Published:Updated:

தென்காசி:`நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது!’ - 10 நாள்களுக்குப் பிறகு உடலை வாங்கிய உறவினர்கள்

நீதித்துறையை மதித்து உடலை வாங்கிய உறவினர்கள்
நீதித்துறையை மதித்து உடலை வாங்கிய உறவினர்கள்

வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது சர்ச்சைக்குரிய வகையில் விவசாயி உயிரிழந்தார். இது தொடர்பாக, வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதியுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த 75 வயது விவசாயியான அணைக்கரை முத்து என்பவரை வனத்துறை அதிகாரிகள் இரவு 11 மணிக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அனுமதியின்றி மின்வேலி அமைத்தது தொடர்பான அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

வனத்துறை விசாரணையில் உயிரிழந்த அணைக்கரை முத்து
வனத்துறை விசாரணையில் உயிரிழந்த அணைக்கரை முத்து

விசாரணையின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் தாக்கியதில் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகக் குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம்சாட்டியதுடன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி: வனத்துறை அலுவலகத்தில் விவசாயி மரணம்! - மாஜிஸ்திரேட் விசாரணையால் அதிகாரிகள் கலக்கம்

விவசாயி அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு சார்பாக 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

உடலை பெறக் காத்திருந்த உறவினர்கள்
உடலை பெறக் காத்திருந்த உறவினர்கள்

ஆனால், அதை ஏற்க மறுத்த அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், மறுபிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதை ஏற்ற நீதிமன்றம் மறுபிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. அதன்படி மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர், மறு உடற்கூறாய்வு செய்தார்கள்.

அணைக்கரை முத்து உடலை வாங்க மறுத்துக் கடந்த 10 நாள்களாக உறவினர்களும் குடும்பத்தினரும் போராடி வந்த நிலையில், இன்று (ஜூலை 30-ம் தேதி) உடலைப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் பேசிய அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி, ``நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் உடலைப் பெற்றுக் கொள்கிறோம். 

தந்தையின் உடலைப் பார்த்துக் கதறும் மகள் வசந்தி
தந்தையின் உடலைப் பார்த்துக் கதறும் மகள் வசந்தி

நாங்கள் காசு, பணத்துக்கு ஆசைப்படவில்லை. நல்ல நிலையில் இருந்த என் தந்தையை வனத்துறை அதிகாரி நெல்லை நாயகம் உட்பட 5 பேர் அடித்துக் கொன்றுவிட்டார்கள். அதனால் அவர்கள் மீது கொலை வழக்குப் பதிய வலியுறுத்தினோம். நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்” என்றார் நம்பிக்கையுடன், 

10 நாள்களுக்குப் பின்னர் விவசாயி அணைக்கரை முத்துவின் உடல், சொந்த ஊரான வாகைக்குளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு