Published:Updated:

சகாயத்தைக் கொதிக்கவைத்த சண்முகம் ஐ.ஏ.எஸ்! - `விருப்ப ஓய்வு தேதி’ கோல்மால்

சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ்

தமிழக அரசில் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக தலைமைச் செயலகத்துக்கும் சகாயத்துக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல் இருந்தது.

தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். ` ஊழல் எதிர்ப்புப் பணிகளைத் தீவிரமாக முன்னெடுக்கவிருக்கிறார் சகாயம். தற்போது அரசியலுக்குள் நுழையும் எண்ணத்தில் அவர் இல்லை' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ்

தமிழ்நாடு உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கக்கூடிய மிகச் சிறிய அலுவலகம் அது. சென்னை பிர்லா கோளரங்கத்தின் உள்ளே சென்றால், `தமிழ்நாடு அறிவியல் நகரம்’ என்ற பெயரில் ஓர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. ஆண்டுக்கு இரண்டு கண்காட்சிகளையும், மாணவர்களுக்குச் சில போட்டிகளையும் நடத்துவது மட்டுமே இந்தத் துறையின் தலையாய பணி. இது ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கான பணியாக இல்லாவிட்டாலும், அரசு இயந்திரத்தால் பழிவாங்கப்படும் அதிகாரிகளுக்கு மட்டும் இப்படிப்பட்ட துறைகள் ஒதுக்கப்படுவதுண்டு. ஆண்டுக்கு 1.30 கோடி ரூபாய் பட்ஜெட் மட்டுமே இந்தத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. வேளாண்துறையின் ஓர் உதவி இயக்குநருக்கு உண்டான வசதிகள்கூட இந்த அலுவலகத்தில் இல்லை என்பதுதான் வேதனை.

'மாவட்டத்துக்கு ஒரு விவசாயி; மருந்தில்லா விவசாயம்!' -சகாயம் ஐஏஎஸ் முன்னெடுக்கும் 'கலப்பைத் திட்டம்'

இப்படிப்பட்ட ஒரு துறையில்தான் கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றிவந்தார் சகாயம் ஐ.ஏ.எஸ். இந்தநிலையில், பணி ஓய்வுக்கு மூன்றாண்டுகள் உள்ள நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதினார். அதேநேரம், அவர் இப்படியொரு முடிவை எடுப்பதற்கும் சில காரணங்கள் பிரதானமாக அமைந்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் தமிழ் கலாசார மன்றம், தனது 15-வது ஆண்டு விழாவுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், சகாயம் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்குரிய அனுமதியை வழங்காமல் தமிழக அரசின் பொதுத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தினர். இந்த நிகழ்ச்சி குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி, சகாயத்தை அலைக்கழித்தனர்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

ஒருகட்டத்தில் கொதித்துப்போன சகாயம், ` தமிழ் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அனுமதி கேட்கும்போது, என் போன்ற அதிகாரிகளுக்கு உடனடியாக மத்திய அரசிடமிருந்து, தமிழக அரசு அனுமதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். அப்படிப் பெற்றுத் தராதது வேதனை அளிக்கிறது. இது போன்று தேவையற்ற தகவல்களைக் கேட்பது என்பது, காலம் கடத்துபவர்களின் உயர்ந்த யுக்தியாகவே நான் கருதுகிறேன். இதைத் தமிழ் மொழியின் மீதான வெறுப்பின் செயலாகப் பார்ப்பதா அல்லது நேர்மையாகப் பணியாற்றும் என் போன்ற அதிகாரிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்பா என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்' எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், `இந்தச் சூழலில் ஐ.ஏ.எஸ் பதவியா, என்னுடைய தமிழ் மொழியா என்று எவராவது என்னிடம் கேட்டால், `என் மொழிதான் எனக்குப் பெரிது’ என்பேன். `அதுவே, ஐ.ஏ.எஸ் உட்பட அனைத்தையும்விட பெரிது’ என்பேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். தவிர, தமிழக அரசில் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும், கடந்த ஏழு ஆண்டுகளாக தலைமைச் செயலகத்துக்கும், சகாயத்துக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. வாக்காளர் வரைவுப் பட்டியல் ஆய்வு உட்பட சிறிய அளவிலான பணிகளைக்கூட அரசு அவருக்கு வழங்கவில்லை. இதனால் அரசு நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். அதன் காரணமாக விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தார்.

பாதை மாறும் ‘மக்கள் பாதை’! - அமைப்பைக் கைகழுவிய சகாயம்...

ஆனாலும், சகாயத்தின் ஓய்வு முடிவுக்கு எந்த பதிலையும் கூறாமல் தலைமைச் செயலாளர் சண்முகம் காலம் கடத்திவந்தார். இந்தநிலையில், நேற்று முந்தினம் அவரது விருப்ப ஓய்வு முடிவை ஏற்பதாக அரசுத் தரப்பிலிருந்து தகவல் வெளியானது. இந்த திடீர் அறிவிப்பை சகாயம் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இது குறித்து நம்மிடம் பேசிய அவரின் ஆதரவாளர்கள், ``இந்திய ஆட்சிப் பணியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்திருக்கிறார் சகாயம். அவரது அறையில் காந்தி படமும் `லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வாசகங்களும் இடம்பெற்றிருக்கும். தனது பணிக்காலம் முழுவதிலும் காந்தியக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவராக இருந்தார். அதனால்தான், காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி தனது விருப்ப ஓய்வு மனுவை அரசுக்கு அளித்தார். அரசு விதிகளின்படி, ஓர் அதிகாரி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தால், 90 நாள்களுக்குள் முடிவைத் தெரிவிக்க வேண்டும். `இது தொடர்பாக மாற்றுக் கருத்து இருக்கிறதா?' எனவும் கேட்க வேண்டும். ஆனால், எந்த பதிலையும் கூறாமல் திடீரென அவரது விருப்ப ஓய்வு மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி விருப்ப ஓய்வு பெற வேண்டும் என நினைத்தார் சகாயம். அவரது எண்ணத்தை நிறைவேற்றாமலேயே அனுப்பிவைத்திருக்கிறது தமிழக அரசு" என விவரித்தவர்கள்,

சண்முகம் ஐ.ஏ.எஸ்
சண்முகம் ஐ.ஏ.எஸ்

`` அரசுப் பணியிலிருந்து வெளியே வந்துவிட்ட பிறகு மிகவும் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார் சகாயம். இனி வரும் நாள்களில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவிருக்கிறார். அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டார். விரைவில் அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவார் என்றெல்லாம் பேசுகிறார்கள். அப்படிப்பட்ட மனநிலையில் அவர் இல்லை. சமூகப் பணிகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதைத் தவிர வேறு எந்தத் திட்டமும் அவரிடம் இல்லை" என்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு