Published:Updated:

சேலம்: `நேர்ல வந்தா ஆபீஸை சுடுகாடாக்கிடுவேன்!’ - துணை ஆட்சியரை மிரட்டிய வருவாய் ஆய்வாளர்

சேலம் ஆட்சியர் அலுவலகம்
சேலம் ஆட்சியர் அலுவலகம் ( எம். விஜயகுமார் )

துணை ஆட்சியர் சாந்தியை போனில் தொடர்புகொண்டு ஒருமையில் பேசி திட்டியதோடு, `அலுவலகத்தைச் சுடுகாடா ஆக்கிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் துணை ஆட்சியராக இருப்பவர் சாந்தி. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளரும், முதுநிலை வருவாய் ஆய்வாளருமானவர் அர்த்தனாரி. இவரும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார்கள். இந்தநிலையில் அர்த்தனாரி, துணை ஆட்சியர் சாந்தியை போனில் தொடர்புகொண்டு ஒருமையில் பேசித் திட்டியதோடு, `அலுவலகத்தைச் சுடுகாடா ஆக்கிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது. இது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணாதுரை
அண்ணாதுரை
எம். விஜயகுமார்

அந்த ஆடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஜங்ஷன் அண்ணாதுரை கூறுகையில்,``நான் சமூகத்தில் விளிம்புநிலை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் குரல் கொடுக்கக்கூடியவன். அதனால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் பணியாற்றும் பல ஊழியர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் அர்த்தனாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் துணை ஆட்சியர் சாந்தியிடம் அநாகரிகமாகப் பேசியதாக ஒரு ஆடியோவை சிலர் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார்கள்.

அந்த ஆடியோவில் சாந்தியிடம் பேசும் அர்த்தனாரி, ``அந்த இலக்கியா பெண்ணிடம் என்னங்க பிரச்னை? அவுங்க என் தங்கை. கூப்பிட்டுப் பொறுமையா சொல்லுங்க. அநாவசியமாகப் பேசுவதை நிறுத்திக்கோங்க. நேர்ல வந்தா நல்லா இருக்காது. ஆபீஸைச் சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன். விளையாடுறீங்களா… நேரில் வந்தா நாறிப்போயிடும். நீ அதிகாரியா… உனக்கு அறிவு இருக்கா… வந்தேன்னா ஆபீஸை இழுத்து மூடி சீல்வெச்சிடுவேன். நானும் பார்த்துட்டே இருக்கேன். நீ ஓவரா போற, நீயும் ஒரு பொம்பளதானே… நான் நேர்ல வந்தால் தாங்க மாட்டே’’ என்று பேசியிருப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

சங்கம் என்பது ஊழியர்களின் ஒற்றுமைக்காகவும். ஊழியர்கள் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டால் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் இருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத போது அறப்போராட்டத்தில் ஈடுபட்டு நியாயம் பெற்றுத் தர வேண்டும். அதை சுயநலத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் அர்த்தனாரி, சுயநலத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு பெண் அதிகாரியை இப்படிக் கீழ்த்தரமாக பேசியது மிகவும் தவறானது.

அதனால். அர்த்தனாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட வருவாய் சங்கம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு சங்கத்தைவிட்டு நீக்க வேண்டும். தேசிய மகளிர் நல ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.

ஆட்சியர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம்

துணை ஆட்சியர் சாந்தியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர் பேச மறுத்துவிட்டார். இது பற்றி சேலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, ``துணை ஆட்சியர் சாந்தி, வன்மமாக நடந்துகொள்ளக் கூடியவர் அல்ல. சக ஊழியர்களை அனுசரித்து நடக்கக்கூடியவர். அவரிடம் பணியாற்றும் ஊழியர்களைச் சமமாக நடத்தக்கூடியவர். 5-ம் தேதி அனுப்ப வேண்டிய செலவுப் பட்டியல்களை 12-ம் தேதி வரை கொடுக்காமல் காலதாமதம் செய்ததால், இலக்கியா மீது கோபப்பட்டது உண்மை. ஆனால் மரியாதைக் குறைவாக பேசவில்லை. ஓர் உயரதிகாரி, பணியாளர்கள் தவறு செய்தால் கேட்கக் கூடக் கூடாது என்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. அதற்காக, சங்கச் செயலாளர் அதிகாரியை அநாகரிகமாகப் பேசியது முற்றிலும் தவறானது’’ என்றார்கள்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் அர்த்தனாரியிடம் இது பற்றிக் கேட்டோம். ``அந்தம்மா இங்கேயே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கண்காணிப்பாளராக இருந்தார். மூன்றாவது மாதம் பதவி உயர்வு பெற்று துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். இவர் துணை ஆட்சியரான பிறகு, ஊழியர்களுக்குத் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துவந்தார். நானும் பல முறைக்கு அவரைச் சந்தித்து `கொரோனா காலத்தில் ஊழியர்கள் பணிக்கு வருவதே கஷ்டம். அதனால் முறையாகப் பேசுங்கள்’ என்று கூறினேன்.

சேலம்: உயிருக்குப் போராடிய முதியவர்; ஃப்ரீஸரில்வைத்து சாவுக்காகக் காத்திருந்த சகோதரர்!

சம்பவத்தன்று எங்க சங்க மீட்டிங்குக்காக கரூர் சென்று விட்டேன். இலக்கியா என்ற பெண்ணை அனைவரின் முன்னிலையிலும் துணை ஆட்சியர் திட்டியிருக்கிறார். அந்தப் பெண் அழுதுகொண்டே என்னிடம் சொன்னார். அதையடுத்து அந்தம்மாவுக்கு போன் பண்ணினேன். `பெண்கள் என்றால் உடனே வந்துடுவீங்க’ என்று தவறாகப் பேசியதால், ஒரு பிடி பிடித்துவிட்டேன். அந்த அம்மா திட்டியதை எடிட்டிங் செய்திருக்கிறார். நான் தவறாகப் பேசியிருந்தாலும், கலெக்டரிடம்தான் சொல்ல வேண்டும். கட்சிக்காரர்களிடம் சொல்லி சமூக வலைதளத்தில் பரப்பியது தவறு’’ என்பதோடு முடித்துக்கொண்டார். இது சேலம் ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு