Published:Updated:

ஜெ.அன்பழகன் மரணமும் சிகிச்சைக் கட்டணம் குறித்த சர்ச்சைகளுக்கான விளக்கமும்!

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

இருபது ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்கா சென்று கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர். அன்பழகன் குடும்பத்துக்கு, மருத்துவமனைக் கட்டணம் கட்டமுடியாமல் போனதா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

மறைந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், சிகிச்சைக்காக ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது சிகிச்சைக் கட்டணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசே கட்டியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலவிவருகிறது.

ஜெ.அன்பழகன் - ஸ்டாலின்.
ஜெ.அன்பழகன் - ஸ்டாலின்.

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, கருணாநிதி குடும்பத்துக்கும் நெருக்கமானவர் அன்பழகன். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்கா சென்று கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர். பென்ஸ் வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு வசதி படைத்த அன்பழகன் குடும்பத்துக்கு, மருத்துவமனைக் கட்டணம் கட்டமுடியாமல் போனதா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. அதற்குக் காரணம் சமூக வலைதளங்களில் உலவிவரும் ஒரு தகவல் என்கிறார்கள்.

அந்தத் தகவலில், “15 நாள்களுக்கு முன்பு எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜெ.அன்பழகன், உடம்பு சுகமில்லாமல் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிறுநீர் தொற்று கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் உபாதைகள் இருந்திருக்கிறது. அவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்தும் 14 நாள்களுக்குப் பிறகு அவருடைய உயிர் பிரிந்து விட்டது. அவருக்கான மருத்துவச் செலவு, 21 லட்சத்து18 ஆயிரம் ரூபாய் ஆகியிருக்கிறது. மருத்துவமனை நிர்வாகம் அவரின் உடலை யாரிடம் கொடுப்பது எனக்கேட்ட பொழுது, குடும்பத்தாரிடம் கொடுக்க வேண்டாம், அவர் சார்ந்த கட்சியிடமும் கொடுக்க வேண்டாம் என அரசு சொல்லிவிட்டது. அரசு செலவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. பிறகு, மருத்துவமனை நிர்வாகம் பணம் கேட்ட பொழுது குடும்பத்தாரும் தரவில்லை, அவர் சார்ந்த கட்சியும் தரவில்லை. பிறகு, அரசிடம் அந்த மருத்துவமனை நிர்வாகம் பணம் கேட்டபொழுது விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் ரூபாயைத் தருவதாக அரசு சொன்னது. மீதிப் பணத்தை அவர்களிடமே வாங்கிக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மருத்துவமனை நிர்வாகம் மூன்று முறை முயன்றும் அவர்களிடமிருந்து பணம் பெற முடியவில்லை. திரும்பவும் அரசிடமே வந்து, அரசு சொன்னதால்தான் உடலை ஒப்படைத்தோம் இல்லை என்றால் பணம் பெற்றுக்கொண்டுதான் ஒப்படைத்திருப்போம். இப்பொழுது எங்களுடைய பணத்துக்கு வழியைச் சொல்லுங்கள் என முதலமைச்சரிடமே கேட்டிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு, அந்தப் பணத்தை நான் தருகிறேன். எனத் தனது காசோலையில் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார், நமது தமிழக முதல்வர்” என்று அந்தத் தகவல் கடந்த சில நாள்களாக உலவிவருகிறது.

கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும் நாம்?

குறிப்பாக இந்தச் செய்தியை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள், செய்தி நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, இதில் வந்த செய்தி என்று குறிப்பிட்டிருந்தனர். அப்படி ஒரு செய்தியை வெளியிடாத விகடனின் பெயரிலும் இந்தச் செய்தி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு, இதுவரை தி.மு.க தரப்பிலும் முறையாக விளக்கமும் தரப்படவில்லை. அன்பழகனுக்குச் செக்கில் கையெழுத்திட்டு கொடுத்தார் என்று சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பதில் அளிக்கப்படவில்லை.

ரேலா மருத்துவமனை
ரேலா மருத்துவமனை
வி.சதிஷ்குமார்

உண்மையில் அன்பழகன் சிகிச்சை விவகாரத்தில் என்ன நடந்தது என்று அவர் சிகிச்சை பெற்ற ரேலா மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவரான காமராஜிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இப்படி ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் உலவுவது எங்கள் கவனத்துக்கு வந்தது. மறைந்த அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, எங்கள் மருத்துமவனையின் உரிமையாளரான நாடாளுமன்ற உறுப்பினர், ஜெகத்ரட்சகனின் நெருங்கிய குடும்ப நண்பர். அன்பழகன் அட்மிட்டாகும்போதே, அவரிடம் பேசிவிட்டுதான் அட்மிட் ஆனார். ஆனால், அவர் உயிரைக் காப்பாற்றப் போராடியும் முடியாமல்போய்விட்டது. அவரது மருத்துவச் செலவுக்கான கட்டணம் எதையும் பெற வேண்டாம் என்று ஜெகத்ரட்சகன் சொல்லிவிட்டார். எந்தக் கட்டணமும் அவர்கள் குடும்பத்தினரிடம் கேட்கவில்லை. அதேபோல், அன்பழகனுக்கான சிகிச்சை செலவு 21 லட்சம் என்று சொல்வது பொய். அவ்வளவு ரூபாய் அவருக்கு செலவாகவில்லை” என்றார்.

அன்பழகன் மறைவுக்குப் பிறகான சர்ச்சை இனியாவது ஓய்ந்தால் சரிதான்!

அடுத்த கட்டுரைக்கு