Published:Updated:

மலைக்கிராம மக்களுக்கு உதவிய வீரபாண்டி ஆறுமுகம் மகன்!- சதிவழக்கு போட்ட சேலம் காவல்துறை #lockdown

பிரபு
பிரபு

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யச் சென்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் பிரபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. நாளுக்குநாள் இதன் தாக்கம் அதிகரிப்பதோடு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 25 நாள்கள் கடந்துவிட்டன. நாட்டின் பொருளாதாரம் முடங்கியதோடு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சாமானியர்களின் சமையல் பாத்திரங்களும் அரிசியைப் பார்த்து பல நாள்கள் ஆகிவிட்டன.

மலைக் கிராமம்
மலைக் கிராமம்

இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து சிலர் ஆங்காங்கே இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகளுக்கும் ஆளும்கட்சி தரப்பில் முட்டுக்கட்டை போடுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனும் மருத்துவருமான பிரபு, தன் சொந்த ஊரான வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார். நேற்று கட்சிக்காரர்கள் சிலருடன் சருகு மலைக்கு நடந்து சென்று அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார். ``ஓட்டுக் கேட்கக்கூட இங்கு யாரும் வந்ததில்லை. உதவி செய்ய வந்திருக்கீங்களே...'' என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளனர். ஆனால், அரசிடம் அனுமதி பெறாமல் உதவி செய்ததாக பிரபு மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

மருத்துவர் பிரபுவிடம் பேசினோம். ``கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு விதித்திருக்கும் ஊரடங்கால் அடித்தட்டு மக்கள் மிகவும் பாதித்துள்ளனர். எங்கள் கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படி ஊரடங்கு உத்தரவு போடுவதற்கு முன்பே என்னுடைய சொந்தத் ஊரான வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு முகக்கவசம், கையுறைகள் ஆகியவற்றை வழங்கியதோடு 1,800 குடும்பங்களுக்குத் தலா 1,500 ரூபாய் மதிப்புடைய அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, மைதா, ரவை, புளி, கடுகு, சீரகம், மிளகாய் என 12 அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய மூட்டைகளை வழங்கி வருகிறேன்.

உதவி
உதவி

பனமரத்துப்பட்டியை அடுத்து சருகு மலைப் பகுதியில் கீழூர், மேலூர் என இரண்டு மலைக் கிராமங்கள் உள்ளன. அங்கு 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தினக்கூலித் தொழிலாளர்கள். ஊரடங்கால் வேலை இழந்து உணவுக்கு வழியில்லாமல் தவிப்பதாகக் கழக நிர்வாகிகள் மூலம் அறிந்தேன்.

அதையடுத்து, நானும் கட்சி நிர்வாகிகள் 10 பேரும் 6 கிலோ மீட்டர் செங்குத்தான மலைப் பாதையில் நடந்தே அக்கிராமங்களுக்குச் சென்றோம். அந்த மக்கள் உண்மையிலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். 5 வீடுகள் சேர்ந்து கஞ்சி காய்ச்சி ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வந்ததாகக் கூறினார்கள்.

நாங்கள் நடந்து சென்றதால் ஏற்பட்ட காலின் வலிகள் அவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து மறைந்து போயின. அந்தக் கிராமத்துக்குச் செல்வதற்கு முதல்நாள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துதான் சென்றோம். ஆனால், பனமரத்துப்பட்டி காவல்துறை எங்கள் மீது வழக்கு போட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது'' என்றார்.

உதவிகள்
உதவிகள்

இதுபற்றி பனமரத்துப்பட்டி உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வத்திடம் கேட்டோம். ``144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. அரசின் அனுமதி பெற்றே பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அரசிடம் அனுமதி பெறாமல் பிரபு மலைக் கிராமத்திற்கு சென்றிருக்கிறார். அங்குள்ள பொதுமக்களுக்குக் கொரோனா நோய் பரப்புவதற்காகத் திட்டமிட்டு சதித்திட்டம் தீட்டிச் சென்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு