Published:Updated:

`ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து நபர்கள்!' - கொரோனா பரிசோதனைக்காக 7 பேர் அனுமதி

தாய்லாந்து நாட்டினரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள்
தாய்லாந்து நாட்டினரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள்

தாய்லாந்திலிருந்து வந்த 7 பேரும், கடந்த ஒருவார காலமாக ஈரோட்டில் யாருக்கும் தெரியாமல் தங்கியிருந்துள்ளனர்.

கோவை விமான நிலையத்திலிருந்து, நேற்று தாய்லாந்து நாட்டுக்குக் கிளம்ப இரண்டு பேர் தயாராக இருந்திருக்கின்றனர். விமான நிலையத்தில் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அதில் ஒருவருக்குக் காய்ச்சல் இருந்தது தெரியவந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலாக இருக்கலாம் எனக்கருதி உடனே காய்ச்சல் கண்ட நபரையும், அவருடன் வந்த நண்பரையும் அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கின்றனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், `எங்களுடன் தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த 5 பேர் இன்னும் ஈரோடு அருகே உள்ள கொல்லம்பாளையத்தில்தான் தங்கியிருக்கின்றனர்’ எனக் கூறியிருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த இவர்கள் எப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் வெளியே நடமாடி வருகின்றனர் என விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் திகைத்துப் போயிருக்கின்றனர். உடனே, `ஈரோட்டில் உள்ள தாய்லாந்து நாட்டினர் ஐந்து பேரையும் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதியுங்கள்’ என ஈரோடு போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். அதனடிப்படையில் ஈரோடு தாசில்தாரர், ஆர்.டி.ஓ, சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த இடத்திற்கு நேற்றிரவு விரைந்திருக்கின்றனர். 5 பேரிடம் விசாரணை செய்து, உடனடியான ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு வார்டில் ஐந்து பேரும் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.`ஐந்து பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த முடிவுகள் வரும் வரை இந்த ஐந்து பேரும் தனிவார்டில் வைத்துக் கண்காணிக்கப்படுவர்’ என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டினரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள்
தாய்லாந்து நாட்டினரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள்

ஏற்கெனவே பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவமனையில் 7 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைகளுக்குப் பின்னர் எவ்விதச் சிக்கலும் இல்லை என வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு