சிவகங்கை: `பதியும்போதே வாங்குனாங்க; இப்பவும் பணம் கேட்டா எப்படி?’- கொதித்த மக்கள்

சிவகங்கையில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிகாரிகள் பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூகநலத்துறையின் மூலம் படித்த ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவி மற்றும் எட்டு கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ நாகராஜன், முன்னாள் எம்.பி செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் 2,230 பயனாளிகளுக்கு ரூ.17,34,92,302 மதிப்பிலான தங்கக் காசு மற்றும் காசோலைகளை வழங்கினார்.

மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த பயனாளிகள் தங்கக் காசுகளை வாங்கிச் சென்றனர். அப்போது அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசுகையில்,``அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், வறுமையிலுள்ள குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தனி கவனம் செலுத்தித் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம். கருவறை முதல் வாழ்நாள் இறுதி வரை ஒவ்வொருவரும் சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என தமிழக அரசு பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது’’ என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய காசோலைகளைப் பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்டு அலைகழிப்பதாகப் பயனாளிகள் குற்றம்சாட்டி சமுகநலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பயனாளிகளிடம் இது குறித்துக் கேட்டபோது, ``அரசு வழங்கும் நலத்திட்டத்துக்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும்? திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் பணம் வழங்கப்படுகிறது. `கொடிநாள் காசு கொடுங்கள்’ என்று 2,000 முதல் 5,000 ரூபாய் வரை கேட்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு பதியும்போதே பணம் வாங்கினார்கள். தற்போதும் மீண்டும் பணம் கேட்பது நியாயமா?’’ எனக் கொந்தளித்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டியிடம் கேட்டபோது, ``பயனாளிகளிடம் பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அவ்வாறு பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.