Published:Updated:

`1 கோடி ரூபாயில் ஒரு ரூபாய்கூட செலவழிக்கவில்லை!'- செந்தில் பாலாஜியைக் கொதிக்கவைத்த `22 நாள்கள்'

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் வாங்குவதற்காக ரூ.60 லட்சத்தை ஒதுக்குவதாக அறிவித்தார். ஆனால், அதை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம், பிறகு அதை கேன்சல் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

"கொரோனா வைரஸ் பாதிப்பால், தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் வாங்க தொகுதி நிதியை ஒதுக்கினேன். ஆனால், அதைப் பயன்படுத்த தமிழக அரசுக்கு மனமில்லை. அந்த நிதியைப் பயன்படுத்தாதது ஏன்?" என்று தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் செந்தில் பாலாஜி
கட்சி அலுவலகத்தில் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தொற்று தடுப்பு சம்பந்தமான உபகரணங்களை வாங்க மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதி நிதியை ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

`80,000 ஏக்கர்...50,000 குடும்பங்கள்!' - அழுகும் வாழையால் தவிக்கும் விவசாயிகள்

அந்தவகையில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, தனது தொகுதி நிதியிலிருந்து, 13,71,878 ரூபாய் நிதியை ஒதுக்குவதாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பினார்.

உதவிகள் வழங்கும் செந்தில் பாலாஜி
உதவிகள் வழங்கும் செந்தில் பாலாஜி

இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் வாங்குவதற்காக ரூ.60 லட்சத்தை ஒதுக்குவதாக அறிவித்தார். ஆனால், அதை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம், பிறகு அதை கேன்சல் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், 'எனது தொகுதி நிதியை ஏன் பயன்படுத்தவில்லை' என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா தடுப்புப் பணிக்காக, எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கி, நிர்வாக அனுமதியை வழங்கினேன். ஆரம்பத்தில், நான் நிர்வாக அனுமதி கொடுத்த அந்த நிதியைப் பயன்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், லோக்கல் ஆளுங்கட்சிப் புள்ளி அதற்குத் தடை போட்டார். இதனால், 22 நாள்களாகிவிட்ட நிலையில், அதில் 1 ரூபாய்கூட செலவிடப்படவில்லை.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் வாங்க ஒதுக்கப்பட்ட ரூ.60 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி மறுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியை அந்தந்தத் தொகுதிக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரிதான் உள்ளது. பள்ளபட்டி, அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர்களும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு ஏப்ரல் 14 வரை முகக்கவசம், கிருமிநாசினி வழங்க ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் பயன்படுத்தப்படவில்லை. தற்போது தேதி 18 ஆகிவிட்டது. டெண்டர் விட்டிருந்தால்கூட, 15 நாள்கள்தான் ஆகும்.

உதவிகள் வழங்கும் செந்தில் பாலாஜி
உதவிகள் வழங்கும் செந்தில் பாலாஜி

அவசர டெண்டர் எனில் 7 நாள்கள் போதும். தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோர் முகக்கவசமின்றிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிதியைப் பயன்படுத்த அரசு மனமில்லாமல் உள்ளது. அதேபோல், பசியில் வாடுபவர்கள் போன் செய்தால் உணவளிக்கும் திட்டத்தில் 3,380 பேருக்கு உணவளித்தோம். அதனையும் லோக்கல் ஆளுங்கட்சிப் புள்ளி தடுத்து நிறுத்திவிட்டார்.

அரசாவது அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கலாம். அதேபோல், நோயாளிகளுக்கு தி.மு.க-வினர் ரத்தம் கொடுக்கும் முயற்சியை ஆரம்பித்தோம். அதற்கும் தடை போட்டுவிட்டார்கள். தற்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் மக்களுக்கு உதவிகள் வழங்க முடிவு செய்தோம். அதன்படி, கோடங்கிபட்டி பகுதியில் 12 வகையான ரூ.550 மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை வீடு, வீடாகச் சென்று வழங்கினோம். மேலும், பொதுமக்கள் போன் செய்தால் கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் மளிகைப் பொருள்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். ஆளுங்கட்சியினர் என்ன முட்டுக்கட்டைப் போட்டாலும், சட்டத்தின் உதவியோடு பொதுமக்களுக்கு உதவிக்கொண்டே இருப்போம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு