`பா.ஜ.க தலைமையகம்!’ - மும்பை அமலாக்கத்துறை அலுவலகம் முன் பேனர் வைத்த சிவசேனா

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் தலைவர்கள்மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற மத்திய அரசுத் துறைகளை அக்கட்சி ஏவிவருவதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
மும்பையில் அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்துக்கு வெளியே ``பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையகம்" என்று சிவசேனா கட்சித் தொண்டர்கள் பேனர் வைத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணமோசடி வழக்கு தொடர்பாக, சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சம்மன் வந்த அடுத்த தினமே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியும், உடல்நிலை காரணமாக விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் வர்ஷாவுக்கு மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த சம்மன் குறித்து பதிலளித்த சிவசேனா மாநிலங்களவை எம்.பி-யும், தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், ``நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. ஒரு வீட்டின் பெண்ணைக் குறிவைப்பது கோழைத்தனம். அமலாக்கத் துறைக்கு சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அவற்றைச் சரியான நேரத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். இதற்கெல்லாம் சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``கடந்த ஒரு வருடத்தில் சரத் பவார், ஏக்நாத் கட்ஸே, பிரதாப் சர்நாயக் போன்ற முக்கியமான தலைவர்களுக்கும் சம்மன் வந்திருக்கிறது. இப்போது எனக்கும் வந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் முக்கியப் பங்காற்றுபவர்கள். இது வெறும் காகிதம்தான், வேறெதுவும் இல்லை" என்று பேசினார்.
``அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டவை. நாங்கள் பயப்படவில்லை. இந்த அரசு நிலையானது" என மகாராஷ்டிரா அமைச்சரும், அம்மாநில முதல்வரின் மகனுமான ஆதித்யா தாக்கரே பேசியிருக்கிறார். மேலும் மத்திய அரசின் வருமான வரித்துறை, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை போன்றவற்றை பா.ஜ.க ஆட்சியில் இல்லாத அல்லாத மாநிலங்களின் தலைவர்களின் மீது அரசியல் வெறுப்புக்காக பா.ஜ.க பயன்படுத்திவருவதாகவும் சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.