Published:Updated:

எடப்பாடி பழனிசாமியை கொதிக்கவைத்த சீட் பேரம்..! - முருகன் கொளுத்திய `முதல்வர் வேட்பாளர்' சர்ச்சை

நாடாளுமன்றத் தேர்தலை, `தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரில்தான் சந்தித்தோம். அதேபோல், சட்டமன்றத் தேர்தலையும் இதே பெயரில்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்தக் கூட்டணிக்கு பா.ஜ.க தலைமை தாங்கவிருக்கிறது.

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அன்றே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன். `20 சீட்டுகளை மட்டுமே பா.ஜ.க-வுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இதை பா.ஜ.க நிர்வாகிகள் ஏற்காததால், முதல்வர் வேட்பாளர் தொடர்பாகச் சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

செய்தியாளர் சந்திப்பில் முருகன்
செய்தியாளர் சந்திப்பில் முருகன்

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மதுரையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேநாளில், `விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற நிகழ்ச்சி பெரம்பலூரில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், `வரும் சட்டமன்றத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியிலேயே பா.ஜ.க தொடரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க தலைமைதான் முடிவு செய்யும்' என அதிரவைத்தார். இதை எதிர்பாராத முதல்வர் தரப்பு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மூலமாக பதில் கொடுத்தது.

`முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்!’ - பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன்

முருகனின் பேட்டிக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், `தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம், தனது முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க முன்னரே அறிவித்துவிட்டது. எனவே, முருகன் கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல' என்றார். இது தொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறுகையில், `தற்போதுள்ள கூட்டணி தொடர வேண்டுமென்றால், அ.தி.மு.க முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்காதபட்சத்தில் கூட்டணியில் தொடர இயலாது; பா.ஜ.க தனித்துதான் போட்டியிட வேண்டும்' என்றார்.

எடப்பாடி
எடப்பாடி

அ.தி.மு.க-வுக்குள் தமிழக பா.ஜ.க தலைவர் கொடுத்த பேட்டி பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் நிலையில், தஞ்சையில் இன்று செய்தியாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தினார் முருகன். `அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தற்போது இருக்கிறார். தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை எங்கள் கட்சித் தலைமைதான் அறிவிக்கும்’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க தலைமையின் சர்ச்சைக் கருத்து குறித்து அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரித்தோம். இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், `` சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் போட்டியிட பா.ஜ.க விரும்புகிறது. அவர்கள் 50 சீட்டுகள் வரையில் கேட்கிறார்கள். இதற்காகத் தொகுதிகளையும் தேர்வு செய்து வைத்துவிட்டு பூத் லெவல் ஏஜென்ட்டுகளை (பிஎல்ஏ) நியமிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகிறார்கள். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 100 வார்டுகளில் 1,322 பூத்கள் உள்ளன. இவற்றில் 1,200 பூத்களுக்கு தலா ஒருவர் என நியமித்துவிட்டனர். இது தவிர, பூத்துக்கு இரண்டு பேர் எனத் தயார் செய்துவைத்திருக்கின்றனர். இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் பட்டியல் அனுப்பிவிட்டனர்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்
பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்

இதேபாணியில், தங்களுக்குச் சாதகமான தொகுதிகளிலெல்லாம் பூத் கமிட்டி ஆட்களை நியமிக்கும் பணியைச் செய்துவருகின்றனர். அந்த வரிசையில் அ.தி.மு.க கூட்டணியில் 50 இடங்களுக்கு மேல் போட்டியிட வேண்டும் என பா.ஜ.க நிர்வாகிகள் விரும்புகின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழலில், அவ்வளவு இடங்களை ஒதுக்குவதற்கு முதல்வர் தரப்பு தயாராக இல்லை. இது தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசும்போது, 20 தொகுதிகள் வரையில் ஒதுக்கப்படலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர். இதற்கு பா.ஜ.க-வினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க-விலுள்ள முதல்வருக்கு எதிரான குரூப்பும், `அவர்கள் கேட்பதுபோல் சீட் ஒதுக்கினால் நாளைக்கு நமக்குத்தான் லாபம். அவர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்' எனக் கூறியிருக்கிறது. ஆனால், முதல்வர் பிடிவாதமாக இருப்பதால், மோதலாக வெடித்திருக்கிறது" என்றனர்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க முக்கிய நிர்வாகியிடம் ஒருவரிடம் பேசியபோது, `` நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில்தான் சந்தித்தோம். அதேபோல், சட்டமன்றத் தேர்தலையும் இதே பெயரில்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்தக் கூட்டணிக்கு பா.ஜ.க தலைமை தாங்க இருக்கிறது. எனவே, முதல்வர் வேட்பாளர் யார் என்பதைத் தலைமை அறிவிக்கும். அதைத்தான் முருகன் வெளிப்படுத்தினார். இதில் எந்தவிதக் குழப்பமும் இல்லை" என்றவர், ``தமிழக பா.ஜ.க-வுக்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. பா.ஜ.க தமிழகத் தலைவராக முருகன் பதவியேற்றதிலிருந்தே ஏராளமானோர் கட்சியில் இணைந்துவருகின்றனர். அந்தவகையில், கடந்த மாதம் ஓசூரில் வேல் யாத்திரைக்குச் செல்வதற்கு முன்பாக கோவைக்கு வந்தார் முருகன். அப்போது, முக்கியத் தொழிலதிபர்கள் சிலர் பா.ஜ.க-வில் இணைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதேபோல், ஆயிரம் தொழிலதிபர்களைக் கட்சியில் இணைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. கடந்த ஓராண்டாகவே கட்சி வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெல்வதுதான் பா.ஜ.க கணக்கு. எனவே, தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் வேட்பாளரைத் தீர்மானித்துக்கொள்ளலாம் எனவும் பேசப்பட்டுவருகிறது. தேர்தல் தொடர்பாக அகில இந்தியத் தலைமை வேறு சில கணக்குகளையும் போட்டுவருகிறது. அவை ஜனவரி மாதத்தில் செயல் வடிவத்துக்கு வரலாம்" என்றார் விரிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு