Published:Updated:

சீமானின் கோபத்தைக் கிளறிய ஆடிட்டர் குருமூர்த்தி!- ரஜினி, கமல், விஜய் மீது பாய்ந்த பின்னணி!

சீமான்
சீமான்

`ஈழ விடுதலையில் நம்பிக்கைகொண்டவராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதுவே, ரஜினிக்கும் கமலுக்கும் ஈழ விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எனக் கேட்கிறோம்'.

எம்.ஜி.ஆர் ஆட்சியை சீமான் விமர்சித்த விவகாரம், அ.தி.மு.க-வில் மட்டுமல்லாமல் ரஜினி, விஜய் ரசிகர்கள் வட்டாரத்தையும் அதிரவைத்திருக்கிறது. ``ரஜினியை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு ஆடிட்டர் குருமூர்த்தி அளித்த பேட்டிதான் சீமானின் கோபத்துக்குக் காரணம்" என்கின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.

விஜய் - சீமான்
விஜய் - சீமான்

சென்னை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வந்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், `` ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணமே வரக் கூடாது' என்றவரிடம்,` விஜயையும் சேர்த்துச் சொல்கிறீர்களா' எனக் கேட்டபோது, ``எல்லோருக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நடிக்கிறது மட்டுமே நாடாளத் தகுதி என நினைக்கும் கொடுமையை இதோடு ஒழிக்க வேண்டும் என நினைக்கிறோம். நான் திரைத்துறையிலிருந்து வந்தாலும், ரசிகர்களைச் சந்திக்காமல் மக்களைச் சந்தித்தேன். என்னை அவர்களோடு ஒப்பிடக் கூடாது. இந்த நாட்டை ஆளும் தகுதி இருக்கும் ஒரே தலைவர் நல்லகண்ணுதான். அவருக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கிறது?

ரஜினி, கமல் இருவருமே எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் எம்.ஜி.ஆரைப் பேசும்போது வாக்குகள் இரட்டை இலைக்குத்தான் போகும். எம்.ஜி.ஆர்., பிரபாகரனை நேசித்தார். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும் இவர்கள், ஈழத்தைப் பற்றிய தங்களது நிலைப்பாட்டைச் சொல்லட்டும். என்.டி.ஆர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. எம்.ஜி.ஆர் வந்தது ஒரு காலச் சூழல். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல நடக்கவில்லை. ஏன் ஷாருக்கானுக்கெல்லாம் இந்த எண்ணம் வரவில்லை. எடப்பாடி ஆட்சி நன்றாக இல்லையென்றால், நான் வந்து நல்லாட்சி கொடுத்துவிட்டுப் போகிறேன்" எனக் கொதித்தார்.

கமல் - ரஜினி
கமல் - ரஜினி

சீமானின் பேச்சில் ரஜினிகாந்த் மீதான விமர்சனம் அதிகப்படியாக இருந்தாலும், நடிகர் விஜய் மீதான விமர்சனத்தை அவரது ரசிகர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, சீமானுக்கு எதிராக ஹேஷ்டாக்கைப் பதிவிட்டு, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் பதில் கொடுத்தனர். அ.தி.மு.க நிர்வாகிகளே சீமானுக்கு எதிராகப் பெரிய அளவில் கொந்தளிக்காத நிலையில், விஜய் ரசிகர்களின் கோபத்தை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை. இந்தநிலையில், எம்.ஜி.ஆர் நினைவுநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வைகோ, `எம்.ஜி.ஆர் செய்ததை வேறொருவர் செய்ய முடியாது. எம்.ஜி.ஆர்., பெரியாரின் எழுத்துகளை சட்டமாக்கினார். பிரபாகரனுக்கு அரணாக இருந்து ஈழத்தழிழர் மனதில் எப்போதும் இடம்பெற்றவர் எம்.ஜி.ஆர்' எனப் புகழ்ந்துவிட்டு, சீமானின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

''எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வரக் கூடாது'' - விஜய் மீது சீமான்  பாய்வது ஏன்?

சீமானின் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய அ.தி.முக செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார், `` எம்.ஜி.ஆர் ஆட்சி குறித்து விமர்சிக்கக்கூடிய தகுதி சீமானுக்கு இல்லை. தமிழக அரசியலில் ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல், வெறும் பரபரப்புக்காக சீமான் அரசியல் செய்கிறார். அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகிகளையே அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. நாம் தமிழர் கட்சியை முன்னேற்றப் பாடுபட்ட பலர் இன்றைக்கு அவருடன் இல்லை. அப்படியிருக்கையில், எம்.ஜி.ஆர் ஆட்சியை விமர்சிப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் மக்கள் தலைவராக இருந்தவர். அவரைப் பற்றி சீமானுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆவடி குமார்
ஆவடி குமார்

அரசியல் களத்தில் சீமானை ஒரு பேச்சாளராக மட்டுமே ஏற்றுக் கொள்ளலாம். தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருப்பதால், எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசி, மக்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க நினைக்கிறார். மனிதாபிமானம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எம்.ஜி.ஆரை ஏற்றுக்கொள்வார்கள். அவர் உடல்நலமில்லாமல் இருந்த காலகட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியே, `எம்.ஜி.ஆர் என்னுடைய நண்பர். விரைவில் நலம் பெறட்டும்' என்றார். அந்த அளவுக்கு மற்ற தலைவர்களும் மதிக்கக்கூடிய ஒருவராக எம்.ஜி.ஆர் இருந்தார்.

தொடக்க காலங்களில் சீமான், பெரியாரைத் தூக்கிப் பிடித்தார். பின்னர் அவரையே தூக்கியெறிந்தார். அவர் சொல்கிற கருத்தையெல்லாம் மக்கள் கவனிக்கத் தயாராக இல்லை. அவர் சொல்வதாலேயே எம்.ஜி.ஆரின் புகழ் குறையப்போவதுமில்லை. `பிரபாகரன் எனக்குக் கறி சோறு போட்டார்’ எனச் சீமான் சொல்வது உண்மையாக இருந்தால், அவர் எம்.ஜி.ஆரைப் பற்றி சீமானிடம் கூறியிருப்பார். ஈழத் தமிழர் விவகாரத்தில் எந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் உதவியாக இருந்தார் என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். எனவே, சீமானின் பேச்சைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை" என்றார்.

அ.தி.மு.க-வினரின் கோபம் குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் பேசினோம். ``எம்.ஜி.ஆரை நாங்கள் மதிக்கிறோம். இன்றைக்குக்கூட அவருடைய நினைவுநாளில் சுவரொட்டி அடித்து ஒட்டுகிறோம். இப்போதும் எம்.ஜி.ஆரைக் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறோம். பெரியாருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துகிறோம். அதேநேரம், எம்.ஜி.ஆருக்கு ஒரு புனித பிம்பம் கொடுத்துவிட்டு, அரசியலுக்கு வரும் நடிகர்களை விமர்சிக்கிறோம். அவர்கள், முன்வைக்கும் எம்.ஜி.ஆர் பிம்பத்தை உடைத்துப் பேச வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். அண்மையில் ஒரு தனியார் ஊடகத்தில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, `எம்.ஜி.ஆருக்குப் பிறகு வரலாறு ரஜினியைப் பதிவு செய்யும். எம்.ஜி.ஆரின் குளோனிங் ரஜினி' எனப் பேசினார். இந்தக் கருத்துதான் எங்களின் கோபத்துக்குப் பிரதான காரணம்.

சீமான்
சீமான்

எனவேதான், எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சிலர் எம்.ஜி.ஆரை முன்வைத்துக் கொண்டு அரசியலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். ஈழ விடுதலையில் நம்பிக்கைகொண்டவராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதுவே, ரஜினிக்கும் கமலுக்கும் ஈழ விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எனக் கேட்கிறோம். எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் கெட்ட நிகழ்வுகள் இருக்கின்றன. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் எம்.ஜி.ஆரின் செயல்பாட்டைப் பற்றித் தொடக்கத்திலிருந்தே சீமான் பேசிவருகிறார். எம்.ஜி.ஆர் செய்த நல்ல விஷயங்களைப் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறோம். அவற்றிலுள்ள குறைகளையும் பட்டியலிடுகிறோம்" என்றார் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு