Published:Updated:

`என் அக்காவைத் தாக்கியது எந்த விதத்தில் நியாயம்?' - சர்ச்சையில் சேலம் இன்ஸ்பெக்டர்

சேலம் சாலைமறியல்
சேலம் சாலைமறியல்

`பொறுமையாகச் சொல்லி இருந்தால் எழுந்து சென்றிருப்போம். ஆனால், இன்ஸ்பெக்டர் என் அக்காவை கன்னத்தில் அடித்தது எந்த விதத்தில் நியாயம்?'

சேலம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர், சூர்யா. வயது 22. இவர், கடந்த 25-ம் தேதி இரவு, ஓமலூர் ரயில் நிலையத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் தூக்கிவந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.

இன்ஸ்பெக்டர் குமார்
இன்ஸ்பெக்டர் குமார்

அதையடுத்து, சூர்யாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், கொலையாளிகளைக் கைதுசெய்ய வேண்டுமென்றும், பெற்றோர்களும் உறவினர்களும் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலின்போது, சேலம் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் குமார், ஒரு பெண்ணின் கன்னத்தில் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதுபற்றி சூர்யாவின் தாய்மாமன் லட்சுமணனிடம் பேசினோம். ``சூர்யா, செங்கல் சூளையில் லாரி டிரைவராக இருந்தான். எங்க குடும்பத்திற்கும் பழனிவேல், நல்லதம்பி குடும்பத்திற்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துவந்தது. பெண் பிரச்னையாலும், ஊருக்குள் சூர்யா வேகமாக லாரி ஓட்டியதாகவும் சூர்யாவை அவர்கள் தாக்கினார்கள். அதிலிருந்து பழனிவேல், நல்லதம்பி குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் பகை இருந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில், சூர்யா ஓமலூர் ரயில் நிலையத்தில் அடிபட்டுக் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று சூர்யாவை தூக்கிவந்து மருத்துவமனையில் சேர்த்தோம். தலையில் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. காவல்துறையில் புகார் கொடுத்ததோடு, சந்தேகப்படும் நபர்களையும் எழுதிக் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலைமறியல்
சாலைமறியல்

சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் சூர்யா இறந்துவிட்டான். அந்த ஆதங்கத்தில், கலெக்டரிடம் நீதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தின் எதிரே சாலை மறியல் செய்தோம். பொறுமையாகச் சொல்லி இருந்தால் எழுந்துசென்றிருப்போம். ஆனால், இன்ஸ்பெக்டர் என் அக்காவை கன்னத்தில் அடித்தது எந்த விதத்தில் நியாயம்? ஏற்கெனவே மகனை இழந்து தவிக்கும் என் அக்காவுக்கு, இது மேலும் மன உளைச்சல் கொடுத்திருக்கிறது'' என்றார்.

இதுபற்றி சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் குமாரிடம் கேட்டதற்கு, ``சாலையின் நடுவில் அமர்ந்துகொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்தார்கள். நடுரோட்டில் இருந்த ஒரு பெண்ணை தூக்கிவிட்டு ஓரத்திற்குக் கொண்டுவந்தேன். அப்போது, இன்னொரு பெண் என் கையைப் பிடித்து இழுத்து ஒருமையில் திட்டினார். என் கையை இழுப்பதற்காகவே விலக்கினேன். நான் யாரையும் அடிக்கவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு