Published:Updated:

திருச்சி: ஆர்.டி.ஐ-யில் அம்பலமான ஊழல்!- அரசு அலுவலகத்தில் சமூக ஆர்வலர்மீது கொலைவெறித் தாக்குதல்

தடுப்புச் சுவர் இல்லாமல் போடப்படும் சாலை
தடுப்புச் சுவர் இல்லாமல் போடப்படும் சாலை

`அதிகாரிகள் இருக்கும் அலுவலகத்துக்குள் ரௌடிகள் வந்து தாக்குகிறார்களென்றால், அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று நீங்களே நினைத்துப்பாருங்கள். இங்கிருக்கும் அதிகாரிகளுக்கு அவர் மாதா மாதம் படியளக்கிறார்.’

திரு`தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளில் முறைகேடு நடைபெறுகிறது’ என்று ஆர்.டி.ஐ மூலமாகத் தகவல் கேட்ட சமூக ஆர்வலரை அதிகாரிகள் முன்னிலையில் கான்ட்ராக்டர் தாக்கிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருவருக்குள் நடந்த கைகலப்பைத் தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்த விவகாரம் சமூக ஆர்வலர்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது.

திருச்சி உதவிகோட்டப் பொறியாளர் அலுவலகம்
திருச்சி உதவிகோட்டப் பொறியாளர் அலுவலகம்

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. சாலை அமைக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒப்பந்தத்தின்படி சாலைகள் அமைக்கப்படாமல், ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாகப் புகார் எழுந்தது

சாலை
சாலை

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்த சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன், அய்யாரப்பன் ஆகியோரை ஒப்பந்ததாரர் திருக்குமரனும், அவரின் ஆதரவாளர்களும் மிரட்டியிருக்கிறார்கள்.

அத்தோடு அல்லூர் சீனிவாசனை பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு வரவைத்துத் தாக்கியிருக்கிறார்கள். இதைத் தட்டிக்கேட்க வேண்டிய கோட்டப் பொறியாளர் வடிவேல் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளாமல் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அல்லூர் சீனிவாசன், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குச் சென்று காவல்துறை உதவியோடு தப்பி வெளியே வந்திருக்கிறார்.

அல்லூர் சீனிவாசன்
அல்லூர் சீனிவாசன்

இது குறித்து சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசனிடம் பேசினோம். ``இந்த ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்துகிடக்கிறது. ஊழல் மற்றும் முறைகேடு நடப்பதைத் தட்டிக் கேட்ட எனக்கு இந்த நிலையா?" என்று ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார்.``திருச்சி மாவட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களைத் தொடர்ந்து வெளியில் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன். திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் குடமுருட்டி - ஜீயபுரம் சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெறுகிறது. ரூ.55 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்தத் திட்டத்தில் தடுப்புச் சுவர் கட்டாமலேயே சாலையை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது.

`கிசான் முறைகேடு முதல் நின்றுபோன தேர்தல் வரை...’  - கடைசி நாளில் கலகலத்த சட்டசபை!

இதில் முறைகேடுகள் நடக்கின்றன என்று ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்டிருக்கிறேன். அத்தோடு இந்தத் திட்டம் குறித்து, திட்ட நகலைப் பெற வேண்டி, நான் உதவி கோட்டப் பொறியாளர் ரவிக்குமாரிடம் பேசினேன். அவர், என்னை நேற்று மாலை 6 மணிக்கு வரச் சொன்னார். அதன்படி அலுவலகம் சென்று அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது உதவி கோட்டப் பொறியாளர் ரவிக்குமார் தூண்டுதலின் பேரில் ஒப்பந்ததாரர் திருக்குமரன் உள்ளே நுழைந்து,`நான் கோடிக்கணக்கில் முதல் போட்டு முதலமைச்சர் முதல் அதிகாரிகள் அத்தனை பேருக்கும் கப்பம் கட்டி வேலை செய்துவருகிறேன்.

திருச்சி
திருச்சி

என்னைப் பற்றி பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து கேவலப்படுத்துகிறாயா?’ என்று என் சட்டையைப் பிடித்துத் தாக்கத் தொடங்கினார். `கொஞ்ச நேரத்தில் உன்னைப் போட்டு தள்ளுறேன் பாக்குறீயா’ என்று 25 பேர் ஆயுதங்களுடன் என்னைத் தாக்க முயல, நான் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துவிட்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன்.

புதிதாகப் போடப்படும் சாலை
புதிதாகப் போடப்படும் சாலை

ஆனால், இதைக் கொஞ்சம்கூட அதிகாரிகள் தட்டிக்கேட்கவில்லை. அதிகாரிகள் இருக்கும் அலுவலகத்துக்குள் ரௌடிகள் வந்து தாக்குகிறார்கலென்றால், அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று நீங்களே நினைத்துப்பாருங்கள். இங்கிருக்கும் அதிகாரிகளுக்கு மாதா மாதம் படியளக்கிறார் கான்ட்ராக்டர் திருக்குமரன். அவருக்குத்தான் அதிகாரிகள் விசுவாசமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்து போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறேன்” என்றார் காட்டமாக.

உதவி கோட்டப் பொறியாளர் ரவிக்குமார்
உதவி கோட்டப் பொறியாளர் ரவிக்குமார்

இது குறித்து உதவி கோட்டப் பொறியாளர் ரவிக்குமாரிடம் பேசினோம்.``வேலைகள் சரியாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், சீனிவாசன் சரியாக நடக்கவில்லை என்று பிரச்னைகளில் ஈடுபடுகிறார். வேலை குறித்த தகவலை எங்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் பதிலளித்துவிட்டோம். அவர்கள் தாக்கிக்கொண்ட விவகாரம் பற்றி எங்களுக்குத் தெரியாது” என்று கூறி போனைத் துண்டித்தார்.

அடுத்த கட்டுரைக்கு