Published:Updated:

குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டதா தூய்மைப் பணியாளர் சடலம்?! -ஈரோட்டில் நடந்தது என்ன?

குப்பை எடுக்கும் வண்டியில் பாலன் உடல்
குப்பை எடுக்கும் வண்டியில் பாலன் உடல்

‘இறந்து போன தூய்மைப் பணியாளரின் உடலை ஆம்புலன்ஸ் கொடுக்காமல் குப்பை வண்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எங்கே போனது மனிதநேயம்?’ என பலவிதமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

குப்பை அள்ளும் வாகனத்தில் இறந்துபோன தூய்மைப் பணியாளர் ஒருவரின் சடலம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தினை முன்வைத்து ‘இறந்து போன தூய்மைப் பணியாளரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காமல் குப்பை வண்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எங்கே போனது மனிதநேயம்?’ என விதவிதமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. உண்மையிலேயே இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறதா? அல்லது அந்தப் புகைப்படத்தின் பின் இருக்கும் உண்மை என்ன என்பதையறிய களத்தில் இறங்கினோம்.

உயிரிழந்த பாலன்
உயிரிழந்த பாலன்

அந்தப் புகைப்படத்தில் சடலமாக இருப்பவரின் பெயர் பாலன் (46). ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்தவர். நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாகப் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த 6-ம் தேதி காலை நெரிஞ்சிப்பேட்டை அங்காளம்மன் கோயில் அருகே குப்பை சேகரிக்கும் பணியில் இருந்தபோது, திடீரென மயங்கி சரிந்து விழுந்திருக்கிறார். இதனைப் பார்த்து திகைத்துப் போன சக பணியாளர்கள், பதற்றத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வாகனத்தில் பாலனை ஏற்றிக்கொண்டு 2 கி.மீ தூரத்திலுள்ள அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கிளம்பியிருக்கின்றனர்.

வழியில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று தென்பட, அதன் பணியாளர் பாலனை பரிசோதனை செய்திருக்கிறார். அதில் வரும் வழியிலேயே பாலன் உயிரிழந்திருப்பது தெரிந்திருக்கிறது. ஹார்ட் அட்டாக்கினால்தான் பாலன் இறந்திருக்கக்கூடும் எனச் சொல்லியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கதறி அழும் உறவினர்கள்
கதறி அழும் உறவினர்கள்

இதுகுறித்து நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பாலாஜியிடம் பேசினோம். ``பாலன் மயங்கி விழுந்ததும் ஆம்புலன்ஸ் வர தாமதமாகிடும் எனப் பதற்றத்தில் சக பணியாளர்கள் பேரூராட்சிக்குச் சொந்தமான பேட்டரி வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்தான் அமைச்சர் அந்த பேட்டரி வாகனத்தை பேரூராட்சிக்கு வழங்கினார். குப்பை அள்ள கொடுக்கப்பட்ட அந்த பேட்டரி வாகனம் பயன்படுத்தப்படாமலேயேதான் இருந்தது. அதைத்தான் அவசரத்திற்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர். மற்றபடி குப்பை இருந்த வாகனத்தில் பாலனை எடுத்துச் செல்லவில்லை. அவர் இறந்துவிட்டார் எனத் தெரிந்ததும் போஸ்ட்மார்டம் செய்ய ஈரோடு அல்லது பவானி அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் அதை அவர்களுடைய உறவினர்கள் விரும்பவில்லை. இறந்த உடலை 108 ஆம்புலன்ஸில் ஏற்ற மாட்டார்கள். அதனால் உடலை எடுத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இதற்கிடையே, இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு நிறைய பொதுமக்கள் கூடியதால், கொண்டு வந்த பேட்டரி வாகனத்திலேயே உறவினர்கள் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். மற்றபடி இந்தச் சம்பவத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை” என்றார். பாலனுடன் வேலை செய்த சக பணியாளர்களும் இதையே தான் சொல்கின்றனர்.

இதுகுறித்த உண்மையறிய பாலனின் மனைவி தங்கமணியைத் தொடர்கொண்டோம். உடல்நிலை சரியில்லாததால் அவரால் பேச முடியவில்லை. அதையடுத்து பாலனின் தங்கை வளர்மதி நம்மிடம் பேசினார். “இறக்குறதுக்கு முதல் நாள் ராத்திரி தலை வலிக்குது, உடம்பு சரியில்லைன்னு சொல்லியிருக்கார். அடுத்தநாள் வேலைக்குப் போனவர் திடீர்ன்னு இறந்துட்டாருன்னு சொல்லவும் எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. கூட வேலை பார்த்தவங்க பேட்டரி வண்டியிலயே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அங்க இறந்துட்டாருன்னு சொல்லியிருக்காங்க. நல்ல நிலைமையில இறந்து போனவருக்கு எதுக்கு போஸ்ட்மார்டம் செஞ்சிக்கிட்டுன்னு சொந்தக்காரங்க வேணாம்னு சொல்லிட்டாங்க. இறந்த உடலை ஆம்புலன்ஸ் வர வரைக்கும் ரோட்டுல வச்சிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். அதனால தான் அந்த பேட்டரி வண்டியிலயே திரும்ப வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டோம். மத்தபடி எங்களை யாரும் எந்தத் தொந்தரவும் செய்யலை. எங்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை” என்றார்.

`இந்த நேரத்தில் யாருக்கும் மரணம் நேரக் கூடாது' - முதியவரின் இறுதிச்சடங்குக்கு உதவிய கிராம மக்கள்

இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையைத் தெரியாதவர்கள்தான், சமூக வலைதளங்களில் தேவையில்லாத கற்பனைகளைக் கிளப்பி விட்டு வருகின்றனர். ‘பாலனின் இறப்பைத் தவிர வேறு எந்தச் சங்கடமும், மன வருத்தமும் இல்லை’ என அவர்களின் குடும்பத்தார் நம்மிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு