Published:Updated:

`வைகை தெர்மாகோல் திட்டத்துக்கு செலவு எவ்வளவு?' - ஆர்.டி.ஐயில் கிடைத்த பதில்

வைகை அணையின் நீர் ஆவியாவதைத் தடுப்பதற்காக தெர்மாகோல் மூலம் மூடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதற்குப் பணம் எதுவும் செலவிடப்படவில்லை என ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையை மூடும் தெர்மாகோல் திட்டம்
வைகை அணையை மூடும் தெர்மாகோல் திட்டம்

வைகை அணையில் உள்ள நீரை ஆவியாகாமல் தடுப்பதற்காக 2017-ம் ஆண்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் திட்டப்படி, அணைகளில் உள்ள நீர் நிலைகளின் மீது தெர்மாகோல் அட்டைகளால் மூடினார்கள். ஆனால், தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கியதால் இந்தத் திட்டம் தோல்வியடைந்தது. இந்தத் திட்டம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

வைகை அணையை மூடும் தெர்மாகோல் திட்டம்
வைகை அணையை மூடும் தெர்மாகோல் திட்டம்

இந்தத் திட்டம் குறித்த விமர்சனங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரம்மா, தெர்மாகோல் திட்டம் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்தத் திட்டத்துக்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அறிவுறுத்திய அதிகாரி யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

2017-ம் ஆண்டு தகவல் அறியும் சட்டத்தின்படி பிரம்மா கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. அதனால் முறையீடு செய்துள்ளார். ஆனாலும் பதில் கிடைக்காததால் ஆணையத்தில் இரண்டாவது முறையீடு செய்துள்ளார். அதன் பின்னர் தற்போது அவரது கேள்விகளுக்குப் பதில் கிடைத்திருக்கிறது.

வைகை அணையை மூடும் தெர்மாகோல் திட்டம்
வைகை அணையை மூடும் தெர்மாகோல் திட்டம்

வைகை அணையின் பரப்பளவு, அதில் நீரின் கொள்ளளவு ஆகியவை குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கேள்விகளுக்கு `இல்லை, தகவல் கிடையாது’ போன்ற பதில்களே கொடுக்கப்பட்டிருக்கிறது. `வைகை அணையின் நீர், சூரிய வெப்பத்தால் தினமும் ஒரு மில்லியன் கன அடி அளவுக்கு ஆவியாகிறது’ எனவும் ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தகவல்கள் குறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், ``வைகை அணையின் நீர் ஆவியாவதைத் தடுக்கும் வகையில் தெர்மாகோல் மூலம் மூடுவதற்கு முயற்சி நடைபெற்றது. அதற்கு எட்டு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தொலைக்காட்சிகளில் பேட்டியளித்ததைப் பார்த்தேன். ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆர்.டி.ஐ தகவலில் பணம் செலவிடப்படவில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள்.

வழக்கறிஞர் பிரம்மா
வழக்கறிஞர் பிரம்மா

இதற்காக டெண்டர் எதுவும் விடவில்லை என்றும், முந்தைய ஆய்வு அறிக்கை எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஒப்பந்தம் எதுவும் கோராமல் அமைச்சர் தலைமையில் இந்த விழா நடந்தது எப்படி? ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கவில்லை.

தினமும் ஒரு மி.க.அடி தண்ணீர் ஆவியானால் ஒரு மாதத்தில் அணையின் நீர் அளவும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு மாதத்துக்கு எனக்குக் கொடுக்கப்பட்ட பதிலில் 30 நாள்களுக்கும் ஏறக்குறைய ஒரே அளவில் நீர் இருப்பு இருந்துள்ளது. பணமே செலவிடவில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். அமைச்சர் மற்றும் இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட சிறப்புத் திட்டத்துக்குப் பணம் செலவாகவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை.

அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ
அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ

இரண்டுமுறை முறையீடு செய்த பின்னரே எனக்கு ஆர்.டி.ஐ தகவல் கிடைத்திருக்கிறது. அதில், நான் கேட்டிருந்த பல கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. பதில் கொடுக்காததால் நான் சோர்ந்துவிட மாட்டேன். தெர்மாகோல் விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவேன்’’ என்றார்.