2021-ம் ஆண்டு தொற்றுநோயின் பரவலைக் கருத்தில்கொண்டு, பாதுகாப்பு கருதி பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். தொற்றுநோயின் பரவல் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டபோதும் பலர் பள்ளிக்கு வராததால், இடைநிற்றலைக் கண்டறிந்து மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட சமக்ரா ஷிக்ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan) அமைப்பு ஆய்வுகளை நடத்தியது. அதன்படி இடைநின்ற சுமார் 1.89 லட்ச குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இன்னும் 16,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பவில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால், இந்த ஆய்வில் திடுக்கிடும் பல தகவல்கள் தெரிய வந்தன. கொரோனா காலத்தில் பல பெற்றோரும், பள்ளி சென்று கொண்டிருந்த தங்கள் குழந்தைகளுக்கு அமைதியாக திருமணத்தை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் பள்ளி செல்லும் 511 மாணவிகளுக்குத் திருமணம் நடந்துள்ளது.
அதில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவிகளில் 2 பேருக்கும், 11-ம் வகுப்பு பயின்று வந்த மாணவிகளில் 417 பேருக்கும், 10-ம் வகுப்பு பயின்று வந்த மாணவிகளில் 45 பேருக்கும், 9 -ம் வகுப்பு பயின்று வந்த 37 மாணவிகளுக்கும், 8-ம் வகுப்பு பயின்றுவந்த 10 மாணவிகளுக்கும் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பெருந்தொற்றுக் காலத்தில், வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்வது பாதுகாப்பாக இருக்காது எனக் கருதி, சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.