`இது, கொரோனா நோயாளி பயன்படுத்திய படுக்கை!' - பதறவைக்கும் புதுவை அரசு மருத்துவமனை; அதிர்ச்சி வீடியோ

புதுச்சேரி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றுள்ளவர்களையும், சந்தேகிப்பவர்களையும் ஒரே வார்டில் தங்கவைப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரியில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது, நான்காவது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது.
கொரோனா நிவாரணத் தொகையாக 995 கோடி ரூபாய் தரவேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்ட முதல்வர் நாராயணசாமி, உடனடியாக ரூ.300 கோடியைத் தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால் கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்களை வாங்குவதற்குக்கூட போதுமான நிதி இல்லாமல் தவித்துவருகிறது புதுச்சேரி அரசு.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் சந்தேகிப்பவர்களை தனிமைப்படுத்துவதற்காக, கதிர்காமத்தில் இயங்கிவரும் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றியது அரசு. ஆனால், கொரோனா தொற்று சிகிச்சைக்குத் தேவையான பாதுகாப்புக் கவச உடை, முகக்கவசம் உள்ளிட்ட பொருள்கள் கிடைப்பதில்லை என்று அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் கொரோனா பிரிவில் எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும்படியாக உள்ளவர்கள் இருக்கும் வார்டில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில், குடிநீர் கேன்களுக்கு அருகில் கொரோனா நோயாளிகள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பயன்படுத்திய மருத்துவக் கழிவுகள் அடங்கிய பைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த வார்டில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால், அவர் இருந்த படுக்கையை சுத்தம் செய்யாத நிலையில், அதே படுக்கைக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகப்படும் வேறு ஒருவர் உள்ளே வருகிறார். அவரிடம் அந்த வார்டில் இருந்தவர்கள், `கொரோனா உறுதி செய்யப்பட்டவரோட படுக்கையைத்தான் சுத்தம் செய்யாம உங்களுக்கு குடுத்துருக்காங்க. நீங்க கேக்க மாட்டீங்களா?' என்று கேட்க, பயத்தில் உறைந்து பேந்தப் பேந்த விழிக்கிறார் அந்த நபர்.

அடுத்தக் காட்சியில், நோயாளிகளுக்கு கொடுக்க வைத்திருக்கும் வாட்டர் கேன்களைச் சுற்றி குப்பைபோல போடப்பட்டிருக்கும் கொரோனா கழிவுகளைக் காட்டும் நோயாளிகள், ”கொரோனாவை குணப்படுத்திக்கொள்ள இங்கு வந்தால், வைரஸுடன்தான் வெளியே செல்வோம் போல. இங்கே பாருங்கள். இங்கிருந்த ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு கூட்டிக்கிட்டுப் போய் அரைமணி நேரம்கூட ஆகவில்லை. அவருக்கு உபயோகபடுத்தப்பட்ட போர்வைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் அப்படியே போடப்பட்டிருக்கின்றன” என்கின்றனர்.
மற்றொரு காட்சியில், முழு பாதுகாப்புக் கவசம் அணிந்து வந்த ஒரு மருத்துவரிடம், ”கொரோனா இருப்பவர்களையும் எங்களுடன் தங்கவைத்தால் எங்களுக்கும் கொரோனா வராதா? அவர்களை ஏன் எங்களுடன் தங்கவைக்கிறீர்கள்... நாங்கள் இருக்கும் வார்டைக் கூட சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்புகின்றனர் அந்த வார்டில் இருப்பவர்கள்.
அதற்கு, “எங்களிடம் போதுமான கவச உடைகள் இல்லை. தூய்மைப் பணியாளர்களும் அந்த பாதுகாப்புக் கவச உடைகளைக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கவச உடை கொடுக்க முடியாததால் தூய்மைப் பணிக்கு வரமறுக்கிறார்கள். ஒரு கவச உடையின் விலை ரூ.1,800. ஆனால், எங்களிடம் போதுமான கவச உடைகள் இல்லை. மத்திய அரசு அனைத்து நிதிகளையும் ஜிப்மர் மருத்துவமனைக்கு மட்டுமே கொடுக்கிறது” என்கிறார் அவர்.
ஒட்டுமொத்த புதுச்சேரியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த வீடியா காட்சிகள் குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன் குமாரை பலமுறை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை ஏற்காததால் குறுந்தகவல் அனுப்பினோம். அதற்கு அவர், `மீட்டிங்கில் இருக்கிறேன்' என்று மட்டும் பதில் அனுப்பினார்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லும் மருத்துவத் துறையே அதனைக் கடைப்பிடிக்காமல் இருப்பது புதுவை மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.