Published:Updated:

சென்னைக்கு மாற்றலான கரூர் டீன்! - ஓரம்கட்டப்படும் பீலா ராஜேஷ் ஆதரவாளர்கள்

தேரணிராஜன்
தேரணிராஜன்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த ஜெயந்தி, தற்போது விடுமுறையில் இருக்கிறார். அவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் ஆதரவு பெற்றவராக இருந்தார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த தேரணிராஜன், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்தவர் ரோஸி வெண்ணிலா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை கல்லூரி முதல்வராக இருந்தார். அப்போது, கரூர் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்தான் மருத்துவர் தேரணிராஜன். அதற்கு முன்பு, இவர் பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தார்.

கொரோனா: அடுத்தடுத்த நாள்களில் இருவர் மரணம்! - அதிர்ச்சி தரும் கரூர் நிலவரம்

கரூரில் தேரணிராஜன் சிறப்பாக செயல்பட்டதைப் பார்த்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையின் முதல்வராக இருந்த ரோஸி வெண்ணிலாவை பணிமாறுதலில் அனுப்பிவிட்டு, தேரணிராஜனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக நியமித்தனர்.

பணிமாறுதல் உத்தரவு
பணிமாறுதல் உத்தரவு

அதோடு, அதற்கு முன்பு அவர் முதல்வராகப் பொறுப்பு வகித்து வந்த பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, சிறப்பு அதிகாரியாக தேரணிராஜனை கூடுதல் பொறுப்பாக நியமித்தனர். இந்த நிலையில்தான், தேரணிராஜனை சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமித்து, உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏன் மாற்றப்பட்டார் பீலா ராஜேஷ்..? எப்படி வந்தார் ஜெ.ராதாகிருஷ்ணன்?

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம். "தேரணிராஜன் கரூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டார். கரூர், திண்டுக்கல், நாமக்கல் என்று மூன்று மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கே சிகிச்சை பெற்றனர். அவர்களில் மூன்று பேர் மட்டுமே இறக்க நேர்ந்தது. மற்றவர்களில் 90 சதவிகிதம் பேர் பூரண குணமடைந்து, தங்களது வீடுகளுக்குச் சென்றனர். அதற்கு காரணம், தேரணிராஜனின் சிறப்பான செயல்பாடுகள்தான்.

ஆனால், சென்னைக்கு இப்போது அவர் மாற்றப்பட்டதின் பின்னணியில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த ஜெயந்தி, தற்போது விடுமுறையில் இருக்கிறார். அவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் ஆதரவு பெற்றவராக இருந்தார். பீலா ராஜேஷ், சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால், ஜெயந்தி வேலை பார்க்கப் பிடிக்காமல் விடுப்பு எடுத்துக்கொண்டு போனதாகச் சொல்லப்பட்டது. அதன்பிறகு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வராக, மருத்துவர் நாராயணசாமி நியமிக்கப்பட்டார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், ஊரடங்கு உத்தரவு மறுபடியும் அமல்படுத்தப்பட்டது. இதில், நாராயணசாமியை பொறுப்பு முதல்வராகத் தொடர வைப்பதில் ராதாகிருஷ்ணன் விருப்பப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பீலா ராஜேஷின் ஆதரவாளரான ஜெயந்தியையும் ராதாகிருஷ்ணன் முதல்வர் பொறுப்பில் நீடிக்க வைக்க விரும்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

அதனால், முதல்வரிடம் பேசி, பேரிடர் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றுவதில் வல்லவரான தேரணிராஜனை சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக அறிவிக்க வைத்துவிட்டார். தமிழகம் முழுக்க முக்கிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இப்படித் தனக்கு விருப்பமானவர்களை நியமிக்க நினைக்கிறார் ராதாகிருஷ்ணன். அதன் முதல் பகுதியாகத்தான் தேரணிராஜனை சென்னைக்கு மாற்றியிருக்கின்றனர்.

சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், என்னை சென்னைக்கு பணிமாறுதல் செய்துள்ளனர்.
தேரணிராஜன்

கரூரில் கொரோனா தாக்குதலின் வீரியம் அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிறன்றுதான், கொரோனா பாதித்தவர்களில் முதல் பலி ஏற்பட்டது. மறுநாளே பள்ளபட்டியைச் சேர்ந்த 54 வயது நிரம்பிய நபர் ஒருவர் இறந்தார். இந்தநேரத்தில், தேரணிராஜனின் பணி கரூருக்குத் தேவை. ஆனால், அதற்குள் அவரை சென்னைக்கு மாற்றிவிட்டார்கள்" என்றார்கள்.

 தேரணிராஜன்
தேரணிராஜன்

தேரணிராஜனிடமே பேசினோம். ``சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், என்னை சென்னைக்கு பணிமாறுதல் செய்துள்ளனர். மற்றபடி, நீங்கள் சொல்லும் வேறு எந்தக் காரணங்களும் இல்லை" என்றதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு