Published:Updated:

ரகசியமாய்... அவசரமாய்... நொய்யலில் கலக்கும் ரூ.230 கோடி!

நொய்யல் ஆற்றைப் புனரமைக்கும் திட்டம் குறித்த விரிவான கட்டுரை

னென்ன``தமிழகத்துக்குள் அமைதியாக அடியெடுத்துவைக்கும் காவிரி ஆறு, கரூரை கடக்கும்போது ஆவேசத்துடன் ஆர்ப்பரித்து பாய்கிறதே?!" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார்கள் சோழ மன்னர்கள். கொங்கு மண்டலத்திலிருந்து காவிரியில் கலக்கும் ஓர் ஆறு அதிக வேகத்துடன் வருகிறது. அதனால், காவிரியின் போக்கே மாறுகிறது என்று கண்டுபிடித்தனர். காவிரியின் போக்கை மாற்றிய அந்த ஆறு, நொய்யல். அப்படிப்பட்ட நொய்யலை, பெரு நிறுவனங்களும், பொறுப்பில்லா மக்களும், சுயநல அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு திணறடித்துக்கொண்டிருக்கின்றனர். நொய்யலில் கண்மூடித்தனமாக ஆக்கிரமிப்பு செய்தனர். சாயக்கழிவுகளை திறந்துவிட்டனர். பிளாஸ்டிக் கழிவுகளைக் குவித்தனர். காட்டாற்று வெள்ளத்துக்கு பெயர் பெற்ற நொய்யலில், கழிவு நுரைகளைப் பறக்கவிட்டு சூழலையும் மாசுபடுத்தினர். மணல் மாஃபியாக்கள் நொய்யல் மணலை சுரண்டிக்கொண்டேயிருக்கின்றனர்.

நொய்யல்
நொய்யல்
Vikatan

கடந்த 2018-ம் ஆண்டு நொய்யல் ஆற்றை மாசடையாமல் தடுக்க ரூ.150 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரண்டாண்டுகளாகியும் நொய்யல் மாசடைவதைத் தடுக்க முடியவில்லை. தற்போது, ரூ.230 கோடி மதிப்பில் நொய்யலின் 22 தடுப்பணைகள் பலப்படுத்துதல், 22 குளங்களை தூர்வாருதல் போன்ற பணிகள் செய்யப்படும் என தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக குளக்கரைகளை பலப்படுத்த கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதனால், கோவை குளங்களின் உயிர்ச்சூழல் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

சூழலியல் செயற்பாட்டாளர் மோகன்ராஜ், ``இவர்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. நொய்யலில் பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. ஆனால், தண்ணீரைச் சுத்திகரிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கழிவுநீர் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். சமீபத்தில் பெய்த மழைநீரைக்கூட சேமிக்க முடியவில்லை. நொய்யலில் என்ன மாதிரியான மீன்கள், பறவைகள் இருக்கின்றன, அங்கிருக்கும் செடி, கொடி வகைகள் என்னென்ன என்பதையெல்லாம் கண்டறிய வேண்டும். இப்படி அங்குள்ள உயிர்ச்சூழலைத் தெரிந்துகொண்டு பணிகளைச் செய்வது அவசியம். பல்லுயிர்ப் பெருக்கச் சட்டத்தின்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பல்லுயிர்ப் பெருக்க மேலாண்மைக்குழு அமைக்கப்பட வேண்டும். அவர்களின் ஊரில் என்னென்ன பணிகளுக்கு தேவையிருக்கிறது என்பதை அந்தக் குழுதான் சொல்ல வேண்டும். மேலும், ஒரு பணியை தொடங்குவதற்கு முன்னர் அந்தக் குழுவிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

நாட்டின் பல மாநிலங்களில் அந்த மோண்மைக்குழுவை அமைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் பெரும்பாலான இடங்களில் அந்தக் குழு அமைக்கப்படவில்லை. குளங்களுக்கு (Wetlands) மாவட்ட அளவில் கமிட்டிகள் உள்ளன. அவர்களிடமும் எந்தக் கருத்தும் கேட்கப்படவில்லை. இப்படி அந்தப் பகுதி மக்களிடம் கேட்காமல், அது குறித்து எதுவுமே தெரியாத கான்ட்ராக்டர்களிடம் பணியை விட்டால் அது எப்படி இருக்கும்... கொரோனா காலத்தில் அமைச்சர்கள், அதிகார அளவிலேயே பேசி முடித்துவிடுகின்றனர். இவ்வளவு அவசரமாகப் பணிகள் நடைபெறுவதைப் பார்க்கும்போது, அந்தப் பணத்தை சுரண்டுவதில்தான் இவர்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிகிறது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூலூர் அருகேயுள்ள அருகம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வாசுதேவன்,``எங்கள் பகுதியிலுள்ள பாசன வாய்க்கால் புதர் மண்டி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக அதைத் தூர்வாரவும் இல்லை. எங்கள் பகுதியில் மட்டுமே 380 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் அதை நம்பியுள்ளன. ராசிபாளையம் அணைக்கட்டிலிருந்து வாய்க்காலை முழுவதுமாகத் தூர்வாரினால் மட்டுமே நாங்கள் விவசாயம் செய்ய முடியும். இரண்டு ஆண்டுகளாக அதற்கு பல்வேறு வகையில் போராடிக்கொண்டிருக்கிறோம். நொய்யலை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 36,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

வாசுதேவன்
வாசுதேவன்

பெரும்பாலும் சாக்கடைத் தண்ணீர்தான் ஓடுகிறது. மழை பெய்யும்போது நல்ல தண்ணீர் வந்தாலும், அதைப் பயன்படுத்துவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. நொய்யல் பழையபடி விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், அதில் கலக்கும் கழிவுநீரைத் தடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், இது பொன் விளையும் பூமியாக மாறும். நொய்யலில் தண்ணீர் சரியாக இருந்தவரை நிலத்தடி நீரில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நொய்யலில் தண்ணீர் நிற்பதே பிரச்னையாகிவிட்டதால், இப்போது நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து, தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் பிரச்னைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் சொல்லியிருக்கிறோம். விரைவில் பிரச்னைக்குத் தீர்வு கொடுப்போம் என உறுதியளித்திருக்கிறார்கள்” என்றார்.

ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், ``நொய்யலைப் புனரமைக்க ஏதாவது திட்டம் இருக்கிறதா என ஓராண்டுக்கு முன்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தேன். ஆனால், `அப்படி எந்தத் திட்டமும் இல்லை’ என்று பதிலளித்தனர். திடீரென்று ரூ.230 கோடி ஒதுக்கி, `நொய்யலைப் புனரமைக்கிறோம்’ என்கின்றனர். இதற்காக இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் யாரிடமும் கருத்தும் கேட்கவில்லை. இந்தத் திட்டத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

திட்டத்தின் முழு விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருக்கிறேன். பதிலுக்காகக் காத்திருக்கிறேன். குளத்துக்கு நீர் வரும் வழி, வெளியே செல்லும் வழி மிகவும் முக்கியம். நொய்யலில் பெரும்பாலான இடங்களில் இது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. வாய்க்காலிலுள்ள அனைத்துப் பிரச்னைகளையும் சரிசெய்ய வேண்டும். அதுதான் நொய்யல் பிரச்னைக்குத் தீர்வைக் கொடுக்கும்’’ என்றார்.

பணிகள் எப்படி நடக்கின்றன என்பதை நொய்யலின் வழித்தடத்தில் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்தோம். கான்ட்ராக்டர்கள் பணியைத் தொடங்கிய சில வாரங்களிலேயே கோவையில் கனமழை கொட்டியது. இதில், பல இடங்களில் இவர்கள் கட்டிய கான்கிரீட் கட்டுமானங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பல இடங்கள் கான்ட்ராக்டர்களுக்கு சாதகமாக இருக்க, மழை பெய்தபோதும் மதகுகளைத் திறந்துவிட மறுத்ததாக உள்ளூர்வாசிகள் குமுறினர். ஆள் உயரத்துக்குப் பறந்துகொண்டிருந்த கழிவு நுரைகள் மூச்சுவிட அசௌகரியத்தை ஏற்படுத்தின.

நொய்யல் பணி
நொய்யல் பணி

ஆச்சான்குளம், பள்ளபாளையம்குளம், வெள்ளலூர்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் கரைகளை பலப்படுத்த கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடந்துவருகிறது. ஆச்சான்குளத்தில், கரைகளில் புதர்கள், புற்கள் வெட்டி வீசப்பட்டுவிட்டன. அங்கு வந்த ஒரு சிறு பறவை தனது வாழ்விடத்தைத் தேடி வட்டமடித்து, பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிய காட்சி வேதனையின் உச்சம்.

பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் பேசினோம். ``தடுப்பணைகளை பலப்படுத்துவது வரவேற்கத்தக்க விஷயம்தான். நொய்யலில் பல இடங்களில் தடுப்பணைகள் வலுவிழந்துதான் இருக்கின்றன. ஆனால், அது மட்டுமே பிரச்னையல்ல. மேற்குத் தொடர்ச்சிமலையில் உற்பத்தியாகும் நொய்யல், தனது பயணத்தைத் தொடங்கிய சில கி.மீ தூரத்திலேயே பிரச்னையையும் தொடங்கிவிடுகிறது. ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, கழிவுநீர் கலப்பு போன்றவை நொய்யலைக் கடுமையாக பாதிக்கின்றன. பல இடங்களில் வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டு, அவை சாலைகளாக மாறியுள்ளன. அவற்றையெல்லாம் ஆய்வு செய்து, நொய்யலின் பசுமைப் பரப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல, பறவைகள், பூச்சிகளுக்கு கரையிலுள்ள புதர்கள், புற்கள் அவசியம். நொய்யல் வழித்தடத்திலுள்ள அனைத்துக் கரைகளுமே பலமாகத்தான் இருக்கின்றன. அவற்றை பலப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே செய்தாலும், கரைகளில் கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைப்பதுதான் வழக்கம். அப்படிச் செய்தால், கற்கள் இடையே சற்று இடைவெளி இருக்கும்.

நொய்யல்
நொய்யல்

அதில் புற்கள், செடிகள் வளர பல்லுயிர்களுக்கு உதவியாக இருக்கும். கான்கிரீட் சுவரில் அதற்கு வாய்ப்பில்லை. மேலும், கான்கிரீட் சுவர் சில ஆண்டுகளிலேயே உடைந்துவிடும். கழிவு நீரைச் சுத்திகரித்து, நிலத்தடிக்குள் அதிக அழுத்தம் கொடுத்து அனுப்பினால் நிலத்தடி நீரை செறிவூட்ட முடியும். மலேசியா போன்ற நாடுகளில் கழிவுநீரை வீணாக்காமல் சுத்திகரித்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு நல்ல தண்ணீரைக்கூட கழிவுநீரைக் கலக்கி வீணடித்துவருகிறோம். நொய்யலின் மிகப்பெரிய பிரச்னையான கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றைச் சரிசெய்யாமல் செய்யும் எந்தப் பணியுமே கைகொடுக்காது. இந்தப் பணிகளுக்கான டெண்டர் மேலிடத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குச் சாதகமாகத்தான் பணிகள் நடக்கின்றன. கான்ட்ராக்டர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் ஓர் அதிகாரியை பணியிட மாற்றமும் செய்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில், கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, அதில் பலனடையலாம் என்பதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கிறது" என்றனர்.

பொதுப்பணித்துறை கோவை செயற்பொறியாளர் ராஜேந்திரன், ``நொய்யலின் மொத்த நீளத்தை மூன்றாகப் பிரித்து, பணிகளைச் செய்துவருகிறோம். இது நொய்யலை மீட்டெடுக்கும் திட்டமில்லை. விரிவாக்குதல், புனரமைத்தல், நவீனமயமாக்கல் ஆகியவைதான் திட்டத்தின் ஆணிவேர். ஏற்கெனவே பாதிப்படைந்த பகுதிகளைச் சரிசெய்து, இருக்கும் அமைப்பை பலப்படுத்துகிறோம். அதேநேரத்தில், சில இடங்களில் புதிய தடுப்பணைகளும் கட்டுகிறோம். நிறைய இடங்களில் மரம் நடுகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகள், தன்னார்வலர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டுத்தான் பணிகளைச் செய்துவருகிறோம். நொய்யலுக்கு இவ்வளவு பெரிய தொகை இதற்கு முன்பு ஒதுக்கியதில்லை. விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக அனைத்து மக்களுமே தங்களது கருத்துகளைச் சொல்ல முன்வரலாம்.

நொய்யல்
நொய்யல்

ஆக்கிரமிப்பு என்பது தனிப் பிரச்னை. அதற்கு வருவாய்த்துறை, குடிசை மாற்று வாரியம் போன்ற துறையினருடன் இணைந்து சட்டரீதியாகச் செயல்பட வேண்டும். அதேபோல கழிவுநீர் பிரச்னைக்கு, `நடந்தாய் வாழி காவிரி’ என்று ரூ.12,000 கோடி மதிப்பில் தமிழகம் தழுவிய ஒரு திட்டம் கொண்டுவரப்படுகிறது. அந்தத் திட்டத்தில் கழிவுநீர் பிரச்னை சரிசெய்யப்படும். இப்போதைய திட்டத்துக்கும், அந்தப் பிரச்னைகளுக்கும் சம்பந்தமில்லை. அந்தப் பணிகளை தனித்தனியாகத்தான் செய்ய வேண்டும். நான் பொதுப்பணித்துறையில் சூழலியல் பிரிவில் வேலை செய்தவன். இதில், சூழலுக்கு எதிராக எந்தப் பணியையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. மேலும், இது மத்திய அரசின் நிதியில் செய்யப்படும் திட்டம். இதில், ஏராளமான நடைமுறைகள் இருக்கின்றன. அந்த நடைமுறைகளையெல்லாம் கடந்துதான் பணிகளைச் செய்கிறோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு