலோ நிர்வாகத்துக்கு உடன்பாடில்லை. `இந்த மாத்திரை ஏன் கொடுக்கப்பட்டது, வேறு சிகிச்சை கொடுத்திருக்கலாமே?' என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். இதனால் அதிருப்தியடைந்த அப்போலோ மருத்துவர்கள், `ஆணையத்துக்குச் சட்டம் தொடர்பான தகவல்கள்தான் விரிவாகத் தெரியும். மருந்துகள் தொடர்பாகவும், தொழில்நுட்பம் தொடர்பாகவும் எதுவும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. எனவே, மருத்துவர் குழுவை அமைத்தால் எங்கள் கருத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்' எனக் கூறிவிட்டனர். இதுதான் மோதலுக்கான மூல காரணம். ஆணைய விசாரணையில் பன்னீர்செல்வம் ஆஜராகாததும் ஒரு மைனஸ். மற்றபடி, ஆணையத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகள் நடப்பதாகச் சொல்வது தவறானது" என்றார் உறுதியான குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு