Published:Updated:

`கணக்கில் வராத ரூ.362 கோடி; முடக்கப்பட்ட பங்குகள்' - சித்தார்த்தா முடிவுக்கு வருமானவரித்துறை காரணமா?

சித்தார்த்தா
சித்தார்த்தா

வருமானவரித்துறை மூத்த அதிகாரியின் மூலமும் நான் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அவரால் நம்முடைய நிறுவனத்தின் பங்குகள் 2 தடவை முடக்கப்பட்டன.

இந்தியாவின் மிகப்பெரிய காஃபி செயின் நிறுவனமான Cafe Coffee Day-ன் நிறுவனரும் ஆசியாவின் மிகப்பெரிய காபி தோட்டத்துக்குச் சொந்தக்காரருமான வி.ஜி.சித்தார்த்தா உடல் நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது மறைவுக்கு முன் அவர் எழுதிய கடிதத்தை வைத்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. இறப்பதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், ``37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையில் இருந்தபோதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன். ஒரு தனியார் நிறுவன பார்ட்னர், நான் விற்ற பங்குகளை மீண்டும் வாங்கும்படி எனக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்.

`கணக்கில் வராத ரூ.362 கோடி; முடக்கப்பட்ட பங்குகள்' - சித்தார்த்தா முடிவுக்கு வருமானவரித்துறை காரணமா?

நான் யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை. ஒரு தொழிலதிபராக நான் தோல்வியடைந்துவிட்டேன். ஒரு நாள் அனைவரும் என் நிலையைப் புரிந்துகொண்டு எனக்கு மன்னிப்பு வழங்குவீர்கள்" என்று உருக்கமாக எழுதியிருந்தவர், ``இதற்கு முன் இருந்த வருமானவரித்துறை மூத்த அதிகாரியின் மூலமும் நான் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அவரால் நம்முடைய நிறுவனத்தின் பங்குகள் 2 தடவை முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து காஃபி டே நிறுவனத்தின் பங்குகளையும் கையகப்படுத்துகிறார்கள். வருமானவரித்துறை கூறியதை செலுத்திய பிறகும் நமது நிறுவன பங்குகளைத் தொடர்ந்து முடக்கிவிட்டனர். இது நியாயமற்றது. இதனால்தான் நமது நிறுவனங்களில் கடும் நிதி நெருக்கடி உருவாகிவிட்டது'' என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதில்தான் தற்போது சர்ச்சை வெடிக்க ஆரம்பித்துள்ளது. சித்தார்த்தாவின் மறைவுக்கு வருமானவரித்துறையும் காரணம் எனக் காங்கிரஸ் கட்சி உட்பட பலர் குரல் கொடுக்க சர்ச்சை பெரிதாக மாறியது. கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் Coffee Day-யின் 25 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. இதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதை வைத்துதான் வருமானவரித்துறை சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகக் குற்றம் சுமத்தினர். ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் லைவ் மிண்டு ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ``இது மிகவும் நியாயமற்ற குற்றச்சாட்டு. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலேயே ரெய்டு நடத்தப்பட்டது. அதன்படி வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.

`கணக்கில் வராத ரூ.362 கோடி; முடக்கப்பட்ட பங்குகள்' - சித்தார்த்தா முடிவுக்கு வருமானவரித்துறை காரணமா?
கம்யூனிச தலைவராக நினைத்தவர் கஃபே காபி டே ஓனர்... சித்தார்த்தா பயோ! #VGSiddhartha #CafeCoffeeDay

மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் தனது பங்குகளை விற்றதன் மூலம் 3,200 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய சித்தார்த்தா 300 கோடி ரூபாய் வரிப்பணம் செலுத்த வேண்டிய நிலையில் வெறும் 46 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தினார். மேலும் 362.11 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாததையும், 118.02 கோடி ரூபாய் கணக்கில் காட்டாமல் கையிருப்பு வைத்திருந்ததையும் சித்தார்த்தாவே ஒப்புக்கொண்டுள்ளார். இந்த ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையில்கூட, சித்தார்த்தா சுய மதிப்பீட்டு வரியை 14.5 கோடியை செலுத்தவில்லை. அனுமதிக்கப்பட்ட வருமானத்தை காஃபி டே என்டர்பிரைசஸ் லிமிடெட் தனது பங்கில் வழங்கவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளனர். கூடவே சித்தார்த்தா சார்பில் வெளியாகியுள்ள கடிதத்தில் உள்ளது அவரது கையெழுத்து இல்லை என்றும், வருடாந்தர அறிக்கையில் அவர் இட்ட கையெழுத்துக்கும் கடிதத்தில் உள்ள கையெழுத்தில் வேறுபாடு இருக்கிறது என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் புதிய குண்டை வீசியுள்ளனர். இதனால் இந்த விவகாரம் தற்போது மேலும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

source - livemint

அடுத்த கட்டுரைக்கு