Published:Updated:

`இந்த அரிசியை சாப்பிட முடியுமா?!' -முதல்வர் தொகுதியில் திருநங்கைக்கு நேர்ந்த அதிர்ச்சி

நிவாரண உதவி
நிவாரண உதவி ( க. தனசேகரன் )

''முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷும், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் எம்ரால்ட் வெங்கடாசலமும் தொடங்கி வைத்தார்கள். அவர்கள் கொடுத்தனுப்பிய அரிசியைத்தான் நாங்கள் நங்கவள்ளி சுற்று வட்டாரப் பகுதியில் கொடுத்தோம்.''

கொரோனா லாக்டெளனால் அடித்தட்டு மக்கள் உணவுக்கு வழியில்லாமல் தவித்துவருகிறார்கள். அதையடுத்து, தன்னார்வலர்கள் பலரும் மக்களுக்கு உணவுப் பொருள்களைக் கொடுத்து உதவி செய்துவருகிறார்கள். ஆனால், முதல்வர் தொகுதியில் ஆளுங்கட்சியினர் நிவாரணம் என்ற பெயரில் புழுத்துப்போன கொட்டை அரிசி 5 கிலோ மட்டும் கொடுத்ததாக திருநங்கை ஒருவர் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

மலர்கோகிலா
மலர்கோகிலா

அதையடுத்து, அந்த திருநங்கை வசிக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பெரியசோரகை வைரனேரி குக்கிராமத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினோம், ''என் பேரு மலர் கோகிலா. இந்த ஊருதான் எனக்குப் பூர்வீகம். என்கூட 15 திருநங்கைகள் இருக்கிறார்கள். நாங்க பத்து கறவை மாடுகள் வைத்து சுய தொழில் செய்து வாழ்ந்துவருகிறோம். நான் அ.தி.மு.க கட்சியில் இருக்கிறேன்.

கட்சிக்காரர்கள்  அடாவடி
கட்சிக்காரர்கள் அடாவடி

எங்கக் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாததால், குடிநீர் பைப் போடச் சொன்னேன். பஞ்சாயத் தலைவர் 14 லட்சம் செலவு செய்து வந்ததால் சும்மா போட மாட்டாராம். வீட்டுக்கு ஆயிரம் கொடுத்தால் போடுவதாகச் சொன்னாங்க. நான் குள்ளானூர் பேங்க்ல நகையை அடமானம் வச்சு ஏழாயிரம் கொடுத்து ஏழு பைப் போட்டுட்டு இருந்தேன். அப்போது `முதலமைச்சர் கொடுத்தார்'னு முதல்வர் புகைப்படம் போட்டு 5 கிலோ அரிசிப் பை எனக்கும், என்கூட இருக்கும் திருநங்கைகள் 10 பேருக்கும் கொடுத்தாங்க.

அதை பிரித்துப் பார்த்தோம். ரேஷன் அரிசியை பாலிஷ் போட்டு கொடுத்திருக்காங்க. முதலமைச்சராக இருக்காரு, இப்படி ஒரு அரிசியைக் கொடுத்திருக்காரு. அதேபோல் உப்பு, மிளகாய் இல்ல... கடுகு, புளி, சீரகம், பருப்பு, கத்திரிக்காய், வெண்டைக்காய் என எதுவும் கொடுக்கல. இந்த அரிசியை மனுஷன் சாப்பிட முடியாது. கூழ் காய்ச்சி மாட்டுக்குத்தான் ஊத்த முடியும்''என்று பேசிக் கொண்டிருந்தார்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

அப்போது அங்கு, நங்கவள்ளி அ.தி.மு.க ஒன்றிய இணைச் செயலாளர் மாணிக்கம் தலைமையில் வந்த கட்சிக்காரர்கள், ''அரிசி நல்லாதானே இருக்கு, எதுக்கு இப்படி குறைச் சொல்லிட்டு இருக்க, தொலைத்துவிடுவேன்'' என கட்சிக்காரர்கள் திருநங்கையை அடிக்கப் பாய்ந்ததோடு நம்முடைய புகைப்படக்காரரின் செல்போனையும் பிடுங்கிக்கொண்டு அடாவடி செய்தார்கள். அதன் பிறகு, திருநங்கைகள் தங்களுக்குக் கொடுத்த அரிசியை எடுத்துக் காட்டிய பிறகு சைலன்ட் ஆனார்கள்.

நம்மிடம் பேசிய கட்சிக்காரர்கள், ''முதல்வர் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி பகுதியில், முதல்வரின் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷும், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் எம்ரால்ட் வெங்கடாசலமும் தொடங்கி வைத்தார்கள். அவர்கள் கொடுத்தனுப்பிய அரிசியைத்தான் நாங்கள் நங்கவள்ளி சுற்று வட்டாரப் பகுதியில் கொடுத்தோம்'' என்றார்கள்.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

இதுபற்றி முதல்வரின் மைத்துனர் வெங்கடேஷிடம் கேட்டதற்கு, ''நன்றாக பார்த்துட்டு சொல்லுங்க. நாங்க அனைவருக்கும் நல்ல அரிசி கொடுத்திருக்கிறோம். யாரோ ஒருவர் குறை சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொல்லுவதை எடுத்துக்கொள்ளக் கூடாது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு