சங்கரன்கோவில்: நாடோடிகளிடம் சில்மிஷம் செய்த போலீஸ் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

மதுபோதையில் இருந்த போலீஸ் ஒருவர், அங்கிருந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். அதைத் தடுத்தவரை அவதூறாகப் பேசி அடித்ததால் பொதுமக்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தார்கள்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலிலுள்ள பேருந்து நிலையத்தில் பகல் நேரத்தில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் அந்த இடத்துக்குச் சென்றார்கள். அப்போது அங்கு கையில் லத்தியுடன் மஃப்டியில் இருந்த போலீஸ் ஒருவர், ஒரு பெண்ணின் தோள் மீது கை போட்டபடி ஏதோ பேசிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.

நாடோடி சமூகத்தினர் அங்கு ஊசி, பாசி விற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த பெண்ணின் தோள்மீது கைவைத்து காவலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்ட அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர், காவலரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மாற்றுத்திறனாளியான அந்த நபரை போலீஸ்காரர் தாக்கியிருக்கிறார்.
அத்துடன், பையிலிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டிய அந்தக் காவலர், நாடோடியினப் பெண்ணைத் தன்னோடு வருமாறு அழைத்திருக்கிறார். அதை எதிர்த்து கேட்ட மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கியதைப் பார்த்து ஆவேசமடைந்த பொதுமக்கள், அந்தக் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பொதுமக்களையும் அவர் மிரட்டியபோது, அவரது முகத்தில் அணிந்திருந்த மாஸ்கை அகற்றியிருக்கிறார்கள். அப்போது அந்த காவலர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அதனால் ஆத்திரமடைந்த மக்கள், அவரது கையைப் பின்புறமாகக் கட்டி தர்ம அடி கொடுத்தார்கள்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மணிமுத்தாறு ஆயுதப்படையில் பணியாற்றும் ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது மது போதையில் இது போன்று நடந்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். பின்னர் ஓடும் பேருந்தில் ஏறித் தப்பித்திருக்கிறார்.

அவர் பேருந்து நிலையத்தில் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்திருக்கிறார்கள். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருவதால், அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.